12 வயது சிறுமிக்கு திருமணம் செய்யும் முயற்சி தடுப்பு
பெரம்பலூர்: பெரம்பலூரில் 12 வயது சிறுமியை, 11 வயது சிறுவனுக்கு கல்யாணம் செய்து கொடுக்க இருந்த முயற்சியை போலீஸார் உரிய நேரத்தில் தடுத்து நிறுத்தி அந்த சிறுமியை மீட்டனர்.
அந்தக் காலத்தில் பழக்கத்தில் இருந்து வந்த பால்ய விவாகம் இன்னும் ஒழிந்தபாடில்லை. தர்மபுரி, சேலம் உள்ளிட்ட சில மாவட்ட கிராமங்களில் பால்ய விவாக கொடுமை அமோகமாக நடந்தபடிதான் உள்ளது. இதைத் தடுக்க போலீஸார் தீவிர நடவடிக்கை எடுத்தும் கூட இந்தப் பழக்கம் இன்னும் ஒழியவில்லை.
சமீபத்தில் தர்மபுரி மாவட்டத்தில் ஒரு சிறுமிக்கு கல்யாணம் நடந்தது. கல்யாணத்தைத் தடுக்க முடியாத போலீஸார், கல்யாணம் முடிந்த பின்னர்தான் தலையிட்டு அந்த சிறுமியை மீட்டனர்.
இந்த நிலையில் பெரம்பலூரில் ஒரு சிறுமியை கல்யாணம் செய்து வைக்கும் கொடுமையிலிருந்து போலீஸார் காப்பாற்றி மீட்டுள்ளனர்.
பெரம்பலூர் மாவட்டம் செல்லியம்பாளையத்தைச் சேர்ந்த தம்பதி பாண்டியன் - செல்லம்மாள். இவரது மகள் செல்வராணி (12). அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 7ம் வகுப்பு படிக்கிறார்.
அதே பகுதியைச் சேர்ந்தவர் பாண்டியன். இவரது மனைவி இறந்து விட்டார். இவர்களது மகன் கார்த்திக் (11). 6ம் வகுப்பு படித்து வருகிறான். பாண்டியனும் அவரது நண்பர் பாளையத்தாரும் சேர்ந்து செல்வராணி - கார்த்திக் ஆகியோருக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்தனர்.
இதை அறிந்த செல்வராணி, தனது வகுப்புத் தோழிகளிடம் தனக்குக் கல்யாணம் செய்து வைக்கப் போவதாக கூறியுள்ளார். அதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த செல்வராணியின் தோழிகள் பள்ளி ஆசிரியர்களிடம் தெரிவித்தார்கள்.
இதையடுத்து பள்ளி ஆசிரியர்கள், அப்பகுதியைச் சேர்ந்த
தென்னிந்திய வாடிக்கையாளர் பாதுகாப்புக் கழகம் என்கிற ஒரு என்.ஜி.ஓ. அமைப்பிடம் தகவல் தெரிவித்து திருமணத்தை தடுத்து நிறுத்தக் கோரினர்.
இதைத் தொடர்ந்து அந்த அமைப்பின் மகளிர் பிரிவு துணைச் செயலாளர் மும்தாஜ், தனது அமைப்பினருடன் சென்று சிறுமியை மீட்டு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தார்.
சிறுமியிடம் டி.எஸ்.பி.பாஸ்கரன் விசாரணை நடத்தினார். பின்னர் சிறுமியின் தாயாரை போலீஸார் வரவழைத்து அவரை எச்சரித்தனர். அதற்கு அவர், இதில் எனக்கு சற்றும் உடன்பாடில்லை. எனது கணவர்தான் இந்த முயற்சியில் ஈடுபட்டார் என்று கூறினார்.
இதையடுத்து சிறுமியின் தாயாரிடம் பால்ய விவாகம் செய்து வைக்க மாட்டோம் என எழுதி வாங்கி எச்சரித்து விட்டு போலீஸார் சிறுமியை தாயாருடன் அனுப்பி வைத்தனர்.












Click it and Unblock the Notifications