இலங்கை சிறையில் 59 குமரி மீனவர்கள் - கடற்படை எச்சரிக்கை

ராமேஸ்வரம் அருகே உள்ள தங்கச்சிமடத்தைச் சேர்ந்த மீனவர் கிறிஸ்டியை இலங்கை கடற்படை சுட்டுக் கொன்ற பரபரப்பே இன்னும் விலகாத நிலையில் நேற்று குமரி மாவட்டத்தைச் சேர்ந்த 62 மீனவர்களை இலங்கை கடற்படை வீரர்கள் கடத்திச் சென்று பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளனர்.
இந்த மாவட்டத்தைச் சேர்ந்த தூத்தூர் மீனவ கிராமத்தைச் சேர்ந்த 5 மீனவர்கள் கடந்த ஆண்டு நடுக் கடலில் சுட்டுக் கொல்லப்பட்டனர். சுட்டுக் கொன்றது யார் என்பதில் இன்னும் பெரும் குழப்பம் நிலவி வருகிறது. இதுதவிர கடந்த ஆண்டு குமரி மாவட்டத்தைச் சேர்ந்த பல மீனவர்களை இலங்கை கடற்படை கடத்திச் சென்று விடுவித்தது.
சமீபத்தில் கூட தூத்தூரைச் சேர்ந்த 25 மீனவர்களை இலங்கை கடற்படை கடத்திச் சென்று பின்னர் விடுவித்தது.
மேலும் 62 பேர் கைது:
இந்த நிலையில் நேற்று 62 பேரை இலங்கை கடற்படையினர் கடத்திச் சென்றுள்ளது. நீரோடி, மார்த்தாண்டன் துறை, சின்னதுறை, வள்ளன்விளை, தூத்தூர் கிராமங்களைச் சேர்ந்த மீனவர்கள் 6 படகுகளில் மீன் பிடிக்கச் சென்றனர்.
நேற்று முன்தினம் இவர்கள் ஊர் திரும்புவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் வரவில்லை. இதனால் இந்த கிராமங்களில் பதட்டம் ஏற்பட்டது.
இந்த நிலையில்தான் 6 படகுகளிலும் இருந்த 62 மீனவர்களை இலங்கை கடற்படையினர் பிடித்துச் சென்ற தகவல் கிடைத்தது. இதனால் மீனவர்களின் குடும்பத்தினர் பெரும் அதிர்ச்சியும், சோகமும் அடைந்தனர். கிராமங்கள் அனைத்தும் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து கன்னியாகுமரி மாவட்ட ஆட்சித் தலைவர் ஜோதி நிர்மலா உறுதி செய்துள்ளார். அவர் கூறுகையில், 62 மீனவர்களையும் இலங்கை கடற்படையினர் பிடித்துச் சென்றுள்ளனர். இதுகுறித்த தகவல் தூத்தூர் மீன் பிடி சங்கத்தினர் மூலம் மீன்வளத்துறை உதவி இயக்குநர் கிருஷ்ணமூர்த்திக்கு தெரிவிக்கப்பட்டது.
அவர் எனக்குத் தகவல் கொடுத்தார். இந்த விவரம் அரசின் கவனத்திற்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளது. மீனவர்களை மீட்க உரிய வழிகளில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார் ஜோதி நிர்மலா.
இலங்கை கடற்படையினர் அட்டகாசத்தால் தமிழக மீனவர்கள் பெரும் விரக்தியிலும், வேதனையிலும் அதிருப்தியிலும் மூழ்கியுள்ளனர்.
இலங்கை சிறையில் அடைப்பு:
இந்த நிலையில் தமிழக மீனவர்கள் 59 பேரையும், அவர்களது 6 படகுகளையும் பிடித்து வைத்துள்ளதாக இலங்கை கடற்படை உறுதி செய்துள்ளது. மேலும் இல்லை கடல் எல்லைக்குள் தமிழக மீனவர்கள் நுழைந்தால் அவர்களை சும்மா விட மாட்டோம் எனவும் அது எச்சரித்துள்ளது.
புத்தளம் என்ற இடத்தில் வைத்து தமிழக மீனவர்களைப் பிடித்ததாகவும் இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து இலங்கை கடற்படை செய்தித் தொடர்பாளர் தசநாயகே கொழும்பில் கூறுகையில், சிலாவ் தீவுக்கு அருகே இவர்களைப் பிடித்துள்ளோம்.
உடனடியாக அனைவரும் கல்பிதியா கழிமுகப் பகுதிக்குக் கொண்டு வரப்பட்டு உள்ளூர் போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
இதுகுறித்து இந்தியத் தூதரகத்திற்கும் தகவல் தரப்பட்டுள்ளது.
தமிழக மீனவர்கள் தொடர்ந்து இலங்கை கடல் எல்லைக்குள் ஊடுறுவுவது அதிகரித்து வருகிறது. இதை நாங்கள் பொறுத்துக் கொள்ள மாட்டோம். தொடர்ந்து கைது செய்வோம். சும்மா விட மாட்டோம் எனவும் தசநாயகே எச்சரிக்கை விடுத்தார்.
தமிழக மீனவர்களைக் கைது செய்ததோடு, தொடர்ந்து கைது செய்வோம் என இலங்கை கடற்படை கொக்கரித்துள்ளது தமிழக மீனவர்களிடையே பெரும் கொதிப்பையும், கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
மத்திய, மாநில அரசுகள் இந்த விவகாரத்தில் தீவிர நடவடிக்கை எடுத்தால் மட்டுமே தங்களது வாழ்வுரிமை காக்கப்படும் என அவர்கள் எதிர்பார்க்கின்றனர்.
3 பேர் கதி என்ன?:
இதற்கிடையே, 62 பேரைக் காணவில்லை என்று குமரி மீனவர்கள் தெரிவித்துள்ள நிலையில், 59 பேரைக் கைது செய்துள்ளதாக இலங்கை கடற்படை கூறியுள்ளது புதிய குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. அப்படியானால், மற்ற 3 பேரின் நிலை என்ன என்ற பதட்டம் அதிகரித்துள்ளது.












Click it and Unblock the Notifications