ராமர் பாலத்தை வழிபாட்டுத்தலம் என்று கூறாதீர்: சு.சுவாமிக்கு நீதிபதிகள் கண்டிப்பு
டெல்லி: ஆதாம் பாலத்தை (ராமர் பாலம்) வழிபாட்டுத் தலம் என குறிப்பிடாதீர் என்று இந்த வழக்கில் வாதாடிய ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணியம் சுவாமியை உச்சநீதிமன்ற நீதிபதிகள் கண்டித்தனர்.
சேது சமுத்திரத் திட்டத்தை எதிர்த்து ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணியம் சுவாமி, அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா உள்பட பலர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.
இந்த வழக்கை தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன், நீதிபதி ஆர்.வி. ரவீந்திரன் ஆகியோர் நேற்று விசாரித்தனர்.
அப்போது நடந்த விவாதத்தில், ராமர் பாலம் வழிபாட்டுத் தலம் என்பதால் அந்தப் பாலத்தை பாதுகாக்க வேண்டும் என்று சுப்பிரமணியம் சுவாமி வாதிட்டார்.
அப்போது இடைமறித்த தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன், 'மக்கள் அங்கு சென்று வழிபடுவதாகக் கூறாதீர்கள். ராமர் பாலத்தை வழிபாட்டுத் தலம் என்று யார் சொன்னது? நடுக்கடலுக்குச் சென்று யார் வழிபடுகிறார்கள்' என்று கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்த சுவாமி, ராமர் பாலத்தை இந்துக்கள் புனிதமாகக் கருதுகின்றனர். அந்த பாலத்தை யார் சேதப்படுத்தினாலும் இந்திய தண்டனைச் சட்டத்தின் 295வது பிரிவின்கீழ் அவர்கள் மீது கிரிமினல் வழக்குப் பதிவு செய்ய வேண்டும். அந்த இடம் வழிபடக்கூடிய இடம்.
ஒவ்வொரு ஆண்டும் நான் அங்கு சென்று வழிபடுகிறேன். இது உங்கள் நம்பிக்கை சம்பந்தப்பட்டது அல்ல. இந்நாட்டு மக்களின் நம்பிக்கை சம்பந்தப்பட்டது என்றார் சுவாமி.
ராமர் பாலம் பற்றி தொல்பொருள் துறை ஆய்வு நடத்த வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் கூறியுள்ளது. அந்தத் தீர்ப்புக்கு மத்திய அரசு கட்டுப்பட வேண்டும் என்று கூறி வழக்கறிஞர்கள் கே.கே.வேணுகோபால், அருண் ஜேட்லி ஆகியோர் வாதாடினர்.
இதற்கு பதிலளித்த நீதிபதிகள், 'உச்ச நீதிமன்றம் ஓர் உத்தரவைப் பிறப்பிக்கும்போது, உயர் நீதிமன்ற ஆணையை நீங்கள் வலியுறுத்த முடியாது' என்றனர்.
இதையடுத்து இந்த வழக்கின் இறுதி விசாரணையை ஏப்ரல் 29ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்தி வைத்தனர்.
இதற்கிடையே இந்த வழக்கில் மத்திய அரசின் சார்பில் வாதாட மூத்த வழக்கறிஞர் பாலி எஸ்.நாரிமன் நியமிக்கப்படவுள்ளார்.












Click it and Unblock the Notifications