நாடாளுமன்றத் தேர்தலுக்கு தயாராகும் விஜய்காந்த்

அடுத்த ஆண்டு மே மாதத்தில் தான் மக்களவைக்குத் தேர்தல் வருகிறது. ஆனாலும் தேர்தலுக்கு இப்போதே தயாராக ஆரம்பித்துவிட்டார் விஜய்காந்த். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தேதிமுக தமிழ்நாட்டு அரசியலில் ஒரு புதிய திருப்பு முனையை ஏற்படுத்தியுள்ளது. சாதி, மத, ஊழலுக்கு அப்பாற்பட்ட ஒரு தூய்மையான அரசியலை தமிழ்நாட்டிற்கு தந்து வருகிறது. நாட்டு மக்கள் தேமுதிகவிடம் நிறைய எதிர்பார்க்கிறார்கள்.
இந்த சூழ்நிலையில் வரும் தேர்தல்களையொட்டி, அமைப்புகளை முறைப்படுத்தவும், கழக பணிகளை முடுக்கிவிடவும், தமிழ்நாடு, புதுச்சேரி மாநிலங்களில் உள்ள ஒவ்வொரு நாடாளுமன்றத் தொகுதிக்கும் தலைமைக் கழகத்தின் சார்பில் ஒரு மேலிடப் பார்வையாளரை நியமித்துள்ளோம்.
நாடாளுமன்றத் தொகுதிக்கு உள்பட்ட கழகப் பணிகள் அனைத்தையும் ஒருமுகப்படுத்தவும், அவ்வப்பொழுது தலைமைக்குத் தெரிவிக்கவும் தலைமையின் ஆலோசனையைப் பெற்று ஒவ்வொரு தொகுதியிலும் செயல்படுத்தவும் அவர்கள் கடமைப்பட்டுள்ளனர்.
எதைச் செய்தாலும் சிறப்போடு செய்து பழக்கப்பட்ட நமது இயக்க தோழர்கள், நாம் எடுக்கும் இந்த முன் முயற்சியிலும் முனைப்போடு செயலாற்றி அரசியலில் முன் மாதிரியாக விளங்கி, வரவிருக்கும் தேர்தல்களில் வெற்றி வாகைசூடத் தங்களை அர்ப்பணிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு கூறியுள்ள விஜய்காந்த் தமிழகத்தின் 39 மக்களவைத் தொகுதிகளுக்கும் புதுச்சேரியின் ஒரு தொகுதிக்குமாக மொத்தம் 40 பார்வையாளர்களை நியமித்து அவர்களது பெயர் விவரத்தையும் வெளியிட்டுள்ளார்.
தேமுதிக செயற்குழு கூட்டம்:
இந் நிலையில் கட்சியின் செயற்குழுக் கூட்டம் கோயம்பேட்டில் உள்ள கட்சி அலுவலகத்தில் இன்று நடந்தது. விஜயகாந்த் தலைமையில் நடந்த இந்தக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
உணவு பொருட்களின் விலை கட்டுப்படியாகாத அளவுக்கு ஏறிக்கொண்டே போகிறது. மத்திய அரசு போட்டி போட்டு பெட்ரோல், டீசல் விலையை உயர்த்துகிறது. இதனால் ஏழை நடுத்தர மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மத்திய-மாநில அரசுகளில் மெத்தன போக்கை செயற்குழு கண்டிக்கிறது.
தமிழக மீனவர்கள் சிங்கள கடற்படையால் பாதிக்கப்படுகின்றனர். கச்சத்தீவை தாரை வார்த்து கொடுத்த ஒப்பந்தத்தை அரசு ரத்து செய்ய வேண்டும்.
முல்லைப் பெரியாறு, காவிரி பிரச்சினை, பாலாறு பிரச்சினை போன்றவற்றில் நமது உரிமைகள் இழக்கப்படுவதை மக்களுக்கு செயற் குழு சுட்டிக்காட்டுகிறது.
ஓகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டத்தை எதிர்த்து கன்னட வெறியர்கள் கலவரம் நடத்தி திரையரங்குகளையும், தமிழர்களையும் தாக்கியுள்ளனர். கலவரத்தை காரணம் காட்டி இத்திட்டம் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. தமிழக மக்களுக்கு குடிதண்ணீர் உரிமை கூட இல்லாத நிலைமை ஏற்பட்டுள்ளது.
இலங்கையில் தமிழர்களை முப்படைகளும் அழித்து வருகின்றன. உயிர், உடமைகளை தமிழர்கள் இழந்துள்ளனர். மலேசிய தமிழர்கள் உரிமைகளும் பறிக்கப்பட்டுள்ளது. தமிழர்களின் பரிதாப நிலையை மத்திய-மாநில அரசுகள் கண்டு கொள்ளாததை இக்கூட்டம் கண்டிக்கிறது.
உயர்கல்வி நிறுவனங்களில் 27 சதவீத இட ஒதுக்கீட்டை சுப்ரீம் கோர்ட்டு ஏற்றுக் கொண்டு தீர்ப்பளித்தை செயற்குழு பாராட்டுகிறது.
இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேறப்பட்டன.












Click it and Unblock the Notifications