இலங்கை தேர்தல்-தமிழர் கூட்டமைப்பு புறக்கணிப்பு

Subscribe to Oneindia Tamil

கொழும்பு: இலங்கையின் கிழக்கு மாகாணத்திற்கு நடைபெறவுள்ள தேர்தலைப் புறக்கணிக்க முக்கிய தமிழர் கட்சியான தமிழ் தேசியக் கூட்டமைப்பு முடிவு செய்துள்ளது.

இதுதொடர்பாக அந்த கூட்டமைப்பு விடுத்துள்ள அறிக்கையில்,
அதிபர் ராஜபக்சே தீவிர சிங்கள தேசியவாதப் போக்கை கடைப்பிடித்து அரசியல் ரீதியாக, ராணுவ ரீதியாக அல்லது மனிதாபிமான ரீதியாக எடுத்த ஒவ்வொரு முடிவிலும் தீவிர சிங்கள தேசியவாதத்தை கட்டி எழுப்புவதை நோக்கமாகக் கொண்டே செயற்பட்டு வந்திருக்கின்றார். அதன் மூலம் அவர் தன்னை தீவிர சிங்கள தேசியத் தலைவராக அடையாளம் காட்டி வந்திருக்கின்றார்.

தமிழ் மொழி வாரியானதும், தொடர்ச்சியானதுமான வடக்கு-கிழக்கு மாகாணங்கள் 1987 ஆம் ஆண்டு உருவாக்கபட்ட, இந்திய-இலங்கை ஒப்பந்தத்தின் பிரகாரம் ஒன்றாக இணைக்கப்பட்டன. இணைக்கப்பட்ட இப்பிரதேசம் 18 வருடங்களுக்கும் மேலாகத் தொடர்ந்து நிலைபெற்று அடுத்தடுத்து வந்த 4 அரச தலைவர்களால் அங்கீகரிக்கப்பட்டு ஏற்றுக் கொள்ளப்பட்டது.

18 வருடங்களுக்குப் பின்பு இணைப்பை ஏற்படுத்திய நடைமுறையில் ஒரு தவறு இருப்பதாக அடிப்படை மீறல் வழக்கு ஒன்றின் மூலம் ஜே.வி.பியினால் நீதிமன்றத் தீர்ப்பொன்றை பெற முடிந்தது. சரித்திர ரீதியாக கிழக்கில் வாழ்ந்து வந்த தமிழ் குடிமக்கள் வழக்கில் தலையிட்டு தங்கள் நியாயத்தை முழுமையாகவும், நற்பயன் பெறக் கூடிய வகையிலும் முன்வைக்க கோரப்பட்ட கோரிக்கைக்கு அனுமதி மறுக்கப்பட்டது.

சமாதான முயற்சிகளைத் தொடர்வதற்கு, நடைமுறையில் இருக்கும் இணைந்த வடக்கு-கிழக்கு பிரதேச ஒழுங்கு ஒர் அஸ்திவாரக் கல்லாக அமையும் என்றும், அது எவ்விதத்திலும் குழப்பப்படக் கூடாதென்றும் ராஜபக்சவுக்கு அனைத்துலக சமூகத்தால் வலியுறுத்திக் கூறப்பட்டது. இருப்பினும் அவர் தீவிர சிங்கள தேசியவாதப் போக்கைக் கடைப்பிடித்து, தன்னைத் தீவிர சிங்கள தேசியத் தலைவராக அடையாளம் காட்டிக் கொண்டார். அதன் மூலமாக இந்திய-இலங்கை அனைத்துலக ஒப்பந்தத்தின் மூலம் சரித்திர ரீதியாக வாழ்ந்து வந்த தமிழ்ப் பேசும் மக்களுக்கு கிடைக்கப் பெற்ற நன்மைகள் மறுக்கப்பட்டன.

வட-கிழக்குப் பிரதேசத்தில் தமிழ் குடிமக்கள் வாழும் கிராமங்கள் மீது கடுமையான வான் தாக்குதல்கள், கண்மூடித்தனமாக எறிகணை வீச்சுக்கள் உட்பட தீவிரமான ராணுவத் தாக்குதல்களை ராஜபக்ச அரசு ஆரம்பித்தது.

இதில் பலியானவர்கள் தமிழ்ப் பொதுமக்களும், சில சமயங்களில் முஸ்லிம் மக்களும் ஆவர்.

