பஞ்சாயத்து ராஜ் வரைவுத் திட்டம்: தமிழகத்தின் எதிர்ப்பால் கைவிட்டது டெல்லி

Subscribe to Oneindia Tamil

Karunanidhi
சென்னை: பஞ்சாயத்து ராஜ் சட்டம் தொடர்பான வரைவுத் திட்டம் சட்டமாக கொண்டு வருவதற்கு தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்ததைத் தொடர்ந்து மத்திய அரசு, அந்த வரைவுத் திட்டம் சட்டமாக கொண்டு வரப்படாது என அறிவித்துள்ளது.

டெல்லியில், மத்திய அரசின் பஞ்சாயத்து ராஜ் துறையின் சார்பில் உள்ளாட்சித் தலைவர்கள் மாநாடு நேற்று தொடங்கியது. இதில் தமிழக அரசு பங்கேற்கவில்லை. பஞ்சாயத்து ராஜ் சட்டத்தில் திருத்தம் செய்யவும் வரைவுத் திட்டம் இந்த மாநாட்டில் முன்வைக்கப்படுவதாக இருந்தது.

அதன்படி மாநில அரசுகளின் வசம் உள்ள உள்ளாட்சி அமைப்புகளை அதிலிருந்து பிரிக்க இந்த வரைவுத் திட்டம் வகை செய்கிறது. இதற்கு தமிழகம், மேற்கு வங்கம் உள்ளிட்ட சில மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

வரைவுத் திட்டத்தை எதிர்த்து தமிழக அரசு, இந்த மாநாட்டில் கலந்து கொள்ளாமல் புறக்கணித்துள்ளது.

மாநாட்டில் தமிழக பிரதிநிதிகள் கலந்து கொள்ளாதது குறித்து, சட்டசபையில் நேற்று முன்தினம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உறுப்பினர் பாலபாரதி கேள்வி எழுப்பினார்.

அதற்கு விடை அளிக்கும் வகையில், உள்ளாட்சித் துறை அமைச்சர் ஸ்டாலின், நேற்று சபை விதி 110ன் கீழ் அறிக்கையை சமர்ப்பித்து பேசினார். அவர் கூறுகையில், டெல்லியில் நடைபெறும் ஊராட்சித் தலைவர்கள் மற்றும் ஒன்றிய தலைவர்கள் தேசிய மாநாட்டில் கலந்து கொள்ள தமிழக பிரதிநிதிகளை அனுப்பி வைக்கும்படி, மத்திய பஞ்சாயத்துராஜ் அமைச்சர் மணிசங்கர் அய்யர் கடிதம் எழுதினார்.

மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த 68 பிரதிநிதிகள் கொண்ட குழுவின் பட்டியலை மத்திய அரசுக்கு தமிழக அரசு அனுப்பியது. இதற்கிடையே, பஞ்சாயத்துராஜ் அமைச்சகம் சார்பில் ஒரு வரைவு சட்டத்தை தயாரித்து, தேசிய மாநாட்டில் நிறைவேற்றியபின் பிரதமரிடம் அளிக்க உள்ளதாக தெரிய வந்தது.

இந்த வரைவு சட்டம், மாநில அரசையோ அல்லது ஊராட்சி தலைவர்களையோ ஆலோசித்து தயாரிக்கப்படவில்லை. மாநாட்டில் கலந்து கொள்ளும் பிரதிநிதிகள், தங்களது கருத்துக்களை சுயமாக தெரிவிக்க வேண்டுமே தவிர, பஞ்சாயத்து அமைச்சகம் தயாரித்த சட்டத்தை ஏற்றுக் கொள்ளுமாறு கட்டாயப்படுத்துவது தவறான நடைமுறை.வரைவு சட்டத்தில் உள்ள ஆட்சேபனைக்குரிய பரிந்துரைகளை நீக்க வேண்டும் என்றும், அப்படி செய்தால் தான் தமிழக பிரதிநிதிகள் பங்கேற்பார்கள் என்றும் தெரிவித்து, பிரதமருக்கு முதல்வர் கடிதம் எழுதினார்.

இதனடிப்படையில் தமிழக பிரதிநிதிகளை அனுப்புவதில்லை என்றும் முடிவு எடுக்கப்பட்டது. இந்த நிலையில், முதல்வருக்கு, பிரதமர் எழுதிய பதில் கடிதம் 21ம் தேதி கிடைத்தது.

அதில், மாநில அரசின் அதிகார வரம்பிற்குட்பட்ட ஊராட்சிகள் என்ற பொருளை, மத்திய அரசு பட்டியலுக்கோ அல்லது இணை பட்டியலுக்கோ மாற்ற வேண்டும் என்று வரைவு சட்டத்தில் சேர்க்க வேண்டாம் என்று மத்திய பஞ்சாயத்துராஜ் அமைச்சகத்திற்கு தெரிவித்துள்ளதாக அதில் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

இதர ஆட்சேபனைக்குரிய பரிந்துரைகளை பொறுத்தவரை, மாநாட்டில் இந்த வரைவு சட்டம் சமர்ப்பிக்கப்பட்டாலும், தேசிய வளர்ச்சிக் குழுவில் மாநில அரசுகளுடன் ஆலோசித்து இறுதி செய்வதன் அடிப்படையில் தான் முடிவு செய்யப்படும் என்றும் பிரதமர் தெரிவித்துள்ளார்.

