வங்கக்கடலில் புயல் சின்னம்-சென்னையில் பலத்த மழை

கடல் கொந்தளிப்பாக உள்ளதால் தென் தமிழகத்தில் மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக தமிழகத்தில் கடும் வெயில் வீசி வந்தது. இந் நிலையில் வங்கக் கடலின் தென் மேற்கு பகுதியில், தமிழ்நாடு மற்றும் இலங்கை கடலோர பகுதிகளில் இந்த திடீர் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளது.
இதனால் தமிழகம் மற்றும் தென் கர்நாடகப் பகுதிகளில் மேகமூட்டம் நிலவி வருகிறது. இரு மாநிலங்களிலும் பல இடங்களில் கன மழையும் பெய்தது.
தஞ்சை, நாகை உள்ளிட்ட காவிரி டெல்டா மாவட்டங்களிலும் மதுரை, திருச்சி, புதுக்கோட்டை, கடலூர், சேலம், ராமநாதபுரம், திருச்செந்தூர், பூதப்பாண்டி உள்ளிட்ட இடங்களில் கணிசமான அளவுக்கு மழை பெய்துள்ளது. கன்னியாகுமரியிலும் நல்ல மழை பெய்துள்ளது.
சென்னையில் இரவில் கன மழை பெய்தது. பலத்த மழை பெய்ததால் நகரின் பல பகுதிகளில் சாலைகளில் தண்ணீர் வெள்ளம் போல ஓடியது.
கொடைக்கானலில் சாரல் மழை பெய்து ஊரையே மேலும் அழகாக்கிவிட்டது. இதனால் கொடைக்கானலில் முன்கூட்டியே சீசன் தொடங்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
கடும் வெப்பத்தால் பரிதவித்த தமிழக மக்களுக்கு இந்த மேக மூட்டமும் லேசான மழையும் பெரும் மகிழ்ச்சியைத் தந்துள்ளது.
இந்த காற்றழுத்த தாழ்வு நிலை தொடர்ந்து அதே இடத்தில் நீடிப்பதால், தென் மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தாழ்வு நிலை காரணமாக 55 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசக் கூடும் என்பதால் அடுத்த 24 மணி நேரத்திற்கு தென் தமிழக மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என எச்சரி்க்கப்பட்டுள்ளனர்.
4 மீனவர்கள் மாயம்:
இதற்கிடையே ராமேஸ்வரத்தைச் சேர்ந்த மீனவர் ரவி என்பவரின் படகில் சலீம், பெருமாள், செல்வம், கார்த்திக் ஆகியோர் மீன் பிடிக்கச் சென்றனர்.
இவர்கள் இன்னும் கரை திரும்பவில்லை. இதனால் அவர்களது குடும்பத்தினர் ஆழ்ந்த கவலையில் உள்ளனர்.