இவற்றில் பல நூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்டார்கள். பல நூற்றுக்கணக்கானோர் அங்கஹீனப்பட்டும், படுகாயமடைந்தும் உள்ளனர். குடிமக்களின் சொத்துக்கள், வீடுகள், தோட்டங்கள், பயிர்கள், கால்நடைகள், விவசாயம், கடற்றொழில் உபகரணங்கள் அழிக்கப்பட்டன.

ஐந்து லட்சத்துக்கும் மேற்பட்ட தமிழ் மக்கள் குடிபெயர்ந்து, வாழ்வாதாரங்களை இழந்து அநாதைகளாகவும், அகதிகளாகவும் ஆக்கப்பட்டனர். கோவில்கள், பள்ளிக் கூடங்கள் போன்ற கட்டடங்களும் அழிக்கப்பட்டன.

அதேவேளையில், இலங்கை அரசுப் படைகளினாலும், அரசுப் படைகளுடன் இணைந்து செயற்படும் துணை ராணுவக் குழுக்களினாலும், வடக்கு-கிழக்கிலும் நாட்டின் ஏனைய பகுதிகளிலும் தமிழ் மக்கள் சட்டத்திற்கு விரோதமான கொலைகளுக்கும், பலவந்தமான ஆட்கடத்தல்களுக்கும் தொடர்ச்சியாக உட்படுத்தப்பட்டு வருகின்றார்கள். இச் செயல்களின் நோக்கம் தமிழ் மக்களைப் பயமுறுத்தி அவர்களை நாட்டை விட்டு வெளியேறச் செய்வதாகும்.

ராஜபக்சே அரசின் இறுதி இலக்கு தமிழ் மக்களை ராணுவ ரீதியாக அடிபணிய வைத்து அடக்கி ஆட்சி புரிவதேயாகும். ஏற்றுக்கொள்ளக் கூடிய ஒர் அரசியல் தீர்வை உருவாக்குவதற்கு விருப்பமற்ற, வல்லமையற்ற ராஜபக்சே அரசு ஒரு பெறுமதியற்ற அரசியல் ஒழுங்கை வடக்கு-கிழக்கில் வாழும் தமிழ் பேசும் மக்கள் மீது திணிப்பதற்கு முயற்சிக்கின்றது.

பிரிக்கப்பட்ட கிழக்கில், அவசரம் அவசரமாக நடத்தவிருக்கும் இத்தேர்தல் ஒரு திட்டமிட்ட கொடூரமான சதி நடவடிக்கையாகும்.

தமிழ் மக்கள் மீது நிறைவேற்றப்படும் பாதகமான செயல்களை மறைப்பதற்கு ஒரு புகைமண்டலமாக, தன்னுடைய தீய நோக்கங்களை அடைவதற்காக ராஜபக்சே அரசு, தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் என்ற ஆயுதத் தமிழ் துணைக் குழுவுடன் (கருணா குழு) இணைந்து செயல்படுகிறது.

சுய நிர்ணய உரிமையின் அடிப்படையில் தாங்கள் சரித்திர ரீதியாக வாழ்ந்து வந்த பிரதேசத்தில், போதிய சுயாட்சி என்ற தமிழ் பேசும் மக்களின் நியாயபூர்வமான அரசியல் அபிலாசைகளைத் தடை செய்வதே ராஜபக்சே அரசின் திடமான நோக்கம்.

கடந்த 2 வருடங்களுக்குள் இந்த அரசாங்கத்தால் தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட அளவற்ற தீங்குகளும், சேதங்களும், நாடு சுதந்திரமடைந்த பின் ஆட்சியிலிருந்த எந்த அரசாங்கத்தாலும் செய்யப்படவில்லை.

அவர்கள் சரித்திர ரீதியாக வாழ்ந்து வந்த பிரதேசத்தில் அவர்களைக் குழிதோண்டிப் புதைப்பதற்காக, அரசாங்கத்தால் திட்டமிடப்பட்டுள்ள பயங்கரமான பொறிக்குள் தமிழ் பேசும் மக்கள் அகப்படக் கூடாது.

இத்தேர்தல் மூலம் தனது கபடமான அரசியல் நிகழ்ச்சித் திட்டத்தை நிறைவேற்ற ராஜபக்சே எத்தனிக்கின்றார்.

எனவே தேர்தலில் பங்கேற்பதையோ கடந்த அரை நூற்றாண்டுகளுக்கு மேலாகத் தமிழ் மக்களால் கடைப்பிடிக்கப்பட்டு வந்த அடிப்படை கொள்கைகளுக்கு மாறாகவோ செயல்பட முடியாது என்பதால் கிழக்குத் தேர்தலில் போட்டியிடுவதில்லை என்று தீர்மானித்துள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+