400 நாள் குளிக்காமல் ஒரு போராட்டம்!
ஜாம்ஷெட்பூர்: ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் அர்ஜூன் முன்டா தன்னை வந்து பார்க்கக் கோரி, 474 நாட்கள் குளிக்காமல் இருந்து நூதனப் போராட்டம் நடத்தியுள்ளார் கிராமத்து இளைஞர் ஒருவர்.
ஜார்க்கண்ட் மாநிலம் ஜாம்ஷெட்பூர் அருகே உள்ள நாராயண்திஹ் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெகதீஷ் மஹதோ (30). இவர் முன்னாள் முதல்வர் அர்ஜூன் முன்டாவின் தீவிர ஆதரவாளர்.
பாஜகவின் அர்ஜூன் முன்டா ஆட்சி கவிழ்ந்து, மது கோடா தலைமையில் காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமைந்ததால் மஹதோ பெரும் கவலை அடைந்தார். மது கோடா ஆட்சியை விரட்டியடிக்க அர்ஜூன் முன்டா பெரும் போராட்டத்தில் இறங்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் நூதனப் போராட்டம் ஒன்றை தொடங்கினார்.
அதாவது, அர்ஜூன் முன்டா கிராமத்துக்கு வந்து தன்னை சந்திக்க வேண்டும். கோடா அரசை விரட்டியடிக்க உறுதி கூற வேண்டும், அதற்காக தீவிரமாக உழைக்க வேண்டும். இந்த உறுதிமொழிகளை அர்ஜூன் முன்டா தன்னை வந்து நேரில் சந்தித்து உறுதியளிக்கும் வரை குளிக்காமல், சாப்பிடாமல் இருப்பதுதான் ஜெகதீஷ் மஹதோவின் நூதனப் போராட்டம்.
சொன்னபடியே தனது போராட்டத்ைதயும் தொடங்கினார். ஆனால் 17வது நாளிலேயே அவரது உடல் நிலை மோசமடைந்தது. இதையடுத்து குடும்பத்தினரும், உறவினர்களும் உண்ணாவிரதத்தைக் கைவிடக் கோரினர். இதையடுத்து அதை ஏற்று உண்ணாவிரதத்தை விட்டார் மஹதோ.
இருப்பினும் குளிப்பதில்லை என்ற முடிவிலிருந்து அவர் பின்வாங்கவில்லை. தொடர்ந்து குளிக்காமல் இருந்து வந்தார். இப்படியாக மஹதோ தொடங்கிய போராட்டம் 474 நாட்களைத் தொட்ட போதுதான் அவரது பெயர் ஜார்க்கண்ட் முழுவதும் பரபரப்பாக அடிபடத் தொடங்கியது.
முன்டாவின் காதுகளுக்கும் இந்த விஷயம் கொண்டு செல்லப்பட்டது. அவரை வந்து சந்தித்த மஹதோவின் கிராமத்துக்காரர்கள் அவசியம் நீங்கள் கிராமத்துக்கு வந்து மஹதோவிடம் எடுத்துச் சொல்லி போராட்டத்திற்கு முடிவு கட்ட வேண்டும். அவரைக் குளிக்கச் சொல்ல வேண்டும் என்று கோரினர்.
முன்டாவும் ஆச்சரியப்பட்டு மஹதோவின் கிராமத்துக்கு விரைந்தார். அங்கு மஹதோவை சந்தித்து அவரது போராட்டத்தைப் பாராட்டினார். உங்களது உறுதியைப் பார்த்து நான் மெய்சிலிர்த்து விட்டேன். நீங்கள் விரும்பியபடி கோடா ஆட்சி அகலும், பாஜக ஆட்சி மீண்டும் மலரும். இதற்காக நான் உறுதியோடு பாடுபடுவேன் என்று மஹதோவிடம் உறுதியளித்தார்.
அதைக் கேட்ட பிறகுதான் மஹதோவுக்கு முகத்தில் மகிழ்ச்சியே வந்ததாம். முன்டாவின் கைகளைப் பிடித்துக் கொண்டு, இனிமேல் எனக்குக் கவலை இல்லை, எனது போராட்டத்தை நான் முடித்துக் கொள்கிறேன் என்று அவரிடம் உறுதியளித்தாராம்.
பின்னர் அங்குள்ள அனுமான் கோவிலுக்கு மஹதோவை முன்டா கூட்டிச் சென்றார். அங்குள்ள குளத்தில் குளிக்கச் செய்து சாமி கும்பிட வைத்து வீடடு வரைக்கும் வந்து விட்டு விட்டு பின்னர் திரும்பினாராம் முன்டா.












Click it and Unblock the Notifications