கேஸ் தட்டுப்பாடு - கரூர் மக்கள் தவிப்பு
கரூர்: கரூரில் சமையல் கேஸ் தட்டுப்பாடு காரணமாக பொதுமக்கள் கடும் அவதிக்கு ஆளாகி உள்ளனர்.
கரூரில் சில மாதங்களுக்கு முன்பு பதிவு செய்தவுடனேயே வீடுகளுக்கு சமையல் கேஸ் வழங்கப்பட்டுவந்தது. தற்போது பதிவு செய்து 60 நாட்களுக்கு மேலாக காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
இதற்கு ஹோட்டல்கள், டீக்கடைகளை பெருமளவில் சமையல் கேஸ் சிலிண்டர்களை பயன்படுத்திவருவதாலும், வாகனங்களுக்கு எரிபொருளாக சமையல் கேஸை பயன்படுத்தத் தொடங்கியிருப்பதாலும் இந்த தட்டுப்பாடு ஏற்பட்டிருப்பதாக கேஸ் ஏஜென்சிதாரர்கள் தெரிவித்தனர்.
ஆனால் வீடுகளுக்கான கேஸ் சிலிண்டர்களை சில ஏஜெண்டுகள் திருட்டுத்தனமாக ஹோட்டல்கள் மற்றும் திருமண மண்டபங்களுக்கு விற்றுவிடுவதால்தான் இந்த தட்டுப்பாடு என்று நுகர்வோர் தரப்பில் கூறப்படுகிறது.
வர்த்தக நோக்கில் சமையல் கேஸை தவறாகப் பயன்படுத்துவோர் மீது அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்தால் இந்த தட்டுப்பாட்டை தவிர்க்க முடியும் என்று பொதுமக்கள் கருதுகின்றனர்.












Click it and Unblock the Notifications