வெள்ள சேதம்: மத்திய குழு வந்தது - இன்று முதல் ஆய்வு
சென்னை: தமிழகத்தில் மழை, வெள்ளத்தால் ஏற்பட்டுள்ள பாதிப்பை ஆய்வு செய்ய நான்கு பேர் கொண்ட மத்திய குழு தமிழகம் வந்துள்ளது. இன்று முதல் அவர்கள் வெள்ள பாதிப்பு பகுதிகளைப் பார்வையிட்டு ஆய்வு செய்யவுள்ளனர்.
மத்திய உள்துறை இணைச் செயலாளர் தர்மேந்திர சர்மா தலைமையில் வந்துள்ள இக்குழுவில், தீனாநாத், டாக்டர் கே.மனோகரன், எம்.ஜே.ஜெயச்சந்திரன் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். நேற்று இரவு நான்கு பேரும் சென்னை வந்தனர்.
ஏப்ரல் 8ம் தேதி வரை இக்குழுவினர் வெள்ள சேதத்தை மதிப்பிடவுள்ளனர். 9ம் தேதி மாநில வருவாய்த்துறை அமைச்சர் திண்டுக்கல் ஐ.பெரியசாமியுடன் அவர்கள் ஆலோசனை நடத்துகின்றனர். அன்றே டெல்லி செல்கின்றனர்.
இன்று கடலூர், நாகை, திருவாரூர் மாவட்டங்களில் இக்குழு விஜயம் செய்கிறது. நாளை தஞ்சாவூர் செல்கிறது. பின்னர் திருச்சி சென்று மாவட்ட ஆட்சித் தலைவருடன் சேத விவரம் குறித்து ஆலோசனை நடத்துகின்றனர்.
பின்னர் திருச்சியிலிருந்து ஹெலிகாப்டர் மூலம் தூத்துக்குடி சென்று அங்கு சேத விவரத்தை ஆய்வு செய்கின்றனர்.
ஏப்ரல் 8ம்தேதி நெல்லை, விருதுநகர், ராமநாதபுரம் மாவட்டங்களில் ஆய்வு நடத்துகின்றனர். பின்னர் மதுரை திரும்பி அங்கு மாவட்ட ஆட்சித் தலைவருடன் ஆலோசனை நடத்துகின்றனர்.
9ம் தேதி சென்னை திரும்பும் நிபுணர் குழு அமைச்சர் பெரியசாமியுடன் தலைமைச் செயலகத்தில் ஆலோசனை நடத்துகின்றனர்.












Click it and Unblock the Notifications