ஓகனேக்கல்: நிறுத்திவைக்க காரணம் நெருக்கடியா? விஜயகாந்த் கேள்வி
சென்னை: ஒகேனக்கல் திட்ட விவகாரத்தில் முதல்வர் கருணாநிதியின் முடிவு அரசியல் சந்தர்ப்பவாதமா அல்லது அரசியல் நெருக்கடியா என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
ஒகேனக்கல் கூட்டுக்குடிநீர் திட்ட விவகாரத்தில் கர்நாடகத்தில் புதிய ஆட்சி அமையும் வரை அமைதி காப்போம் என்று முதல்வர் கூறியுள்ளார்.
மக்கள் எழுச்சி என்பது மின்சார ஸ்விட்ச் போட்டால் எரியும் விளக்கு போலவும், பின்னர் வேண்டாம் என்றால் நிறுத்தி விடலாம் என்று கருதுகிறார் போலும். கர்நாடகத்தில் உள்ள சில தீய சக்திகள் தொடர்ந்து இழைத்து வரும் கொடுமையின் உச்சக்கட்டமாக தமிழக மக்களே முன்வந்து போராட்டத்தில் ஈடுபடுவதாகும்.
எந்த நல்லுறவும் நீதியையும் நியாயத்தையும் அடிப்படையாக கொண்டிருக்க வேண்டும். கற்பழித்த காமுகனுக்கும் கன்னிகைக்கும் எப்படி ஒற்றுமை ஏற்படுத்த முடியும்? ஏற்கனவே ஒப்புக் கொண்ட குடிநீர்த் திட்டத்தை ஏற்க மறுத்து தமிழ் மக்களின் உயிர்களையும் உடமைகளையும் கன்னட வெறியர்கள் சேதப்படுத்தி வருகின்றனர்.
கர்நாடக காங்கிரஸ் தலைவர் எஸ்.எம்.கிருஷ்ணா உச்சநீதிமன்றத்துக்கு செல்லப்போவதாக கடுமையான நிலையை எடுத்து, மத்திய அரசு கவிழ்ந்தாலும் பரவாயில்லை என்றார். இன்றும் தமிழ் திரைப்படங்களை திரையிட தடையுள்ளது. அந்த அளவுக்கு கர்நாடகத்தில் வெறி தாண்டவமாடுகிறது.
தமிழ்நாட்டில் பல கட்சிகள் களம் இறங்கியும், திரையுலகம் உண்ணாவிரதம் இருந்தும், தமிழ் அமைப்புகள் போராட்டம் நடத்தியும் தமிழ் மக்களின் உணர்வுகளுக்கு நியாயமான வடிவம் கொடுத்துள்ளனர். இவ்வளவுக்கு பிறகு இப்போது முதல்வர் கருணாநிதி போராட்டங்களை கைவிடுங்கள் என்றால் என்ன அர்த்தம்? முடிவு எடுக்கும் முன் மக்களின் உணர்வுகளை மதித்திருக்க வேண்டாமா? அழைத்துப் பேசியிருக்க வேண்டாமா?
உள்ளூர் பிரச்னைகளுக்கெல்லாம் அனைத்துக் கட்சி கூட்டம் போடும் முதல்வர் இந்த முக்கிய முடிவு எடுப்பதற்கு அனைத்துக் கட்சிகளையும், உண்ணாவிரதம் இருந்த கலைத்துறையினரையும், வழக்கறிஞர்களையும் கலந்து பேசியிருக்க வேண்டாமா?
இது, தனது கூட்டணி கட்சியான காங்கிரஸ் கர்நாடகத்தில் வெற்றி பெற வேண்டும் என்ற அரசியல் சந்தர்ப்பவாதமா? அல்லது அரசியல் நெருக்கடியா? அரசியல் தந்திரமா? எலும்புகளை உடைத்தாலும் இத்திட்டத்தை நிறைவேற்றுவோம் என்று பேசியதால் கர்நாடகத்தில் காங்கிரஸ் தோற்குமானால் தன் மீது பழி வந்துவிடும் என்று அச்சத்தாலா?
இத்திட்டத்தை 1998லேயே தொடங்கியிருக்கலாம். அதைவிட்டுவிட்டு அந்த திட்டத்தை தள்ளிப் போட முயற்சிக்கிறார். காவிரி பிரச்னையில் 1972ல் செய்த வரலாற்று தவறை மீண்டும் கருணாநிதி செய்கிறாரா என்பதே என் கேள்வி.
சில நோய்கள் மருந்தால் குணமாகலாம். சில நோய்களுக்கு அறுவை சிகிச்சை தேவை. இந்திய ஒற்றுமை என்ற உடம்பில் கன்னடர்களின் வெறியாட்டம் என்ற அநீதி கட்டியாக உள்ளது. நீதியை நிலைநிறுத்த அறுவை சிகிச்சைக்காக தமிழ்நாட்டு எழுச்சி என்ற கத்தி எடுத்துள்ளனர்.
இந்த நிலையில் கருணாநிதி கத்தியை கீழே போடச் சொல்வது நோயாளிக்கும் ஆபத்து நோயும் என்றும் தீராது. இதை உணர்ந்துள்ளதால் தமிழக மக்களின் உணர்வை பிரதிபலிக்கும் வகையில் வரும் 10ம் தேதி தேமுதிக ஆர்பாட்டம் நடத்தும் என்று கூறியுள்ளார் விஜயகாந்த்.












Click it and Unblock the Notifications