தமிழக, கர்நாடக எல்லையில் அமைதி திரும்பியது
ஓசூர்: கடந்த பத்து நாட்களாக சரமாரியாக நடந்து வந்த போராட்டம் தமிழக, கர்நாடக எல்லையில் அடியோடு குறைந்துள்ளது. இருப்பினும் இரு மாநில போலீஸாரும் தொடர்ந்து பாதுகாப்பு மற்றும் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
ஓகனேக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டத்தை எதிர்த்து கர்நாடகத்தில் கன்னட அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தன. அதேபோல தமிழகத்திலும் போராட்டங்கள் வெடித்தன.
இரு மாநிலப் பேருந்துகளும் தாக்கப்பட்டன, தீவைத்துக் கொளுத்தப்பட்டன. கர்நாடக வன்முறையைக் கண்டித்து சென்னையில் திரையுலகினர் உண்ணாவிரதப் போராட்டத்திலும் ஈடுபட்டனர்.
இந்த நிைலயில், ஓகனேக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டத்தை நிறுத்தி வைப்பதாக முதல்வர் கருணாநிதி அறிவித்துள்ளதால் கர்நாடகத்தில் போராட்டங்கள் வெகுவாக குறைந்துள்ளன. ஓரிரு அமைப்புகள் மட்டும் தொடர்ந்து போராட்டங்கள் நடத்திக் கொண்டுள்ளன.
அதேபோல, தமிழக, கர்நாடக எல்லைப் பகுதியான ஜூஜுவாடி மற்றும் அத்திப்பள்ளி ஆகிய இடங்களில் போராட்டங்கள் அடியோடு குறைந்துள்ளன. இதனால் அங்கு பதட்டம் தணிந்துள்ளது.
இருப்பினும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தொடர்ந்து இரு மாநில போலீஸாரும் கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இதையடுத்து இரு மாநிலங்களுக்கும் இடையே பெரும் பாதிப்பை சந்தித்துள்ள பஸ் போக்குவரத்தை மீண்டும் மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதேபோல ஓகனேக்கலிலும் போராட்டங்கள் குறைந்துள்ளதால் அங்கு இயல்பு நிலை திரும்பியுள்ளது. இதனால் பரிசல் ஓட்டிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். சுற்றுலாப் பயணிகளும் முன்பு வரத் தொடங்கியுள்ளனர்.
இந்த நிலையில், ஈரோட்டில் இன்று ரயில் மறியல் போராட்டம் நடத்த முயற்சிக்கப்பட்டது. இதையடுத்து 100 பேரை போலீஸார் கைது செய்தனர்.












Click it and Unblock the Notifications