சித்திரை திருநாள்- ஜெ, வைகோ வாழ்த்து
சென்னை: சித்திரைத் திருநாளையொட்டி அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, பாஜக மாநிலத் தலைவர் இல.கணேசன் ஆகியோர் மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
கடந்த ஆண்டு வரை சித்திரை மாத முதல் நாள் தான் தமிழ்ப் புத்தாண்டாகக் கொண்டாடப்பட்டு வந்தது.
இந் நிலையில், சங்க காலத்தில் தமிழர்கள் தை மாதம் முதல் நாளைத் தான் தமிழ்ப் புத்தாண்டாடக் கொண்டாடி வந்தனர், காலப்போக்கில் இது வட இந்திய ஆதிக்கத்தால் சித்திரைக்கு மாற்றப்பட்டுவிட்டது என்று கூறி, மீண்டும் தை மாதப் பிறப்பையே தமிழர் புத்தாண்டு தினமாக அறிவிக்க வேண்டும் என தமிழறிஞர்கள் கோரி வந்தனர்.
இதை ஏற்ற முதல்வர் கருணாநிதி, தை மாதம் முதல் தேதியை தமிழ் புத்தாண்டாக அறிவித்தார். இது தொடர்பாக தமிழக அரசு சட்டமும் இயற்றியது.
ஜெயலலிதா:
இந் நிலையில் நாளை சித்திரைப் பிறப்பையொட்டி அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில்,
சித்திரைத் திருநாளை விமரிசையாகக் கொண்டாடும் தமிழ் மக்கள் அனைவருக்கும் என் இதயம் கனிந்த தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துக்களை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழகம் சுடர்விட்டு பிரகாசிக்கவும், ஏழை எளிய மக்கள் இன்புற வாழவும், தம் மக்களின் நலனுக்காக தமிழக மக்களின் நலன்களை தாரை வார்க்கும் சுயநலவாதிகளும், துரோகிகளும் கூனிக் குறுகிடவும், ஆணவமும், ஆடம்பரமும், வீண் ஆரவாரமும் அடங்கி ஒடுங்கிடவும், உண்மையான மக்களாட்சியின் உன்னதத் தன்மைகள் மீண்டும் மலர்ந்து மணம் வீசிடவும் இந்த நன்னாளில் சூளுரைப்போம்.
தமிழக மக்களை தற்போது வாட்டி வதைத்துக் கொண்டிருக்கிற துன்பங்களும், துயரங்களும் அறவே நீங்கி அமைதியும், ஆனந்தமும், குதூகுலமும் சரிவதாரி ஆண்டில் பூத்துக் குலுங்க வேண்டும் என்ற என்னுடைய விருப்பத்தைத் தெரிவித்து, அனைத்துத் தமிழர்களுக்கும் எனது உளமார்ந்த தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகளை மீண்டும் ஒரு முறை உவகையுடன் உரித்தாக்கிக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.
வைகோ:
மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில்,
மழையும், குளிரும், பனியும் மறைந்து மஞ்சள் வெயில் கண்டு உயிரினங்கள் கொஞ்சிக் குதூகலிக்க வையகம் சிலிர்க்கும் இளவேனிலின் வருகைக்குக் கட்டியம் கூறி இத்தரை மகிழ்ந்திட சித்திரை மலர்ந்துள்ளது.
தமிழர் வாழ்வோடும், வரலாறோடும் பின்னிப் பிணைந்த சித்திரையின் மாட்சிக்கு எத்தனையோ சாட்சியங்களை இலக்கியங்கள் கொண்டுள்ளன.
இந்திர விழா, வசந்த விழா என்றெல்லாம் கொண்டாடி களித்தது இச் சித்திரைத் திருநாளில்தான். திங்களையும், செங்கதிரையும் மாமழையையும் போற்றி இயற்கையோடு இயைந்து இன்புற்று வாழ்ந்த தமிழரின் சிறப்புக்குச் சித்திரைத் திருநாள் சிறந்த எடுத்துக் காட்டாகும்.
மதிமுக சார்பில் தமிழ்ப் பெருமக்களுக்கு சித்திரைத் திருநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதில் மட்டமற்ற மகிழ்ச்சி அடைகிறேன்.
இல.கணேசன்:
பாஜக மாநிலத் தலைவர் இல.கணேசன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
உலகத்தில் முதன் முதலாக நாகரீகம் பண்பாடு தோன்றி வளர்ந்த நாடு நம் நாடு. 5,000 ஆண்டுக்கு முந்தைய புராணங்களில் கிரகங்களின் அசைவு குறித்து சொல்லப்பட்டுள்ளது. மிகிரர் வகுத்து அளித்த மிகிர சம்ஹிதா இன்றும் வானவியலுக்கு ஆதாரமாக உள்ளது.
