மறுபடியும் பரிகார பூஜை-தீட்சிதர்கள் மீண்டும் விஷமம்!

கடந்த சில நாட்களாக சிதம்பரமே பெரும் பரபரப்பில் மூழ்கிக் கிடக்கிறது. தமிழா, தீட்சிதர்களா என்ற பெரும் கேள்விக்கு விடை காண முடியாமல் சிதம்பரம் மக்கள் பெரும் டென்ஷனில் உள்ளனர்.
சிதம்பரம் நடராஜர் கோவில் திருச்சிற்றம்பலத்தில் (கோவில் கருவறை) தேவாரம், திருவாசகம் உள்ளிட்ட தமிழ்த் திருமறைகளை பாட கோரி சிவனடியார்கள் நீண்ட காலமாக போராடி வருகின்றனர்.
இப்படிப் பாட எந்தத் தடையும் இல்லை என்று தமிழக அரசின் இந்து அறநிலையத்துறை சமீபத்தில் உத்தரவிட்டது. ஆனால் அதை ஏற்காத கோவில் தீட்சிதர்கள், தேவாரம் பாட ஓதுவார்களை அடித்து விரட்டினர். தடுக்க வந்த போலீஸாரையும் தாக்கினர்.
இதுதொடர்பாக 11 தீட்சிதர்களைப் போலீஸார் கைது செய்துள்ளனர். இந்த நிலையில் தேவாரம் உள்ளிட்டவற்றை பாடுவது யார் தடுத்தாலும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு கடுமையாக எச்சரித்தது.
இந்த நிலையில் நேற்று விவசாயிகள் விடுதலை முன்னணியைச் சேர்ந்த 25 பேர் தாங்கள் தேவாரம், திருவாசகம் பாடவிருப்பதாக முறைப்படி அறநிலையத்துறை அதிகாரிகள் மற்றும் கால்துறையிடம் தெரிவித்தனர்.
இதையடுத்து அவர்களில் ஐந்து பேர் மட்டும் திருச்சிற்றம்பலத்திற்குள் சென்று பாடலாம் என அனுமதி அளிக்கப்பட்டது. இதையடுத்து உள்ளே சென்ற 25 பேரும் திருச்சிற்றம்பலத்திற்குள் செல்ல முயன்றனர்.
ஆனால் அனுமதிக்கப்பட்ட ஸ்டாலின், எழுமலை, ரவி, முருகன், சண்முகம் ஆகியோர் மட்டுமே உள்ளே செல்ல வேண்டும் என போலீஸார் தெரிவித்தனர். இதையடுத்து அந்த ஐந்து பேரும் சட்டைகளை கழற்றி விட்டு உள்ளே சென்றனர்.
அவர்களுடன் மாவட்ட எஸ்.பி. பிரதீப் குமார், டி.எஸ்.பி. செந்தில்வேலன் உள்ளிட்டோரும் சட்டைகளைக் கழற்றி விட்டு உள்ளே சென்றனர்.
மரியாதை செய்த தீட்சிதர்கள்:
உள்ளே சென்ற 5 பேரும், தேவாரத்திலிருந்து ஒரு பாடலையும், திருவாசகத்திலிருந்து ஒரு பாடலையும் மொத்தம் 20 நிமிடங்கள் பாடினர். அதன் பின்னர் அவர்களுக்கு தீபாரதானை காட்டி, மாலை அணிவித்து, பட்டாடை அணிவித்து தீட்சிதர்கள் மரியாதை செய்தனர்.
தீ்ட்டு கழிப்பு:
ஆனால் அதன் பிறகுதான் குழப்பம் நடந்துள்ளது. மாலை, மரியாதையுடன் வரவேற்று ஓதுவார்களை அனுப்பி வைத்த தீட்சிதர்கள், அதன் பிறகு திருச்சிற்றம்பலத்தை கழுவி, பரிகார பூஜை நடத்தி தீட்டுக் கழித்துள்ளனராம்.
இது சிதம்பரத்தில் உள்ள தமிழ் ஆர்வலர்களையும், சிவனடியார்களையும் பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இதுகுறித்து போராட்டக் குழுவைச் சேர்ந்த செளந்தரபாண்டியன் என்பவர் கூறுகையில், ஓதுவார்களும் சிவனடியார்களும் தேவாரம் பாடி விட்டு போன பின்னர் திருச்சிற்றம்பலத்தை நன்றாக குழு, தீட்டுக் கழித்து, பரிகார பூஜை செய்துள்ளனர் தீட்சிதர்கள்.
இது தமிழுக்கும், தமிழர்களுக்கும், தமிழகத்திற்கும் பெரும் இழுக்கு விளைவிக்கும் செயலாகும். இந்த செயலில் ஈடுபட்ட தீட்சிதர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
தீட்சிதர்கள் பரிகார பூஜை செய்ததாக எழுந்துள்ள சர்ச்சை குறித்து அறநிலையத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications