3 கப்பல்களில் ஆயுதங்களை இறக்குமதி செய்துள்ள விடுதலைப் புலிகள்

இலங்கையில் ராணுவத்திற்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான யுத்தம் நாளுக்கு நாள் திகிலூட்டும் வகையில் அதிகரித்து வருகிறது. இரு தரப்பும் கடுமையாக மோதி வருகின்றன. உயிரிழப்புகளும் அதிகரித்து வருகின்றன.
விடுதலைப் புலிகளின் தாக்குதலை சமாளிக்க முடியாமல் பல்வேறு நாடுகளிலும் ஆயுத உதவியைக் கோரி வருகிறது இலங்கை. இந்தியாவிடமும் ஆயுதங்களைக் கேட்டது. ஆனால் பகிரங்கமாக ஆயுத உதவியை செய்ய முடியாத நிலையில் இந்திய அரசு உள்ளது. இருப்பினும் தொழில்நுட்ப உதவிகளையும், ரேடார் உள்ளிட்ட உதவிகளையும் அது செய்து வருகிறது. மேலும் இலங்கை ஆயுதங்கள் வாங்க நிதியுதவியையும் அது செய்யவுள்ளது.
இலங்கைக்குப் பதிலடியாக விடுதலைப் புலிகளும் சத்தம் போடாமல் ஆயுதங்களை வாங்கிக் குவித்து வருகின்றனர். சமீபத்தில் 3 கப்பல்கள் நிறைய விடுதலைப் புலிகளுக்கு ஆயுதங்கள் வந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கொழும்பிலிருந்து வெளியாகும் லக்பிமா என்ற இதழ் இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.
சமீபத்தில் வெளிஓயா, வன்னி மற்றும் யாழ்ப்பாணம் பகுதிகளில் புலிகள் நடத்தி வரும் தாக்குதல்களில் அவர்களுக்கு கணிசமான வெற்றி கிடைத்துள்ளதற்கு, புதிதாக வாங்கியுள்ள அதி நவீன ஆயுதங்கள்தான் காரணம் என்று அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த அக்டோபர் மாதம் புலிகளின் ஆயுதக் கப்பல் ஒன்றை மூழ்கடித்து விட்டதாக இலங்கை தெரிவித்தது. ஆனால் புலிகள் வசம் அதி நவீன இறக்குமதி ஆயுதங்கள் வந்திருப்பதாக தற்போது வெளியாகியுள்ள தகவல் மூலம், இலங்கை அரசின் முந்தையத் தகவல் பொய்யானதாக இருக்கக் கூடும் என்று உறுதியாகியுள்ளது.
கடந்த பிப்ரவரி மற்றும் மார்ச் மாதத்தில் மூன்று கப்பல்களில் கொண்டு வரப்பட்ட ஆயுதங்களை புலிகள் இறக்குமதி செய்திருப்பதாக உளவு அமைப்பை மேற்கோள்காட்டி அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த பிப்ரவரி மாதம் 16 மற்றும் 17 தேதிகளில் இரண்டு கப்பல்களில் ஆயுதங்கள் வந்தன என்றும், கடந்த மார்ச் மாதம் 12ம் தேதி ஒரு கப்பலில் ஆயுதங்கள் கடத்தி வரப்பட்டிருப்பதாகவும் இலங்கை உளவு அமைப்பு கூறியிருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன.












Click it and Unblock the Notifications