Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சென்னையில் 10 ஆண்டுகளுக்கு பின் மிக பலத்த மழை

Subscribe to Oneindia Tamil

Rain
சென்னை: தமிழகம் முழுவதும் இன்றும் கன மழை பெய்து வருகிறது. இந்த மழை மேலும் 2 நாட்களுக்கு நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள புயல் சின்னம் தொடர்ந்து தீவிரமடைந்து வருகிறது. இதனால் மழையின் அளவும் அதிகரித்து வருகிறது. தமிழகத்தின் தென் மாவட்டங்களில்தான் கன மழை தொடர்ந்து பெய்து வருகிறது. குறிப்பாக நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் பேய் மழை பெய்து வருகிறது.

இன்றும் மழை வெளுத்து வாங்கி வருகிறது. தலைநகர் சென்னையில் நேற்று இரவு முழுவதும் மழை பெய்து கொண்டிருந்தது. இன்று காலை சற்றே நின்றிருந்த மழை பின்னர் மீண்டும் பெய்யத் தொடங்கியது. விட்டு விட்டு மழை பெய்து வருகிறது.

இதே போல தமிழகத்தின் பிற பகுதிகளிலும் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.

இந்த மழை 48 மணி நேரத்திற்குத் தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கோடையில் கன மழை - மக்கள் அவதி:

கோடை காலத்தில் பெய்து வரும் கன மழையால் தமிழகம் முழுவதும் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர். சென்னையில் 10 ஆண்டுகளுக்குப் பிறகு வெயில் காலத்தில் மழை கொட்டியுள்ளது. தூத்துக்குடியில் 20 ஆண்டுகளுக்குப் பிறகு பெரும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.

கோடை காலத்தில் இப்படி கன மழை பெய்வது தமிழக மக்களுக்குப் புதிதில்லை என்ற போதிலும் இப்போது பெய்து வரும் மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை அடியோடு பாதிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் 10 ஆண்டுகளில் பலத்த மழை:

சென்னையில் பத்து ஆண்டுகளுக்குப பிறகு கோடை காலத்தில் கன மழை பெய்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் சென்னையில் 78 மிமீ மழை பெய்துள்ளது. கடந்த 1998ம் ஆண்டுக்குப் பின் பெய்துள்ள மிக பலத்த மழை இதுவாகும்.

கடந்த நான்கு நாட்களுக்கும் மேலாக தொடர்ந்து மழை பெய்து வருவதால் சென்னை நகரம் சேறு நகரமாக மாறி மக்களை பெரும் அவதிக்குள்ளாகியுள்ளது.

தூத்துக்குடியில், கடந்த 20 ஆண்டுகளில் இதுவரை இல்லாத அளவுக்கு நகரில் பெரும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. அங்கு கடந்த 3 நாட்ளாக, நகரின் பல பகுதிகளிலும் வீடுகளில் தண்ணீர் புகுந்து வெளியேறாமல் உள்ளது.

நகரெங்கும் வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது. தண்ணீர் தேங்கிக் கிடப்பதால் பல பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது. குடிநீர் விநியோகமும் பல பகுதிகளில் பாதிக்கப்பட்டுள்ளது.

நெல்லை மாவட்டம் ராதாபுரம் பகுதியில் நேற்று ஒரே நாளில் 19 சென்டி மீட்டர் மழை பதிவாகி உள்ளது.

சுவர் இடிந்து கார்கள் சேதம்:

சென்னை மயிலாப்பூரில் கன மழை காரணமாக சுற்றுச் சுவர் இடிந்து விழுந்ததில் 4 கார்கள் நசுங்கி சேதமடைந்தன.

மயிலாப்பூர் முண்டகக் கன்னி அம்மன் கோவில் தெருவில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்று உள்ளது. மழை காரணமாக இக் குடியிருப்பில் சுற்றுச் சுவர் இடிந்து விழுந்தது. இதில் குடியிருப்பு வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 4கார்கள் நசுங்கி சேதம் அடைந்தது.

இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இந்த சுற்றுச் சுவரின் பின்புறத்தில் ஏராளமான மார்பிள் கற்கள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. இதனால் நேற்று பெய்த மழையால் சுமை தாங்காமல் சுவர் இடிந்து விழுந்திருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள். இது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.