காலக் கணக்கை வகுத்த நம் முன்னவர்கள் இந்த சித்திரை மாதத்தை ஒட்டிய காலம் ஆண்டு துவங்குவதாக கணித்தார்கள்.
அரசின் கொள்கை காரணமாக ஆண்டின் துவக்கத்தை மாற்றியமைக்காக ஆலய நடைமுறைகளில் குறிக்கிடுவது அத்துமீறிய செயல். இது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது என்று கூறியுள்ளார்.
ஆர்.எம். வீரப்பன்:
எம்.ஜி.ஆர். கழகத் தலைவர் ஆர்.எம்.வீரப்பன் தனது வாழ்த்துச் செய்தியில்,
தை முதல்நாள் தான் தமிழர்களின் புத்தாண்டு தொடக்க நாள் என்றாலும் நீண்ட காலமாக தமிழ் மக்கள் சித்திரை முதல் நாளை தமிழ் புத்தாண்டாகக் கொண்டாடி வருகிறார்கள்.
சித்திரை பிறக்கிற நாளன்று, இந்திய அளவில் பிற்படுத்தப்பட்டோருக்கு 27 சதவிகிதம் மத்திய அரசின் கல்வி நிலையங்களில் ஒதுக்கீடு செல்லும் என்ற உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு வந்துள்ளது.
இதைப் போன்றே, ஓகேனக்கல் குடிநீர் திட்டம் வருகிற ஆண்டில் பணி தொடங்கும். மேலும் கேரளா, ஆந்திரா போன்ற மாநிலங்களோடு ஏற்பட்டுள்ள நீர்வள சிக்கல்களும் முதல்வர் கருணாநிதியின் தீர்க்கமான நடவடிக்கைகளால் தீர்க்கப்படும்.
வருகிற ஆண்டுகள் தை முதல் நாள் தமிழர்களின் புத்தாண்டாகத் தொடங்கும் என்று எம்.ஜி.ஆர். கழகத்தின் சார்பில் வாழ்த்துகிறேன்.
டாக்டர் சேதுராமன்:
அகில இந்திய மூவேந்தர் முன்னணிக் கழக தலைவர் டாக்டர் சேதுராமன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தமிழ் ஆண்டாக தைத் திங்கள் முதல் நாளை அரசு ஒருபுறம் ஆணை பிறப்பித்துள்ள நிலையில் இதனை தமிழ் ஆண்டாக அல்லாமல் சர்வாதாரி ஆண்டாக வரவேற்கலாம் என்று கூறியுள்ளார்.
சரத் குமார்:
அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
இதுநாள் வரை தமிழ்ப் புத்தாண்டு தினமாக கொண்டாடப்பட்டு வந்த சித்திரைத் திருநாள் என்பது தமிழ் மக்களின் பாரம்பரியத்தோடு இணைந்துவிட்ட திருநாளாகும்.
வேளாண்மை கலாச்சாரத்தை அடிப்படையாகக் கொண்ட தமிழர் வாழ்வில், வருகிற ஆண்டுக்குத் தேவையான முன் ஏற்பாடுகளில் புதுக்கணக்கு துவங்குவது, விளை நிலத்தை அபிவிருத்தி செய்வது போன்ற புதிய முயற்சிகள் தொடங்குவது இந்த சித்திரைத் திருநாளையொட்டிய சிறப்புக்களாகும்.
தமிழர் நலனைப் பேணிக் காப்பதில் முன்னிலும் விழிப்புடன் இருக்க வேண்டும் என்பதை அண்மைக் கால நிகழ்ச்சிகள் நமக்கு உணர்த்துகின்றன. எனவே ஓகேனக்கல் பிரச்சினையில் தமிழ் உலகம் காட்டிய ஒற்றுமை உணர்வு வளமான தமிழகத்தை உருவாக்குவதிலும் மேலோங்கிட வேண்டும் என்பதை வலியுறுத்த விரும்புகிறேன் என்று கூறியுள்ளார்.
அதே போல இந்து முன்னணி தலைவர் ராம.கோபாலன், லட்சிய தி.மு.க. தலைவர் விஜய டி.ராஜேந்தர், இந்து இயக்க கூட்டமைப்பின் விநாயகர் வி.முரளி ஆகியோரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications