அருந்தியர் சமூகத்திற்கு தனி உள் ஒதுக்கீடு - கருணாநிதி
சென்னை: அருந்ததியர் சமூகத்திற்கு, தனி உள் ஒதுக்கீடு வழங்க அரசு தீர்மானித்திருப்பதாகவும், இதுதொடர்பாக அனைத்துக் கட்சிகளுடன் ஆலோசித்து கொள்கை முடிவு வகுக்கப்படும் எனவும் முதல்வர் கருணாநிதி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக ஒரு நபர் குழுவும் அமைக்கப்படவுள்ளது.
அருந்ததியர் சமூக மக்களுக்கு தனி உள் ஒதுக்கீடு வழங்குவது குறித்த ஆலோசனைக் கூட்டம் தலைமைச் செயலகத்தில் முதல்வர் கருணாநிதி தலைமையில் நேற்று மாலை தொடங்கி இரவு வரை நடந்தது.
இதில், பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். திமுக சார்பில் நிதியமைச்சர் அன்பழகன், காங்கிரஸ் சார்பில் சுதர்சனம், பீட்டர் அல்போன்ஸ், அதிமுக சார்பில் ஜெயக்குமார், அன்பழகன், பாமக சார்பில் ஜி.கே.மணி, பாலசுந்தரி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு சார்பில் என்.வரதராஜன், சம்பத், இந்திய கம்யூனிஸ்டு சார்பில் தா.பாண்டியன், பழனிச்சாமி, ம.தி.மு.க. சார்பில் இளவரசன், ராதாகிருஷ்ணன், போட்டி ம.தி.மு.க. சார்பில் எல்.கணேசன், செஞ்சி ராமச்சந்திரன், தே.மு.தி.க. சார்பில் பண்ருட்டி ராமச்சந்திரன், பார்த்தசாரதி, விடுதலை சிறுத்தைகள் சார்பில் தொல்.திருமாவளவன், ரவிக்குமார், தி.க. சார்பில் கி.வீரமணி, கலி.பூங்குன்றன், எம்.ஜி.ஆர். கழகம் சார்பில் ராம.வீரப்பன், ராஜ்குமார் உட்பட 26 அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
அமைச்சர்கள் மு.க.ஸ்டாலின், ஆற்காடு வீராசாமி, கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், மதிவாணன், தமிழரசி, சட்டசபை துணை சபாநாயகர் வி.பி.துரைசாமி, தலைமைச் செயலாளர் எல்.கே.திரிபாதி கலந்து கொண்டனர்.
கூட்டத் தொடக்கத்தில் முதல்வர் கருணாநிதி பேசுகையில், சமுதாயத்தில் கல்வியிலும் பொருளாதாரத்திலும் மிகவும் பின்தங்கிய நிலையிலே வாழும் ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின மக்களுக்குக் கல்வியிலும் வேலை வாய்ப்பிலும் தனி இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற அடிப்படையில், இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் ஆதி திராவிட மக்களுக்கும், பழங்குடியின மக்களுக்கும் சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன.
இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தில் அளிக்கப்பட்டுள்ள சலுகைகள், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களுக்குக் கிடைக்க வேண்டும் என்பதில் தி.மு.க. மிகுந்த அக்கறை கொண்டுள்ளது.
முதன்முதலாக முதல்-அமைச்சராக நான் பொறுப்பேற்றுக் கொண்ட ஒரு சில மாதங்களில் ஏ.என்.சட்டநாதன் தலைமையில் இந்தியாவிலேயே முதன் முதலாக பிற்படுத்தப்பட்டோர் நலக்குழு ஒன்று அமைக்கப்பட்டது.
அக்குழு வழங்கிய பரிந்துரைகளின் அடிப்படையில் 1971-ம் ஆண்டில் ஆதிதிராவிடர்களுக்கும், பழங்குடியினருக்கும் சேர்த்துப் பல ஆண்டு காலமாக இருந்த இட ஒதுக்கீடு 16 சதவீதம் என்பது 18 சதவீதம் என உயர்த்தப்பட்டது.
பின்னர், 1990-ம் ஆண்டில் சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய ஒரு தீர்ப்பினையொட்டியும், தமிழ்நாட்டிலுள்ள பழங்குடியின மக்கள் தொகையைக் கருத்தில் கொண்டும், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான 18 சதவீதம் முழுவதையும் ஆதிதிராவிடர் மக்களுக்கென (செட்யூல்ட் வகுப்பினர்) ஒதுக்கீடு செய்ததுடன், பழங்குடியின மக்களுக்கென (செட்யூல்ட் டிரைப்) தனியே ஒரு சதவீதமும் ஒதுக்கீடு செய்து 22.6.1990 அன்று ஆணை பிறப்பிக்கப்பட்டது.
இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தின் (ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர்) ஆணை 1950-ன் கீழ் திருத்தச் சட்டம் 1976 (சட்டம் 108/1976)-ன்படி, தமிழ்நாட்டில் மொத்தம் 36 சாதியினர் பழங்குடியினர் எனவும், 76 சாதியினர் ஆதிதிராவிடர் இன மக்கள் எனவும் அறிவிக்கப்பட்டது. ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களுக்கான இட ஒதுக்கீடுகள் கல்வியிலும், வேலை வாய்ப்பிலும் முறையாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்பதில் தமிழக அரசு மிகுந்த முனைப்புடன் செயல்பட்டு வருகின்றது.
தமிழ்நாட்டில் வாழும் ஆதி திராவிடர் இன மக்களில் 76 பிரிவினர் உள்ளனர். அவற்றில் அருந்ததியர் ஒரு பிரிவினர் ஆவர். ஆதிதிராவிடர் இன மக்களில் அருந்ததியினர் தமக்கு உள் இட ஒதுக்கீடு கோரி வருகின்றனர்.
76 பிரிவினர்களாக உள்ள ஆதிதிராவிட இன மக்களில் ஆதிதிராவிடர், பள்ளர், பறையர், சக்கிலியர், மற்றும் அருந்ததியர் ஆகிய 5 பிரிவினர் பெரும்பான்மையினராக உள்ளனர். இந்த 5 பிரிவினர் மொத்த ஆதி திராவிட இன மக்கள் தொகையில் 93.5 சதவீதம். 2001-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி தமிழ்நாட்டில் அருந்ததியர் மக்கள் தொகை 7 லட்சத்து 71 ஆயிரத்து 659. சக்கிலிய மக்கள் தொகை 7 லட்சத்து 77 ஆயிரத்து 139. அருந்ததியர் மற்றும் சக்கிலியர் ஆகிய 2 பிரிவுகளையும் சேர்த்தால் அவர்களின் மக்கள் தெகை 15 லட்சத்து 48 ஆயிரத்து 798. இந்த இரு பிரிவினரும் ஆதிதிராவிடரின் மொத்த மக்கள் தொகையில் 13.06 சதவீதம் ஆகும்.
மொத்த ஆதிதிராவிட மக்கள் தொகையான ஒரு கோடியே 18 லட்சத்து 58 ஆயிரம் பேருக்கு 18 சதவீதம் இட ஒதுக்கீடு எனும்போது, அவர்களில் 13.06 சதவீதமான 15 லட்சத்து 48 ஆயிரம் பேரைக் கொண்ட அருந்ததியர் மற்றும் சக்கிலியருக்கு 2.35 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்க வேண்டி வரலாம். தமது கோரிக்கையில், உள் ஒதுக்கீட்டில், இந்து அருந்ததியர்கள், இந்து சக்கிலியர்கள், இந்து மாதாரி, இந்து பகடை என 4 உட்பிரிவுகள் உள்ளன எனவும், இவர்கள் அனைவரும் ஒரே மாதிரியாக திருமணம் மற்றும் இதர, சமூகச் சடங்குகளை வேறுபாடின்றி நடத்தி வருகின்றனர் எனவும், எனவே அருந்ததியர்களுக்கு தனி உள் ஒதுக்கீடு செய்து அரசாணை பிறப்பிக்கப்படும்பொழுது இந்து அருந்ததியர், இந்து சக்கிலியர், இந்து பகடை, இந்து மாதாரி என்ற 4 சாதிகளுக்கும் ஒரே அரசாணையாக அறிவிக்கப்பட வேண்டும் எனவும் கோரியுள்ளனர்.
