வேட்பாளரை நிறுத்துமா பாமக?
சென்னை: திமுக தரப்பில் தங்களுக்கு ராஜ்யசபா எம்பி சீட் ஒதுக்கப்படாவிட்டால் பாமக சார்பில் போட்டியாக வேட்பாளர் நிறுத்தப்படுவார் எனத் தெரிகிறது.
தமிழகத்தில் காலியாகும் 6 ராஜ்யசபா இடங்களில் திமுக, காங்கிரஸ் ஆகியவை தலா இரு இடங்களும், ஒரு இடத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கும் ஒதுக்க திமுக முடிவு செய்துள்ளது.
இன்னொரு இடத்தில் அதிமுக நிறுத்தும் வேட்பாளர் வெல்வார்.
இந் நிலையில் திமுகவிடம் தனக்கும் ஒரு இடம் கோரியது பாமக. இந்தக் கோரிக்கையை திமுக நிராகரித்துவிட்ட நிலையில் வரும் 15ம் தேதி வரை திமுகவுக்கு கெடு விதித்துள்ளார் பாமக நிறுவனர் ராமதாஸ்.
விஜய்காந்த் பயத்தில் காங்கிரசுக்கு 2?:
முதலில் காங்கிரசுக்கு ஒரு இடம் மட்டும் தர இருந்த திமுக, சோனியா-முதல்வர் கருணாநிதி தொலைபேசி பேச்சைத் தொடர்ந்து இரு இடங்கள் ஒதுக்கியது.
விஜய்காந்த் பக்கமாக காங்கிரஸ் ஒதுங்கிவிடாமல் தடுக்கவே திமுக இரு இடங்களை விட்டுத் தர முன் வந்ததாகக் கூறப்படுகிறது.
இந் நிலையில் நிர்வாகக்குழு கூட்டத்தை கூட்டிய ராமதால் வரும் 15ம் தேதிக்குள் திமுக தனது நிலையை மாற்றிக் கொண்டு தங்களுக்கும் ஒரு இடம் தர வேண்டும் என கெடு விதித்துள்ளார்.
கூட்டணியில் பா.ம.க. நீடிக்குமா அல்லது விலகுமா என்பது முதல்வரின் முடிவை பொறுத்தே அமையும் என்றும் பா.ம.க கூறியுள்ளது.
ஆனால், பாமகவின் இந்த கோரிக்கையை திமுக ஏற்கப் போவதில்லை என்பது நிச்சயம். இனியும் ராமதாஸ் மிரட்டல்களுக்கு பணிவதில்லை என்ற முடிவுக்கு திமுக வந்துவிட்டது.
போட்டியிடாமலேயே 4 இடங்களில் திமுக கூட்டணியும், ஒரு இடத்தில் அதிமுகவும் வெல்ல முடியும். மீதியுள்ள ஒரு இடத்தை வெல்ல அதிமுகவுக்கு 2 ஓட்டுகள் தேவை.
இந் நிலையில் போட்டியாக பாமக தனது வேட்பாளரை நிறுத்தலாம் என்று கூறப்படுகிறது. அப்படி ஒரு நிலை ஏற்பட்டால் அதை அதிமுக தனக்கு சாதமாக்க திட்டமிட்டுள்ளது.
பாமக நிறுத்தும் வேட்பாளரை அதிமுக ஆதரித்தால் அவர் வெல்லலாம். இதன் மூலம் பாமகவை மெல்ல தனது கூட்டணிக்குள் இழுத்துப் போட அதிமுகவால் முடியும்.
திமுக-பாமக சமாதானம் ஏற்படாவிட்டால் தனது கட்சி சார்பில் வேட்பாளரை நிறுத்துவது குறித்து 15ம் தேதிக்குப் பின்னர் ராமதாஸ் அறிவிக்கலாம் என்கிறார்கள்.
இந் நிலையில் நேற்று ராமதாஸ் பேட்டியளிக்கையில் கேட்கப்பட்ட சில முக்கிய கேள்விகளும் பதில்களும்:
கேள்வி: ஒரு சீட் கொடுக்க வாய்ப்பு இருக்கிறது என்று நம்புகிறீர்களா?
ராமதாஸ்: 15ம் தேதி வரை வாய்ப்பு இருக்கிறது.
கேள்வி: பா.ம.க. ஒரு சீட் கேட்பது நியாயம் தானா என்று கேட்டுள்ளார்களே?
