லண்டன்-ரூ110 கோடி ஹெராயினுடன் இந்தியர் கைது
லண்டன்: லண்டனில் ரூ.110 கோடி மதிப்புள்ள ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக இந்தியர் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
இங்கிலாந்து தலைநகர் லண்டனின் கென்ட் பகுதியில் ஒரு கார் சர்வீஸ் ஸ்டேஷன் உள்ளது. அங்கி நின்று கொண்டிருந்த 2 கார்களில் இருந்து 350 கிலோ ஹெராயினை போலீசார் பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ரூ.110 கோடியாகும்.
இதுதொடர்பாக இந்தியாவைச் சேர்ந்த ஹர்மிந்தர் சனா, பாகிஸ்தானைச் சேர்ந்த அடிப்கான், நெதர்லாந்தைச் சேர்ந்த பாட்ரிக் கஸ்டர் ஆகியோரை கைது செய்தனர்.
லண்டனின் தென்கிழக்குப் பகுதியில் உள்ள நெடுஞ்சாலையில் ஒரு காரில் இருந்து மற்றொரி காருக்கு பாட்ரிக் கஸ்டர் பெட்டிகளை மாற்றி வைத்துக் கொண்டிருந்தார். இதை பார்த்த போலீசார் கார் சர்வீஸ் ஸ்டேஷனில் 3 பேரையும் கையும் களவுமாக பிடித்தனர்.
10 பெட்டிகளில் அடைக்கப்பட்டிருந்த ஹெராயினை பறிமுதல் செய்தனர். 3 பேரிடமும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
இங்கிலாந்தில் இவ்வளவு பெரிய அளவில் போதைப் பொருள் சிக்கியிருப்பது இதுவே முதல் முறை என்று போலீஸார் தெரிவித்துள்ளனர்.
இந்தக் கடத்தல் பின்னணியில் மிகப் பெரிய கும்பல் தொடர்பு கொண்டிருக்கலாம் எனவும் போலீஸார் தெரிவித்துள்ளனர்.