ஈராக் சிறுமியின் எலும்பு வளர்ச்சிக்கு சென்னையில் ஆபரேஷன்
சென்னை: எலும்பு வளர்ச்சியில்லாத ஈராக் சிறுமிக்கு வளர்ச்சிக்கான நவீன அறுவை சிகிச்சை செய்து சென்னை டாக்டர்கள் சாதனை படைத்துள்ளனர்.
ஈராக் நாட்டில் மொசுல் நகரைச் சேர்ந்த பலசரக்கு கடைக்காரர் அகமதுவின் மகள் நபா. இவளது தாய் ஒரு பள்ளியில் கணக்கு ஆசிரியை. 5 வயதான நபாவுக்கு பிறவியிலேயே கைகளும், கால்களும் இயல்பைக் காட்டிலும் குட்டையாக இருந்தன. ஆனால் மற்ற உடல் உறுப்புகள் வளர்ச்சி அடைந்துள்ளன. 'எகான்ட்ரோ ப்ளேசியா' என்ற இந்த நோய்க்கு ஈக்கில் போதிய சிகிச்சை வசதி இல்லை.
இதனால் நபாவை சென்னை சவுந்திரபாண்டியன் எலும்பு மூட்டு சிறப்பு மருத்துவமனைக்கு அவளது பெறறோர் அழைத்து வந்தனர். அங்கு நபாவுக்கு கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் முதல் மார்ச் வரை பல கட்டங்களாக நவீன 'அவய நீட்டிப்பு' அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
டாக்டர்கள் சிவமுருகன், ரவி சுப்பிரமணியம், பேராசிரியர் சவுந்திரபாண்டியன் ஆகியோர் நபாவுக்கு அறுவை சிகிச்சை செய்தனர். சிகிச்சைக்குப் பிறகு நபாவின் எலும்புகள் வளர்ச்சி அடைந்துவருகிறது.
இதுகுறித்து டாக்டர் சிவமுருகன் நிருபர்களிடம் கூறுகையில், பொதுவாக ஐந்து வயது குழந்தைகள் 120 செ.மீ. உயரம் இருக்க வேண்டும். ஆனால் நபா 84 செ.மீ. மட்டுமே இருந்தாள். இவளுக்கு நவீன சிகிச்சை முறையில் கால் மற்றும் கைகளை நீட்டித்துள்ளோம்.
இதில், நபாவின் கை, கால்களில் மூட்டுக்கு மேலேயும் கீழேயும் உள்ள எலும்புகளை வெட்டி, இடைவெளி விட்டு அவற்றை இணைத்தோம். இதன்மூலம் கடந்த 6 மாதங்களில் நபா 12 செ.மீ. வளர்ச்சி அடைந்திருக்கிறாள்.
சில ஆண்டுகளில் மற்ற குழந்தைகளைப் போல நபா வளர்வாள். இந்த அறுவை சிகிச்சைக்கு வெளிநாட்டில் 25 லட்ச ரூபாய் செலவாகும். எங்கள் மருத்துவமனையில் 4 லட்சம் செலவானது. சிறுமியின் குடும்ப வறுமை காரணமாக குறைந்த கட்டணமே நிர்ணயிக்கப்பட்டது என்றார் டாக்டர் சிவமுருகன்.












Click it and Unblock the Notifications