போராட்டத்தில் வன்முறை கூடாது-கமிஷனர் எச்சரிக்கை
சென்னை: ஓகனேக்கல் விவகாரம் தொடர்பாக அமைதியான முறையிலேயே போராட்டங்கள் நடத்தப்பட வேண்டும். சட்டத்தை யாரும் கையில் எடுத்துக் கொண்டு வன்முறையில் இறங்கக் கூடாது என்று சென்னை மாநகர காவல்துறை ஆணையர் நாஞ்சில் குமரன் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக இன்று செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்,
ஜனநாயக ரீதியில் எதிர்ப்பை தெரிவிக்க வேண்டுமே தவிர, சட்டத்தை தங்கள் கையில் எடுத்துக் கொள்ளக் கூடாது. வன்முறையை காவல்துறை அனுமதிக்காது.
சென்னையில் நடந்த தாக்குதல் சம்பவங்கள் தொடர்பாக தி.நகரில் 15 பேரும், அசோக் நகரில் 20 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அமைதியான முறையில் போராட்டங்கள் நடத்தினால் அது அனைவருக்குமே நல்லது என்றார்.
திமுக தலைமையில் உண்ணாவிரதம்:
இதற்கிடையே, ஓகனேக்கல் விவகாரத்தில் தமிழர்கள் தாக்கப்படுவதைக் கண்டித்து சென்னை வில்லிவாக்கம் பகுதியில், திமுக தலைமையில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. இதில் பல்வேறு கட்சிகளையும் சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.
நாதமுனி தியேட்டர் அருகே நடைபெற்ற இந்த உண்ணாவிரதத்தை திமுக எம்எல்ஏ ப.ரங்கநாதன் துவக்கி வைத்தார். திமுக, அதிமுக, காங்கிரஸ், பாமக, கம்யூனிஸ்ட், தேமுதிக உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்தவர்கள் இதில் பங்கேற்றனர். தேமுதிக சார்பில் கவுன்சிலர் பிரபாகரன் கலந்து கொண்டார்.












Click it and Unblock the Notifications