மே நாள்.. உழைப்பாளர் திருநாள்-கருணாநிதி
சென்னை: மே தினத்தையொட்டி தொழிலாளர்களுக்கு முதல்வர் கருணாநிதி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள செய்தியில்,
மே நாள்! மேதினி எங்கும் உழைப்பாளர் பெருமையை உரைத்திடும் திருநாள்!.
வயிறார உண்டு சுவைத்திடவும், வகை வகையாய் வண்ண வண்ண ஆடைகளை உடுத்தி மகிழ்ந்திடவும், விரும்பிடும் இடமெல்லாம் சுகமாகச் சென்று தங்கி, சொகுசாக மீண்டிடவும், நுகர்ந்திடும் வசதிகளுடன் குழந்தைகள் சூழக் கூடிக் களித்து வாழ்ந்திடவும் உலக மக்களுக்குத் தேவையானவற்றை உருவாக்கிடத் தினம் தினம் உழைத்திடும் தொழிலாளர்களை நினைத்து மகிழ்ந்து நன்றியுடன் போற்ற வேண்டிய பொன்னாள் இந்த மே நாள்!
இந்நன்னாளில் தொழிலாளர் சமுதாயத் தோழர்களுக்கு என் இதயம் கனிந்த இனிய மே தின நல்வாழ்த்துக்கள் உரித்தாகுக.
1929 செங்கற்பட்டு சுய மரியாதை மாநாட்டில், தொழிலாளர்கள் ஆற்றுகின்ற பணிக்கு ஏற்பவும், அவர்களுடைய தேவைக்கு ஏற்பவும் ஊதியம் பெற்றாக வேண்டும். அந்த ஊதியத்தை அவர்களுக்கு வழங்கியாக வேண்டும் என்றார் தந்தை பெரியார்.
1889ம் அண்டு சர்வதேச சமதர்ம மாநாடு பாரிஸ் பட்டணத்தில் கூடி, மே மாதம் முதல் தேதியை உலகப் பாட்டாளி மக்களின் விடுதலை நாளாகக் கொண்டாடும்படி தீர்மானம் நிறைவேற்றிற்று. அது முதல் மே தினம் உலகிலே எல்லா நாடுகளிலும் பாட்டாளிகளின் விடுதலை நாளாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.
தந்தை பெரியார், பேறிஞர் அண்ணா ஆகியோரின் கொள்கை வழிநின்று தி.மு.க. அரசு தொழிலாளர் நலன் காத்திடும் பல்வேறு பணிகளைத் தொடர்ந்து நிறைவேற்றி வருகிறது.
1969ல் தொழிலாளர் நலனுக்குத் தனி அமைச்சகம்.
1969 முதல் மே தினத்திற்கு ஊதியத்துடன் அரசு விடுமுறை.
1972ல் விபத்தால் பாதிக்கப்படும் தொழிலாளர்களுக்கும் லாரி, ஆட்டோ, தனியார் கார், டாக்சி, பேருந்து ஆகியவற்றின் ஓட்டுநர்களுக்கும், கட்டுமானத் தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களுக்கும் தகுந்த நிவாரணங்கள் வழங்கித் தொழிலாளர் குடும்பங்களின் துயர் துடைத்திட 'தொழில்-விபத்து நிவாரண நிதி'
1997ல் சென்னை நேப்பியார் பூங்காவிற்கு, 'மே தினப் பூங்கா' எனப் பெயர் சூட்டி, அங்கு மே தின நினைவுச் சின்னம்.
ஏழை எளிய தொழிலாளர்களின் வாழ்வு ஆதாரங்களுக்கு வழி காணும் நோக்கில் அமைப்பு சாரா தொழிலாளர் நல வாரியம்.
2000ம் ஆண்டில் 'விவசாயத் தொழிலாளர் நல வாரியம்'
2006ல் 'தமிழ்நாடு விவசாயத் தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகள் சமூகப் பாதுகாப்பு மற்றும் நலத் திட்டம்' தொடர்பாக தனி சட்டம் இயற்றி, விவசாயத் தொழிலாளர் குடும்பங்களுக்குக் கல்வி உதவி, திருமண உதவி, மகப்பேறு உதவி, ஓய்வூதியம், ஈமச் சடங்கு உதவி, விபத்துக் கால இழப்பீட்டு உதவி என்பன போன்ற பல உதவிகள்.
தொழிலாளர்களுக்குத் 20 சதவிகித போனஸ், ஊக்கத் தொகை.
நிலமற்ற ஏழை விவசாயத் தொழிலாளர் குடும்பங்களுக்கு இலவச நிலம் எனத் தொழிலாளர் சமுதாயம் நலம் பெற, வளம்பெற அவர்கள் குடும்பத்தார் சுகம் பெற அடுக்கடுக்கான திட்டங்களைச் செயல்படுத்தி தொழிலாளர்களின் உரிமைகளைப் போற்றிடும் தமிழக அரசின் சார்பில் தொழிலாளர் சமுதாயத் தோழர்கள் அனைவருக்கும் என் இதயங்கனிந்த மே தின நல்வாழ்த்துக்களைத் தெரிவித்து மகிழ்கிறேன் என்று கூறியுள்ளார் கருணாநிதி.












Click it and Unblock the Notifications