வடிவேலு பாணியில் டைம் கீப்பரை தாக்கிய வாலிபர் கைது
விளாத்திகுளம்: விளாத்திகுளம் பஸ் நிலையத்தில் டைம் கீப்பரிடம் நடிகர் வடிவேலு பாணியில் பஸ் ரூட் பற்றி கேட்டு தகராறு செய்ததுடன் அவரை தாக்கவும் செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
விளாத்திகுளம் அரசு போக்குவரத்து பணி மனையில் நேரக் காப்பாளராக (டைம் கீப்பர்) பணிபுரிபவர் சுந்தர்ராஜ். இவருக்கு இன்று நேரம் சரியில்லை போலும். ஒரு வாலிபரிடம் சிக்கி படாதபாடு பட்டு விட்டார்.
இன்று காலை விளாத்திகுளம் பஸ் நிலையத்தில் பணியில் இருந்தார் சுந்தரராஜ். அப்போது அங்கு வந்த வாலிபர் ஒருவர் ஜமீன்செங்கம்படை செல்ல வேண்டும் எந்த பஸ் போகும் என்று கேட்டார். அதற்கு சுந்தர்ராஜ் பதில் சொல்லி முடிப்பதற்குள் அந்த பஸ் எங்க போகுதய்யா, இந்த பஸ் எங்க போகுதய்யா என்று கேட்டதுடன் குலையன்கரிசலுக்கு, குறுக்குசாலைக்கு எந்த பஸ் போகும் சொல்லுய்யா, சொல்லு, ஓழுங்கு மரியாதையா சொல்லுய்யா, ஓட்டப்பிடாரத்துக்கு எந்த பஸ் போகும்னு 'ஓடாம' சொல்லுய்யா சொல்லு என்று வடிவேலு பாணியில் வெறுப்பேற்றினார்.
இதனால் கடுப்படைந்த சுந்தர்ராஜ் அந்த வாலிபரை திட்டினார். அதற்கும் மடங்காத அந்த வாலிபர் நாங்க கேட்கிறதுக்கு பதில் சொல்லதான் கவர்மெண்ட் உன்னை வேலையில் வச்சிருக்கு. அதை விட்டுட்டு கோபப்பட்டா வேலைக்கு ஆகாதண்ணே, அண்ண்ணண்ணே என்று நக்கலும் அடித்துள்ளார்.
இதனால் அவர்களுக்குள் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த வாலிபர் தனது நகத்தால் டைம் கீப்பரின் முகத்தில் கீறினார்.
பயந்து போன சுந்தரராஜ், இதுகுறித்து விளாத்திகுளம் போலீசில் புகார் செய்தார். போலீசார் அந்த வாலிபரை கைது செய்து விசாரித்ததில் அவர் எட்டையாபுரம் அருகேயுள்ள இளம்பவுனத்தை சேர்ந்தவர் என்றும் அவரது பெயர் சேவக பெருமாள் என்றும் தெரியவந்தது.
மப்பில் இருந்தாரா அல்லது மன நலம் சரியில்லாதவரா என்று போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications