'தப்பி வந்தார்' தாசரி மகன்-கடத்தியது மனைவி?

Subscribe to Oneindia Tamil

Prabu and Suseela
சென்னை: கடத்தப்பட்ட மத்திய அமைச்சரும், பிரபல திரைப்படத் தயாரிப்பாளருமான தாசரி நாராயண ராவின் மகன் தாசரி பிரபு கடத்தல்காரர்களின் பிடியிலிருந்து தப்பியுள்ளார்.

சென்னை வந்து சேர்ந்த அவர், தனது மனைவி நடத்திய நாடகம் இது என்றும் பரபரப்புத் தகவலை வெளியிட்டுள்ளார்.

தாசரி நாராயணன ராவின் மகன் தாசரி பிரபு. இவர் நேற்று தனது மனைவி சுசீலா, மாமியார் சாவித்ரம்மா மற்றும் மகனுடன் சித்தூரில் உள்ள தனது மைத்துனரைப் பார்க்க வந்தார். சித்தூர் வந்த அவர்கள் அங்குள்ள விடுதியில் தங்கினர்.

அப்போது அங்கு 6 பேர் வந்தனர். முக்கியப் பிரச்சினை ஒன்று குறித்து தாசரி பிரபுவிடம் விவாதிக்க வேண்டும் என்று கூறியுள்ளனர். இதையடுத்து தாசரி பிரபு அறையை விட்டு வெளியே வந்துள்ளார்.

இதையடுத்து அக்கும்பல், தாசரி பிரபுவை வலுக்கட்டாயமாக அங்கிருந்து தூக்கிச் சென்றது. பின்னர் வெளியே காத்திருந்த ஒரு காரில் வேகமாக ஏற்றிக் கொண்டு அங்கிருந்து கிளம்பி விட்டனர்.

அவரது கூக்குரலைக் கேட்ட குடும்பத்தினர் ஓடி வந்து பிரபுவை காப்பாற்ற முயன்றனர். ஆனால் அதற்குள் கார் பறந்து விட்டது.

இருப்பினும் விடுதி ஊழியர்கள் வேகமாக செயல்பட்டு ஒரு கடத்தல்காரனை பிடித்து விட்டனர். அவனது பெயர் மஸ்த்ரி மணி. சித்தூரைச் சேர்ந்தவன். அவனை பின்னர் போலீஸாரிடம் ஒப்படைத்தனர்.

போலீஸார் வழக்குப் பதிவு செய்து பிரபுவைத் தேடும் பணியில் ஈடுபட்டனர்.

தப்பி வந்தார்-மனைவி மீது புகார்:

இந்த நிலையில் தாசரி பிரபு இன்று கடத்தல்காரர்களின் பிடியிலிருந்து தப்பி சென்னை வந்து சேர்ந்தார்.

பின்னர் தெலுங்கு டிவி சானல் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில் தனது மனைவி சுசீலா நடத்திய நாடகம் தான் இந்த கடத்தல் என குற்றம் சாட்டினார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், நான், எனது மனைவி, மாமியார், மகனுடன் சித்தூரில் உள்ள எனது மனைவியின் சகோதரரைப் பார்க்க சென்றிருந்தோம். மைத்துனருக்கு உடல் நலம் சரியில்லை என்பதால் பார்க்கச் சென்றோம்.

அப்போது 6 பேர் கொண்ட ஒரு கும்பல் என்னுடன் முக்கியப் பிரச்சினை தொடர்பாக பேச வேண்டும் என்று கூறி அணுகியது. நானும் எனது அறையை விட்டு வெளியே வந்தேன். அப்போது அவர்கள் என்னை வலுக்கட்டாயமாக கடத்திச் சென்றனர்.

சித்தூரில் உள்ள ஒரு வீட்டுக்கு என்னைக் கொண்டு சென்று அடைத்தனர். அங்கிருந்து நான் தப்பி சென்னைக்கு வந்து விட்டேன்.

இது எனது மனைவி சுசீலா நடத்திய நாடகம். சொத்துப் பிரச்சினை காரணமாக தொடர்ந்து அவர் என்னை துன்புறுத்தி வந்தார். இப்போது ஆட்களை வைத்து என்னைக் கடத்தியுள்ளார்.

விரைவில் ஹைதராபாத் சென்று அங்கு எனது மனைவியை விவாகரத்து செய்ய மனு தாக்கல் செய்யவுள்ளேன் என்றார் பிரபு.

இதற்கிடையே தன்னையும் கணவரையும் பி்ரிக்க தாசரி குடும்பம் முயன்று வருவதாகவும், இந்தக் கடத்தல் கூட தாசரியால் அரங்கேற்றப்பட்ட நாடகம் என்றும் சுசீலா தரப்பு கூறியுள்ளது.

இது மனைவி நடத்திய நாடகமா அல்லது அவரை விவாகரத்து செய்ய மகனுடன் சேர்ந்து தாசரி குடும்பமே நடத்திய நாடகமா என்று தெரியவில்லை.

பெரும் செல்வந்தரான தாசரிக்கு ஆந்திராவிலும் தமிழகத்திலும் ஏராளமான சொத்துக்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+