23.1.2008 அன்று தமிழகச் சட்டசபையில் பேரவையில் நடைபெற்ற ஆளுநர் உரையில், "அருந்ததியர் வகுப்பினர் சமூகப் பொருளாதார நிலையில் அடித்தளத்தில் இருப்பதால், அவர்தம் முன்னேற்றத்திற்குச் சிறப்புச் சலுகைகள் அளிப்பது அவசியம் எனக் கருதி, தற்போது ஆதிதிராவிடருக்கு வழங்கப்பட்டு வரும் இட ஒதுக்கீட்டில் இவர்களுக்குத் தனி உள் ஒதுக்கீடு வழங்குவது பற்றி அனைத்துக் கட்சிகளையும் கலந்தாலோசித்து முடிவு செய்ய இந்த அரசு கருதியுள்ளது.'' என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
ஆதிதிராவிடர்களில் அருந்ததி இன மக்களின் கோரிக்கை குறித்து அனைத்துக் கட்சித் தலைவர்கள் தங்கள் கருத்துகளைத் தெரிவிக்குமாறும் அந்தக் கருத்துகளின் அடிப்படையில் அரசு கொள்கை முடிவு எடுக்கும் என்றார் கருணாநிதி.
கிருஷ்ணசாமி வெளிநடப்பு:
பின்னர் அனைத்துக் கட்சியினரும், அமைப்பினரும் பேச வாய்ப்பளிக்கப்பட்டது. அப்போது புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, அருந்ததியினருக்கு உள் ஒதுக்கீடு வழங்கக் கூடாது. தனி இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று கூறி வெளிநடப்பு செய்தார்.
ஒரு நபர் குழு அமைப்பு:
கூட்டத்தின் இறுதியில் உள் ஒதுக்கீடு குறித்துப் பரிந்துரைக்க ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதியைக் கொண்ட ஒரு நபர் குழுவை அமைக்க முடிவு செய்யப்பட்டது. இதுதொடர்பாக தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.
பின்னர் மீண்டும் முதல்வர் கருணாநிதி பேசுகையில், அதிமுகவின் முடிவு மட்டும் ஒத்திவைக்கப்பட்டிருக்கிறது. அதுவும் ஒத்துப் போகக் கூடிய முடிவாகத் தான் இருக்கும்.
இங்கிருந்து வெளிநடப்பு செய்த டாக்டர் கிருஷ்ணசாமி, இந்தக் கூட்டமே தன்னுடைய இஷ்டத்திற்கு விரோதமானது என்ற தன்னுடைய நிலையை வெளிப்படுத்தியிருக்கிறார். இந்தக் கூட்டத்தின் நோக்கத்திற்கு விரோதமாக கருத்துக்களை அவர் வெளியிட்டிருக்கிறார்.
இது தான் தாழ்த்தப்பட்ட மக்களுடைய தலையெழுத்து என்று வைதீக பாஷையிலே சொல்ல வேண்டும். அவர்களுக்காக வாதாட வேண்டிய ஒருவர், அவர்களுக்கு விரோதமான கருத்துக்களை இங்கே வெளியிட்டு, நம்மையெல்லாம் குற்றவாளிகளாக ஆக்கி விட்டு, சில கருத்துக்களை வெளியிட்டிருக்கிறார்.