ராமதாஸ்: எங்களுக்கு மிகவும் வருத்தம் வந்ததும் பாதித்ததும் நியாயம் கிடையாது' என்றது தான். நியாயமா, இல்லையா? என்று அவர் யாரை வேண்டுமானாலும் கேட்கட்டும். கட்டாயம் ஒரு சீட் கொடுக்க வேண்டும் என்று தான் சொல்வார்கள்.
கேள்வி: திமுக கூட்டணி வேட்பாளர்கள் வெற்றி பெற நீங்கள் ஒத்துழைக்க வேண்டும் என்று கோரப்பட்டுள்ளதே?
ராமதாஸ்: அது இன்னும் உச்சகட்டம்
கேள்வி: எப்படி தொடர்ந்து புறக்கணித்து வருவதாக கூறுகிறீர்கள்?
ராமதாஸ்: 96ம் ஆண்டிலிருந்து புறக்கணித்து வருகிறார். விழுப்புரம் கூட்டத்தில் ஒரு நாற்காலியை போட்டு இது தான் முதல்வர் நாற்காலி என்று கூறி அவருக்கு மஞ்சள் சால்வை அணிவித்தேன். ஆனால் எங்களை விட்டுவிட்டு 96 சட்டசபை தேர்தலில் வேறொரு கட்சியுடன் ஒப்பந்தம் செய்து கொண்டார்.
கேள்வி: இப்படி தொடர்ந்து புறக்கணிக்கும் கட்சியுடன் கூட்டணி தொடருமா, தொடராதா?
ராமதாஸ்: நாங்கள் காங்கிரஸ் அணியில் நீடிக்கிறோம். காங்கிரசுடன் தான் கூட்டணி என்று தொடர்ந்து சொல்லிக் கொண்டிருக்கிறோம்.
கேள்வி: தைரியமாக ஒரு முடிவை அறிவிக்க ஏன் தயங்குகிறீர்கள்?
ராமதாஸ்: அரசியலில் ஒரு நிதானம் வேண்டும் என்பது தான். 98ம் ஆண்டில் நாடாளுமன்றத் தேர்தலில் திமுகவுடன் கூட்டணி வைக்க முடிவு செய்தோம். கடைசி வரை ஒரு சீட் கொடுப்பதா, இல்லையா என்று ஒரு முடிவாக கூறவில்லை. அதிமுக தானாக முன் வந்து 5 சீட் கொடுத்தனர். அதில் நான்கில் வெற்றி பெற்றோம்.
கேள்வி: பின்னர் ஏன் அந்த கூட்டணியில் இருந்து வெளியேறினீர்கள்?
ராமதாஸ்: அந்த அம்மையார் (ஜெயலலிதா) 13 மாதத்தில் வாஜ்பாய் அரசை வீட்டுக்கு அனுப்பியது தான் காரணம்.
கேள்வி:- இந்த முறை அதிமுக தரப்பில் டெல்லி மேல்சபை சீட் தர முன்வந்தால் ஏற்பீர்களா?
ராமதாஸ்: இந்த கேள்வியே இப்போது எழவில்லை. 15ம் தேதி வரை நாள் இருக்கிறது.
கேள்வி: முதல்வர் கருணாநிதியை சந்தித்து பேசுவீர்களா?
ராமதாஸ்: நான் சந்திக்கிற எண்ணம் இல்லை. தலைவர், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் இருக்கிறார்கள். மத்திய மந்திரி இருக்கிறார். அவருக்கு வேண்டியவர் தான்.
கேள்வி: சுமுகமான தீர்வு ஏற்படும் என்று நம்புகிறீர்களா?
ராமதாஸ்: எல்லாமே நம்பிக்கை தான்.
கேள்வி: விஜயகாந்துடன் காங்கிரஸ் நெருங்கிவிடக் கூடாது என்று தான் 2 சீட் தரப்படுகிறதா?
ராமதாஸ்: காங்கிரசுக்கு 2 அல்ல, இன்னொன்று கூட தரட்டும். எங்களுக்கு தரவில்லையே என்பது தான் எங்களது வருத்தம்.
கேள்வி: தமிழ்நாட்டில் ஜனநாயக முற்போக்கு கூட்டணி இருக்கிறதா? இல்லையா?
ராமதாஸ்: 15-ந் தேதி வரை நேரம் இருக்கிறது என்றார் ராமதாஸ்.












Click it and Unblock the Notifications