40 ஆண்டுக்கு பின் நனவானது ஓகேனக்கல் குடிநீர் திட்டம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: 40 ஆண்டுக்கும் மேலாக கனவாகவே இருந்து வந்த ஓகேனக்கல் குடிநீர் திட்டத்துக்கு முதல்வர் கருணாநிதி இன்று அடிக்கல் நாட்டினார்.

அதே போல பெங்களூர் அருகே உள்ள ஓசூரில் ரூ. 500 கோடி செலவில் சாப்ட்வேர் பார்க் அமைப்பதற்கான அடிக்கல்லையும் நாட்டுகிறார்.

தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் ஆழ்துளை கிணறுகள் மூலம் கிடைக்கும் நிலத்தடி நீரில் புளோரைடு ரசாயனம் மிக அதிகமாக உள்ளது.

இதனால் இப் பகுதி மக்கள் பல், எலும்பு, தோல் சம்பந்தமான நோய்களால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதையடுத்து ஓகேனக்கல் அருவிப் பகுதியிலிருந்து தண்ணீர் எடுத்து அதை குழாய்கள் மூலமாக இந்த மாவட்டங்களில் வினியோகிக்கவும், சென்னை வரை இந்த நீரை கொண்டு செல்லவும் கூட்டுக் குடிநீர் திட்டம் போடப்பட்டது (இப்போது சென்னை கொண்டு செல்லும் திட்டம் இல்லை).

கடந்த 1965ம் ஆண்டு பெருந்தலைவர் காமராஜர் முதல்வராக இருந்தபோது இந்தத் திட்டம் உருவாக்கப்பட்டது. இத்திட்டத்திற்கான அப்போதைய திட்ட மதிப்பீடு ரூ. 25 கோடி என நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் திட்டம் கைகூடி வரவில்லை.

அன்று முடங்கிய இந்தத் திட்டம் கிட்டத்தட்ட 40 ஆண்டுகளுக்கும் மேலாக கனவாகவே இருந்து வந்தது. இம்முறை திமுக ஆட்சிக்கு வந்து ஸ்டாலின் உள்ளாட்சித்துறை அமைச்சரான பின் இத் திட்டத்தை நிறைவேற்றும் தீவிர முயற்சிகளில் இறங்கினார்.

ஜப்பானிய சர்வதேச ஒத்துழைப்பு வங்கியிடம் உதவி கோரப்பட்டது. அந்த வங்கி அதிகாரிகளும் தமிழகம் வந்து ஆய்வு நடத்திச் சென்றனர். இதையடுத்து அதிகாரிகளுடன் ஜப்பான் விரைந்த ஸ்டாலின் அந் நாட்டு நிதியுதவியைப் பெற்று வந்தார்.

இதையடுத்து இத்திட்டத்திற்கு புத்துயிர் கிடைத்து, முதல்வர் கருணாநிதி இன்று அடிக்கல் நாட்டினார்.

ஜப்பான் வங்கி திட்டத்திற்கான செலவில் 85 சதவீதத்தைத் தர ஒப்புக் கொண்டுள்ளது. அதன்படி ரூ. 1,141 கோடி கடனுதவியை 1.25 சதவீத வட்டியுடன் ஜப்பான் வங்கி வழங்கும். திட்டத்திற்கான மொத்த செலவு ரூ. 1,330 கோடியாகும். மீதித் தொகையை தமிழக அரசு செலவிடும்.

இந்தத் திட்டம் நிறைவேறினால் இரு மாவட்ட மக்களும் பாதுகாக்கப்பட்ட குடிநீரைத் தங்கு தடையின்றி பெறுவார்கள்.

மொத்தம் 3 நகராட்சிகள், 17 பஞ்சாயத்துக்கள், 18 பேரூராட்சிகளைச் சேர்ந்த 30 லட்சம் மக்கள் பயன் பெறவுள்ளனர்.

இந்தத் திட்ட அடிக்கல் நாட்டு விழா தர்மபுரியில் அரசு கலைக் கல்லூரி வளாகத்தில் இன்று நடந்தது. விழாவில் உள்ளாட்சித் துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கினார். மேலும் பல்வேறு நலத் திட்ட உதவிகளையும் முதல்வர் விழாவின்போது வழங்கினார்.