நாம் நல்ல எண்ணத்தோடு எந்தக் காரியத்தைச் செய்தாலும், அதை நடைமுறைப்படுத்துகின்ற இடத்திலே உள்ள சில அதிகாரிகள் சில தவறுகளைச் செய்து விடக் கூடும். கிறித்தவ சமுதாய மக்களுக்கு எவ்வளவு சதவீதமோ, அதே சத விகிதம் இஸ்லாமிய மக்களுக்கும் என்று நாம் அறிவித்திருந்தாலுங்கூட, கிறித்தவர்களுக்கு கிடைக்கின்ற இட ஒதுக்கீடு, சரியாக வழங்கப்படுகிறது, ஆனால் இஸ்லாமியர்களுக்குத் தரப்பட வேண்டிய அந்த 3.5 சதவிகித ஒதுக்கீடு முறையாக வழங்கப்படவில்லை என்பது உண்மை தான்.
நண்பர் கிருஷ்ணசாமி கூட்டத்தை விட்டு வெளியேறி தவறான கருத்தை ஆதி திராவிட மக்களிடத்திலே ஏற்படுத்த முயன்றிருக்கிறார். அதற்காக நான் உங்கள் அனைவரோடும் சேர்ந்து வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.
ஒரு சதவீதம் என்று அறிவித்தால், சதவீதக் கணக்கைத் தான் நடைமுறைப்படுத்த வேண்டும். அதை விட்டு விட்டு, நீதிக் கட்சிக் காலத்திலே போடப்பட்ட முறையை வைத்துக் கொண்டு, இப்போதும் அதே முறையில் தான் செய்வோம் என்று கூறுகின்ற சில அதிகாரிகள் இதிலே தலையிட்ட காரணத்தால் வந்த வினை இது. நான் அதற்காக, உடனடியாக அதிகாரிகள் கூட்டத்தையும், அமைச்சர்கள் கூட்டத்தையும் கூட்டி, அதை சரி செய்கிறேன் என்று சொல்லியிருக்கிறேன்.
உங்கள் அத்தனை பேருடைய கருத்தும் ஒத்துவரும் என்ற உணர்வோடு கூட்ட தீர்மானம் எடுக்கப்பட்டு உள்ளது என்றார் கருணாநிதி.
ஒரு நபர் குழு தனது அறிக்கையை 6 மாதத்திற்குள் அளிக்கும் எனவும் முதல்வர் தெரிவித்தார்.
-
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
EXCLUSIVE: வட இந்தியர்களுக்கு வேலையில்லை.. இனி இட்லி, சப்பாத்தி மட்டும் தான்! குமுறும் ஓட்டல் உரிமையாளர்கள்.! -
ஒரு குண்டு கூட வீசாமல்.. அமெரிக்காவை காலி செய்யும் சீனாவின் "ரகசிய" ஆயுதம்.. ஆட்டம் மொத்தமா மாறுது -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
7 பொதுத்தொகுதி + 2 தனித்தொகுதி.. அதிமுக கூட்டணியில் டிடிவிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் இதுதான்! -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
29 + 9.. அதிமுக கூட்டணியில் பாஜக - அமமுகவுக்கு எத்தனை சீட்? இறங்கி வராத எடப்பாடி பழனிச்சாமி -
உலக நாடுகளுக்கே மிகப்பெரிய ஆபத்து.. நிலைமை கையை மீறி போகுது.. ரஷ்யா புதின் தந்த 'ஷாக்' வார்னிங் -
அமெரிக்காவை அசரடித்த அம்பானி.. ரூ.27 லட்சம் கோடி முதலீடு செய்யும் ரிலையன்ஸ்.. டிரம்ப் அறிவிப்பு -
பச்சை, வெள்ளை, சர்க்கரை ரேஷன் அட்டையில் அரசு சலுகைகள்! 3 மாதம் பொருட்கள் வாங்காவிட்டால் கார்டு கட்?












Click it and Unblock the Notifications