தடுப்பூசி போடப்பட்ட 4 குழந்தைகள் பலி - 15 பேருக்கு பாதிப்பு

சென்னை அருகே உள்ளது பென்னலூர்ப்பேட்டை மற்றும் வெங்கடாபுரம் கிராமங்கள். இரண்டும் திருவள்ளூர் மாவட்டத்திற்குள் உள்ளன. புதன்கிழமை இந்த கிராமங்களில் தட்டம்மை தடுப்பூசி முகாம் அரசு மருத்துவமனை சார்பில் நடத்தப்பட்டது.
தடுப்பூசி முகாமில் கலந்து கொண்டு ஏராளமான பேர் தங்களது குழந்தைகளுக்கு தடுப்பூசி போட்டனர். இதில் நந்தினி, பூஜா, மோகனபிரியா, லோகேஷ் ஆகிய நான்கு குழந்தைகள் ஊசி போட்ட சிறிது நேரத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தன.
இதுதவிர மேலும் 15 குழந்தைகளுக்கும் உடல் நலம் பாதிக்கப்பட்டது. அந்தக் குழந்தைகள் திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டன. அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தடுப்பூசியால் குழந்தைகளுக்கு அலர்ஜி ஏற்பட்டுள்ளதாகவும், அதனால்தான் உயிரிழப்பு ஏற்பட்டிருப்பதாகவும் டாக்டர்கள் கூறியுள்ளனர்.
நான்கு குழந்தைகள் உயிரிழந்த சம்பவத்தைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் நடந்து வரும் தடுப்பூசி முகாம்களை நிறுத்துமாறு அரசு உத்தரவிட்டுள்ளது.
திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு விரைந்து வந்த மாநில சுகாதாரத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம், குழந்தைகள் இறந்த விதம் குறித்து விசாரித்தார். மேலும், சிகிச்சை பெற்று வந்த குழந்தைகளின் பெற்றோர்களுக்கும் ஆறுதல் தெரிவித்தார்.
இதுகுறித்து அமைச்சர் பன்னீர் செல்வம் பின்னர் செய்தியாளர்களிடம் கூறுகையில், இந்த மருந்துகள் ஹைதராபாத்திலிருந்து, மத்திய அரசு நிறுவனத்தில்தான் வாங்கினோம். இந்த சம்பவம் குறித்து மத்திய அரசுக்கும் தகவல் தெரிவித்து விட்டோம்.
தடுப்பூசி மருந்துகளில் என்ன பிரச்சினை என்பதைக் கண்டறிய அவற்றை சோதனைக்கு அனுப்பி வைத்துள்ளோம்.
நான்கு குழந்தைகள் பலியான சம்பவத்தைத் தொடர்ந்து 2 நர்ஸ்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர் என்றார்.
தடுப்பூசி போடப்பட்ட நான்கு குழந்தைகள், நான்குமே 1 வயதுக்குட்பட்டவை, பலியான சம்பவம் திருவள்ளூர் மாவட்டத்தில் பெரும் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
தலா ரூ. 3 லட்சம் நிதியுதவி:
இந் நிலையில் தடுப்பூசி காரணமாக நான்கு குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் குறித்து தமிழக சட்டசபையில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது.
இதற்கு பதிலளித்துப் பேசிய முதல்வர் கருணாநிதி குழந்தைகளின் குடும்பத்திற்கு தலா 3 லட்சம் ரூபாய் உதவித் தொகையாக அளிக்கப்படும் என்றார்.












Click it and Unblock the Notifications