இதேபோல, நுங்கம்பாக்கம் கங்கைகரைபுரம் உள்ள குடிசைமாற்று வாரியத்துக்கு சொந்தமான அடுக்குமாடி குடியிருப்பில், 3வது மாடியின் பால்கனி இடிந்து விழுந்தது. ஆனால் அதிர்ஷ்டவசமாக இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

தாமிரபரணியில் வெள்ளப் பெருக்கு:

அடை மழை காரணமாக நெல்லை, தாமிரபரணி ஆற்றில் கடும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. பாபநாசம், அம்பாசமுத்திரம், சேரன்மாதேவி, நெல்லை, ஸ்ரீவைகுண்டம், ஏரல், முக்காணி பகுதியில் கரையை முட்டி மோதி வெள்ளம் செல்கிறது.

தாமிரபரணி ஆற்றின் ஓரம் உள்ள குறுக்குத்துறை பாலம், ஏரல் பாலம் போன்றவை வெள்ளத்தில் மூழ்கியது. இதனால் அந்த வழியாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

களக்காடு பகுதியில் நம்பியாறு அணை நிரம்பி வழிகிறது. இதனால் நாங்குநேரி, ஆத்தங்கரை பள்ளிவாசல் பகுதிகளில் உள்ள கரையோர மக்களை வெளியேற்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

நெல்லை சந்திப்பு கைலாசபுரம், மீனாட்சிபுரம், சி.என்.கிராமம், குறுக்குத்துறை பகுதிகளில் ஆற்றோரம் குடியிருந்தவர்களின் வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது. இந்தப் பகுதியில் உள்ள சுமார் 1500 வீடுகள் வெள்ளத்தில் சிக்கியது. அதில் இருந்த மக்கள் மேடான பகுதிகளுக்கு சென்றனர்.

குளங்கள் ஆன குடியிருப்புகள்:

நெல்லை- தூத்துக்குடி மாவட்டங்களில் மட்டும் சுமார் 50-க்கும் மேற்பட்ட குளங்கள் நிரம்பி குடியிருப்புக்குள் தண்ணீர் புகுந்தது. இதனால் ஏராளமான சாலைகள் அரித்து, போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.

நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தில் மட்டும் சுமார் 5 ஆயிரம் வீடுகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதில் 100-க்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்து விழுந்தன.

இன்று அதிகபட்சமாக செங்கோட்டையில் 43 மில்லி மீட்டர் மழை பெய்தது. நாங்குநேரியில் 35 மி.மீ. மழையும், ஆலங்குளத்தில் 40 மி.மீ. மழையும், தென்காசியில் 37 மி.மீ. மழையும் பதிவாகி உள்ளது.

பாபநாசம் அணைக்கு வினாடிக்கு 3 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

இதனால் நீர்மட்டம் ஒரே நாளில் 3 அடி உயர்ந்து இன்று 104.65 அடியாக உள்ளது. சேர்வலாறு அணை நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து 119.68 அடியாக உள்ளது. மணிமுத்தாறு அணை 95.40 அடியாக உள்ளது. தொடர்ந்து மற்ற சிறு அணைகளும் வேகமாக நிரம்பி வருகிறது.

பயிர்கள் நாசம் - பலத்த சேதம்:

விவசாய பகுதிகள் அனைத்தும் நீரில் மூழ்கின. நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தில் சுமார் 50 ஆயிரம் ஏக்கர் நிலம் நீரில் மூழ்கி நெற்கதிர்கள் அழுகி விட்டது.

இதுதவிர பயிறுவகைககள், உளுந்து, பருத்தி, வாழை மற்றும் காய்கறி பயிர்களும் அழுகி பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது.

நெல்லை மாவட்டத்தில் மட்டும் சுமார் ரூ. 35 கோடிக்கு பயிர் சேதம் ஏற்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் ரூ. 15 கோடி சேதம் ஏற்பட்டுள்ளது. 2 மாவட்டத்திலும் மொத்தம் ரூ. 50 கோடிக்கு பயிர் சேதம் ஏற்பட்டுள்ளது.

இதுபோக உப்பு மற்றும் மீன்பிடி தொழிலும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

மழை தொடரும்-வானிலை மையம்:

புயல் சின்னம் குறித்து சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வானிலை ஆராய்ச்சி மைய இயக்குநர் எஸ்.ஆர்.ரமணன் கூறுகையில், லட்சத்தீவு, மாலத்தீவு அருகே நேற்று நிலை கொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை மேலும் வலுவடைந்து இன்று காலை கேரளக் கடற்கரையில், அரபிக் கடலை ஒட்டியுள்ள லட்சத் தீவு பகுதியில் நிலை கொண்டிருந்தது.

இது வலுவடைந்து வடக்கு நோக்கி நகரும். இதனால் அடுத்த 48 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுவையில் பெரும்பாலான இடங்களில் மழையும், ஓரிரு இடங்களில் கன மழையும் பெய்யக் கூடும்.

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கடலாடியில் 10 செமீ மழை பெய்துள்ளது என்றார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+