வாலிபரை வெட்டிக் கொலை-3 பேர் கைது
நெல்லை: கள்ளக் காதல் தொடர்பாக ஏற்பட்ட முன்விரோதத்தில், வாலிபர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
நெல்லை மாவட்டம் சுரண்டையைச் சேர்ந்தவர் சக்திவேல். இவரது மனைவி ரதி. ஆனைபுரத்தை சேர்ந்த முருகன் என்பவருடன் ரதிக்கு கள்ளத் தொடர்பு ஏற்பட்டது. இதையறிந்த சக்திவேல், மனைவியையும் முருகனையும் கண்டித்தார். ஆனால் இருவரின் கள்ளத் தொடர்பும் நீடித்தது. முருகனை கண்டித்து வைக்கும்படி அவரது அண்ணன் சமுத்திரத்திடம் சக்திவேல் கூறினார். இதில் இருவருக்கும் தகராறு ஏற்பட்டது.
இதனால் ஆத்திரமடைந்த சக்திவேல் உறவினர்கள் மாரியப்பன், அவரது தம்பி தருமர் ஆகியோருடன் சேர்ந்து முருகனை தாக்கினார். இதுகுறித்து சுரண்டை போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் கடந்த 10 நாட்களுக்கு முன் வையம்பட்டி பகுதியில் கள் இறக்கியதாக மாரியப்பனை போலீசார் கைது செய்தனர். பின்னர் மாரியப்பன் ஜாமினில் விடுதலையானார்.
போலீஸ் தன்னை கைது செய்ததற்கு சமுத்திரம்தான் காரணம் என்று நினைத்து அவரை கொலை செய்ய மாரியப்பன் திட்டமிட்டார். இதையடுத்த தனது தம்பி தருமர், உறவினர் முருகன் ஆகியோருடன் நள்ளிரவில் சமுத்திரம் வேலை செய்யும் தோப்புக்கு சென்றனர்.
அங்கு தூங்கிக் கொண்டிருந்த சமுத்திரத்தை 3 பேரும் சேர்ந்து கழுத்து, மார்பு, முகம் உள்பட பல இடங்களில் அரிவாளால் சராமரியாக வெட்டினர். அப்போது சமுத்திரத்தின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அவரது மைத்துனர் சேர்மகனியையும் வெட்டினர். இதில் சமுத்திரம் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார்.
இதைபார்த்த 3 பேரும் அங்கிருந்து தப்பினர். சத்தம் கேட்டு ஓடிவந்த அப்பகுதியினர் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த சேர்மகனியை மணப்பாறை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை செய்தனர்.
வேறொரு தோப்பில் பதுங்கியிருந்த மாரியப்பன், முருகன், தருமர் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.












Click it and Unblock the Notifications