சோனியா கூட்டத்திற்கு 'துப்பாக்கி'யுடன் வந்தவரால் சலசலப்பு
காரைக்குடி: பொம்மைத் துப்பாக்கியுடன் சோனியா காந்தி கலந்து கொண்ட நிகழ்ச்சிக்கு வந்த காங்கிரஸ்காரரால் பரபரப்பு ஏற்பட்டது.
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி நேற்று காரைக்குடியில் சில நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். சோனியா காந்தி விழா நடந்த இடத்திற்கு வருவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு அங்கு லேசான சலசலப்பு ஏற்பட்டது.
தஞ்சை மாவட்டம் திருத்துறைப்பூண்டியைச் சேர்ந்தவர் சிவ சண்முகவேல். இவர் விழா நடந்த அழகப்பா மெட்ரிகுலேஷன் மேல் நிலைப் பள்ளி நுழைவாயிலில், நுழைந்தபோது அங்கு வைக்கப்பட்டிருந்த மெட்டல் டிடெக்டர் கருவி பீப் ஒலியை எழுப்பியது.
இதையடுத்து அங்கு பரபரப்பு ஏற்பட்டது. சிவசண்முகவேலை போலீஸார் சோதனையிட்டபோது அவரிடம் துப்பாக்கி இருந்தது. ஒரு பிளாஸ்டிக் பையில் மறைத்து அதைக் கொண்டு வந்திருந்தார் சண்முகவேல். ஆனால் அது பொய்த் துப்பாக்கி என்பது சோதனையில் தெரிய வந்தது.
மத்திய உளவுத் துறை, தமிழ்நாடு சிறப்புப் புலனாய்வுப் பிரிவு போலீஸ் அதிகாரிகள் விரைந்து வந்து சண்முகவேலிடம் விசாரணை நடத்தினர்.
தனது வீட்டுக் குழந்தைகள் பையில் பொம்மைத் துப்பாக்கியைப் போட்டிருக்கலாம் என அவர் தெரிவித்தார். தான் மாநில செயற்குழு உறுப்பினர் என்றும், திருத்துறைப்பூண்டியிலிருந்து தொண்டர்களை அழைத்துக் கொண்டு வந்திருந்ததாகவும் தெரிவித்தார் சண்முகவேல்.
இதையடுத்து அவரை கடுமையாக எச்சரித்து போலீஸார் விடுவித்தனர்.












Click it and Unblock the Notifications