அறிஞர் அண்ணாவின் வளர்ப்பு மகன் பரிமளம் தற்கொலை

இவர் தனது குடும்பத்தினருடன் சென்னை நுங்கம்பாக்கம் அவென்யூ சாலையில் வசித்து வந்தார். அரசு மருத்துவமனையில் டாக்டராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்.
கடந்த சில ஆண்டுகளாக இருதய நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். 10 நாட்களுக்கு முன் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து அப்பல்லோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.
உடல் நலம் தேறியதையடுத்து நேற்று மாலை தான் அவர் டிஸ்சார்ஜ் ஆகி வீடு திரும்பினார். ஆனால், வீடு திரும்பினாலும் கவலையுடன் காணப்பட்ட அவர், நானும் என் மனைவி சரோஜாவிடமே போய் விடுகிறேன் என்று கூறிக் கொண்டிருந்தார் (சரோஜா இரு ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட்டார்).
அவரைத் தேற்றிய குடும்பத்தார் அவரை தூங்க வைத்துவிட்டு உறங்கச் சென்றனர். இந் நிலையில் நள்ளிரவில் பரிமளம் வீட்டின் பின்புறம் உள்ள தோட்டத்துக்கு சென்று அங்கிருந்த கிணற்றுக்குள் குதித்தார்.
நள்ளிரவு 2 மணியளவில் பரிமளத்தின் மூத்த மகன் மலர்வண்ணன், தந்தையின் உடல் நிலை எப்படி உள்ளது என்பதை காண அவரது அறைக்குச் சென்றார். ஆனால், அவரைக் காணாதாதால் அதிர்ச்சியடைந்து வீட்டிலிருந்த அனைவரையும் எழுப்பினார்
அவர்கள் வீட்டிலும் தெருவிலும் பரிமளத்தை தேடி அலைந்தனர்.
இந் நிலையில் கிணற்றில் பரிமளத்தின் உடல் மிதந்தது. அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் நுங்கம்பாக்கம் போலீசாருக்கு தகவல் தந்தனர்.
திருவல்லிகேணி துணை கமிஷனர் ராமசுப்பிரமணி தலைமையிலான போலீஸ் படையும் தீயணைப்பு படையினரும் வந்து பரிமளத்தின் உடலை மீட்டனர்.
அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. பிரேத பரிசோதனைக்குப் பின் அவரது உடல் குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டது.
கிணற்றில் சுவற்றில் தலை மோதியதாலும் நீரில் மூழ்கியும் பரிமளம் இறந்ததாக பரிசோதனையில் தெரியவந்துள்ளது.
பரிமளம் தனது மனைவி சரோஜாவின் மறைவுக்குப் பின் மன அமைதி இழந்து தவித்து வந்துள்ளார். இதனால் உடம் நலம் பாதிக்கப்பட்டார். பரிமளத்தின் மருத்துவ செலவுகளால் அவரது குடும்பத்தினர் ஏராளமாக கடன் வாங்கியுள்ளனர்.
இந் நிலையில் தான் அவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
மறைந்த பரிமளத்திற்கு மலர்வண்ணன் (43), சவுமினியன் (40) என்ற 2 மகன்களும், இளவரசி (30) என்ற மகளும் உள்ளனர்.
மருத்துவப் பணியில் இருந்து ஓய்வு பெற்ற பின் அண்ணா பேரவை என்ற அமைப்பை உருவாக்கி அதன் தலைவராக இருந்த பரிமளம்,
அண்ணாவின் சொற்பொழிவுகளை தொகுத்து பல புத்தகங்கள் வெளியிட்டுள்ளார்.
திமுக, அதிமுக என எல்லா தரப்பிலும் மூத்த தலைவர்களுடன் நெருக்கம் இருந்தாலும் சுயநலமில்லாத பரிமளம், உதவி கேட்டு இதுவரை யாரையும் அணுகியதில்லை. அரசியலை தவிர்த்துவிட்டு வாழ்ந்து வந்தவர். அண்ணாவைப் போலவே நேர்மைக்குப் பேர் போனவர்.
தான் பிறர்க்கு பாரமாக இருப்பதாக நினைத்து புழுங்கி வந்தவர் இந்த தற்கொலை முடிவை நாடியுள்ளார்.
கருணாநிதி அஞ்சலி:
பரிமளம் இறந்த தகவல் அறிந்ததும் முதல்வர் கருணாநிதி இன்று காலை அவரது இல்லத்திற்கு சென்று பரிமளம் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். அமைச்சர்கள் பலரும் அஞ்சலி செலுத்தினர்.
ஜெயலலிதா இரங்கல்:
பரிமளத்தில் மறைவுக்கு அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா இரங்கல் தெரிவித்துள்ளார். மிக அடக்கமான மனிதரான பரிமளத்தின் மறைவு அவரது குடும்பத்தாருக்கு மட்டுமின்றி அண்ணாவுடன் தொடர்பு கொண்ட அனைத்து தரப்பினருக்கும் இழப்பாகும் என்று ஜெயலலிதா கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications