மிஸ் கூவாகம் பட்டத்தை வென்றார் சேலம் மந்த்ரா!

கூவாகம் கூத்தாண்டவர் கோவிலில் சித்திரைத் திருவிழா நடந்து வருகிறது. இந்த விழாவின் ஒருபகுதியாக நேற்று விழுப்புரத்தில் மிஸ் கூவாகம் அழகிப் போட்டி நடத்தப்பட்டது.
சென்னை எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம், விழுப்புரம் மாவட்ட அரவாணிகள் நலச் சங்கம் இணைந்து இந்தப் போட்டியை நடத்தியது.
அழகிப் போட்டிக்கு முன்னதாக பாட்டுக்குப் பாட்டு போட்டி உள்ளிட்டவை நடத்தப்பட்டது. அதில் ஏராளமான அரவாணி அழகிகள் கலந்து கொண்டு கலக்கலாக பாடி அசத்தினர்.
பின்னர் நடனப் போட்டியும நடந்தது. இதில் பெண்களே மிரளும் வகையில், படு கவர்ச்சியாக டிரஸ் அணிந்து வந்து பல அரவாணிகள் ஆட்டம் போட்டனர்.
பின்னர் மிஸ் கூவாகம் அழகியைத் தேர்வு செய்யும் போட்டி நடந்தது. இதில் பல்வேறு ஊர்களைச் சேர்ந்த 30 அரவாணிகள் விதம் விதமான உடைகளில் வந்து கேட் வாக் செய்தனர்.
சில அரவாணிகள் பறக்கும் முத்தம் தரவும் தயங்கவில்லை. இப்படியாக நடந்த அழகிப் போட்டியில் இறுதிச் சுற்றுக்கு சேலம் மந்த்ரா, ஷாலினி, சென்னை மோனல், திருச்சி மதுமிதா, மும்பை ஹசீனா ஆகியோர் தேர்வாகினர்.
அவர்களிடம் அறிவுத்திறன் அறியும் வகையில் கேள்விகள் கேட்கப்பட்டன. இதில் சிறப்பாக பதிலளித்து மிஸ் கூவாகம் பட்டத்தைத் தட்டிச் சென்றார் சேலம் மந்த்ரா. இதையடுத்து அரங்கில்திரண்டிருந்த அரவாணிகள் கைகளைத் தட்டியும், விசிலடித்தும் உற்சாகக் குரல் கொடுத்தும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
மதுமிதாவுக்கு 2வது இடமும், ஹசீனாவுக்கு 3வது இடமும் கிடைத்தது. வெற்றி பெற்ற மந்த்ராவுக்கு மகுடம் சூட்டப்பட்டது.
மிஸ் கூவாகம் மந்த்ராவுக்கு, இந்து அறநிலையத்துறை இணை ஆணையர் திருமகள் மலர் கிரீடம் அணிவித்து கோப்பை வழங்கினார்.
பின்னர் நடனப் போட்டியில், விஜயவாடா ஐஸ்வர்யா முதலிடத்தையும், சென்னை மீனா 2வது இடத்தையும், ஈரோடு கங்கா 3வது இடத்தையும் பெற்றனர். அவர்களுக்கு விழுப்புரம் நகராட்சித் தலைவர் கனகராஜ் பரிசுக் கோப்பையை வழங்கினார்.
தாலி கட்டிக் கொள்ளும் வைபவம்:
இதையடுத்து நேற்று இரவு அரவாணிகள் தாலி கட்டிக் கொள்ளும் நிகழ்ச்சி கோலாகலமாக நடந்தது.
மகாபாரதப் போரின்போது அரவான் பலி கொடுக்கப்பட்டான். அதற்கு முன்னதாக அரவானை, கிருஷ்ணர் பெண் வேடத்தில் வந்து மணந்து கொண்டார். பின்னர் அரவான் பலி கொடுக்கப்பட்ட பின்னர், தனது தாலியை அறுத்து, பொட்டழித்து கிருஷ்ணர் சடங்குகள் செய்தார் என்று புராணத்தில் கூறப்பட்டுள்ளது.
அதன்படி நேற்று இரவு அரவாணிகளுக்கு தாலி கட்டும் நிகழ்ச்சி நடந்தது. அரவாணிகள், பட்டுச் சேலைகள் சகிதம் கோவில் பூசாரியிடம் தாலி கட்டிக் கொண்டனர். அரவானே வந்து தங்களுக்குத் தாலி கட்டுவதாக இதைக் கருதுகின்றனர் அரவாணிகள்.
தாலி கட்டிக் கொண்ட அரவாணிகள் கூட்டம் கூட்டமாக கும்மியடித்துப் பாட்டு பாடி சந்தோஷமாக கொண்டாடினர்.
இன்று தேரோட்டம், பின்னர் தாலி அறுப்பு நிகழ்ச்சி உள்ளிட்டவை நடைபெறுகின்றன. இன்றுடன் கூவாகம் கூத்தாண்டவர் கோவில் விழா நிறைவு பெறுகிறது.












Click it and Unblock the Notifications