திட்டம் திணறிய கதை!:

காமராஜர் காலத்தில் உருவாக்கப்பட்ட இந்தத் திட்டம் பின்னர் 1986ம் ஆண்டு அமைந்த எம்.ஜி.ஆர் ஆட்சியில், மீண்டும் புதுப்பிக்கப்பட்டது. காமராஜர் திட்டம் என இதற்கு எம்.ஜி.ஆர். பெயர் சூட்டினார். இந்தத் திட்டத்தின் கீழ் தர்மபுரி, திருவண்ணாமலை, வேலூர், சேலம், கடலூர் மாவட்டங்கள் இணைக்கப்பட்டன. திட்டச் செலவு ரூ. 110 கோடி மதிப்பிடப்பட்டது.

அந்த முறையும் இந்தத் திட்டத்திற்கு உயிர் கிடைக்கவில்லை. இதையடுத்து 1989ம் ஆண்டு வந்த திமுக ஆட்சியில் மீண்டும் இந்தத் திட்டம் தூசி தட்டி எடுக்கப்பட்டது. திட்டச் செலவு அப்போது ரூ. 175 கோடியாக உயர்ந்திருந்தது. அப்போதும் அது நிறைவேறவில்லை.

பின்னர் 1994ம் ஆண்டு ஜெயலலிதா ஆட்சிக்காலத்தில் மீண்டும் இத்திட்டம் பற்றி பேசப்பட்டது. அப்போது திட்டச் செலவு ரூ. 450 கோடியாக உயர்ந்தது. அந்த முறையும் அது நிறைவேறவில்லை.

இதையடுத்து 1997ம் ஆண்டு மீண்டும் திமுக ஆட்சிக்கு வந்தபோது ஜப்பானைச் சேர்ந்த ஓவர்சீஸ் எக்கானமிக் கம்யூனிட்டி பெடரேஷனை அணுகி நிதியதவி கோரப்பட்டது. அதன் ஒப்புதலும் கிடைத்தது.

ஆனால் அப்போது காவிரிப் பிரச்சினை விஸ்வரூபமெடுத்தது. கர்நாடகத்தில் நிலவிய பதட்ட நிலை மற்றும் காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்புக்குப் பின்னரே இந்தத் திட்டத்தை நிறைவேற்றலாம் என்று கூறப்பட்டதால், மீண்டும் திட்டம் கைவிடப்பட்டது.

பின்னர் 2003ம் ஆண்டு மீண்டும் அதிமுக ஆட்சியில் இத்திட்டம் குறித்து பேசப்பட்டது. ரூ. 1008 கோடி மதீப்பீட்டில் இத்திட்டத்தை நிறைவேற்ற அதிமுக அரசு தீர்மானித்தது. ஆனால் வழக்கம் போல நடக்கவில்லை.

இந் நிலையில் இம்முறை ஸ்டாலினிடம் உள்ளாட்சித்துறையை ஒப்படைத்த முதல்வர் கருணாநிதி இந்தத் திட்டத்தை நிறைவேற்றும் பொறுப்பையும் சேர்த்தே தந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இத் திட்டத்தை நிறைவேற்ற தமிழக அரசுக்கு மத்திய காங்கிரஸ் அரசும் முழுமையாக உதவி புரிந்தது. ஜப்பான் வங்கியிடம் மத்திய அரசும் வலியுறுத்தியதால் இந்த நிதியுதவி கிடைத்துள்ளது.

இதைத் தொடர்ந்து கிருஷ்ணகிரி செல்லும் கருணாநிதி அங்கு ரூ.10 கோடி செலவில் புதிதாக கட்டப்பட்டுள்ள கலெக்டர் அலுவலக வளாகத்தை திறந்து வைக்கிறார்.

ஒசூரில் சாப்ட்வேர் பார்க்:

மேலும் ரூ.63.4 கோடி செலவில் கட்டப்பட்ட புதிய பஸ் நிலையத்தையும் திறந்து, ஓசூரில் ரூ. 500 கோடி செலவில் தகவல் தொழில்நுட்ப பூங்கா அமைப்பதற்கான அடிக்கல்லையும் நாட்டுகிறார்.

கருணாநிதியின் வருகையையொட்டி தர்மபுரி, கிருஷ்ணகிரி நகரங்கள் விழாக்கோலம் பூண்டுள்ளன. எங்கும் திமுக கட்சி கொடிகள், தோரணங்கள், அலங்கார வளைவுகள், வரவேற்பு பேனர்கள் ஜொலிக்கின்றன.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+