இருந்தும், டெல்லி மாநாட்டில் பங்கேற்பதற்கு தேவையான ஏற்பாடுகளை செய்ய போதிய கால அவகாசம் இல்லாததால், தமிழக பிரதிநிதிகள் கலந்து கொள்ள இயலாத நிலை ஏற்பட்டுள்ளது.உள்ளாட்சிகளுக்கு அதிகார பரவலாக்கம் செய்வதிலும், கூடுதலாக நிதி வழங்குவதிலும் தமிழகம் முன்னணியில் உள்ளது.

ஊராட்சிகளுக்கு கூடுதல் அதிகாரங்கள் வழங்க வேண்டும் என்பதில் தமிழக அரசுக்கு மாற்றுக் கருத்து இல்லை. எனினும், மாநில அரசின் பொறுப்புக்களையும், அதிகாரங்களையும் விட்டுக் கொடுத்துதான் வழங்க வேண்டும் என்ற நிலை தமிழக அரசுக்கு ஏற்புடையது அல்ல. எனினும், தமிழக அரசின் நிலையை மத்திய அரசு ஏற்றுக் கொண்டிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது என்றார் ஸ்டாலின்.

பின்னர் முதல்வர் கருணாநிதி இதுகுறித்துப் பேசுகையில், மாநில அரசின் அதிகாரங்களை பறிக்கும் வகையில் எடுக்கப்படும் முடிவுகள், மாநிலங்களை பலவீனப்படுத்தும். உள்ளாட்சிகளுக்கு அதிக அதிகாரம் வேண்டும் என்று ஏற்கனவே வலியுறுத்தி வருகிறோம்.

மாநில அரசின் அதிகாரங்கள் ஒவ்வொன்றாக பறிபோய் கொண்டிருப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறோம். இந்நேரத்தில் டெல்லி மாநாட்டில் தமிழக பிரதிநிதிகள் கலந்து கொண்டால், அங்கு எடுக்கப்படும் முடிவை அங்கீகரித்ததாக ஆகிவிடக் கூடாது என்று தான் தமிழக குழு செல்லவில்லை.

நாம் புண்பட்டு இருப்பதை உணர்ந்து, புண்ணுக்கு மருந்தாக பிரதமர் கடிதம் எழுதியிருக்கிறார். மாநில அரசின் அதிகாரங்கள் பறிக்கப்பட்டு, மத்திய அரசில் குவிக்கப்படுகிறது. இதை மாற்றும் வகையில் நாம் தெரிவிக்கும் எதிர்ப்புகள், இன்று இல்லாவிட்டாலும் எதிர்காலத்தில் பலனளிக்கும் என்றார்.

முன்னதாக அதிமுக துணைத் தலைவர் ஓ.பன்னீர் செல்வம் பேசுகையில்,

ஒரு முக்கியமான பிரச்சினை பஞ்சாயத்து ராஜ். அதனுடைய வரைவுப்பட்டியலை மாநாட்டிலே வைத்து நிறைவேற்றுவதற்கு முன்பாக, அது பற்றி மத்திய அமைச்சரவையில் விவாதித்தார்களா, ஏற்றுக்கொள்ளப்படலாம் என்று அதில் கருத்துக்கள் சொல்லப்பட்டதா என்பதை நம் மாநில அரசும் விளக்க வேண்டும்.

அதோடு மட்டுமல்லாமல் ஒரு பிரச்சினை குறித்து, வரைவுப்பட்டியலை மாநாடுகளில் வைத்து நிறைவேற்றியதற்குப் பின் தேசிய வளர்ச்சி கூட்டத்தில் விவாதிப்பது என்பது ஒரு மாறுபட்ட கருத்து ஆகும்.

மாநாட்டிற்கு முன்பாகவே சம்பந்தப்பட்ட மத்திய அமைச்சரவையில் வைத்து அந்த வரைவுப்பட்டியலை விவாதித்து அது ஏற்றுக்கொள்ளக்கூடியதுதானா என்பதை தீர்மானமாக முடிவு செய்துவிட்டுத் தான், மாநாட்டிலோ மற்றும் தேசிய வளர்ச்சிக் கூட்டத்திலோ வைக்க வேண்டுமே தவிர அதற்கு முன்பாகவே மாநாட்டிலே வைத்து நிறைவேற்றிவிட்டு,

அகில இந்தியாவில் இருக்கின்ற மக்கள் பிரதிநிதிகளை, உள்ளாட்சிகளின் மக்கள் பிரதிநிதிகளின் மாநாட்டை நடத்தி அதில் அந்த வரைவுப்பட்டியலை நிறைவேற்றியதற்குப்பிறகு தேசிய வளர்ச்சிக்கூட்டத்தில் வைத்து விவாதிப்பது என்பது சிறந்த நடைமுறைதானா என்பதை நான் அறிய விரும்புகிறேன் என்றார்.

பன்னீர் செல்வத்தின் கேள்விக்கு பதில் அளிக்கும் வகையில் மேற்கண்ட விளக்கத்தை அளித்தார் முதல்வர் கருணாநிதி.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+