ரயில்வே: லாலு இலக்கு ரூ.1 லட்சம் கோடி!
டெல்லி: ஐமுவின் ஐந்தாண்டு ஆட்சிக்குள் ரூ. 1 லட்சம் கோடி ரூபாய் வருவாய் ஈட்டி வரலாற்று சாதனையை ரயில்வே துறை படைக்கும் என்று ரயில்வே அமைச்சர் லாலு பிரசாத் பெருமையுடன் கூறினார்.
டெல்லியில் நடைபெற்ற ரயில்வே மண்டல பொதுமேலாளர்கள் ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர் லாலு பிரசாத் யாதவ் கூறியதாவது:
நடப்பு 2008-09 நிதியாண்டில் ரூ.31,000 கோடி உபரி வருமானம் ஈட்டவும், 87.5 கோடி டன் சரக்குகளை கையாளவும் ரயில்வே துறைக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்த இலக்கை எட்டிவிட்டால் மத்தியில் ஆளும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் ஐந்தாண்டு கால ஆட்சியில் ரூ.1,00,000 கோடி வருவாயை ஈட்டி ரயில்வே துறை வரலாற்று சாதனையை படைக்கும்.
கடந்த 2007-08ம் நிதியாண்டில் இதுவரை இல்லாத அளவுக்கு 79.5 கோடி டன் சரக்குகளை நமது ரயில்வே கையாண்டுள்ளது. மேலும், ரூ.25000 கோடி உபரி வருவாயை ஈட்டியுள்ளோம். 14 லட்சம் ரயில்வே ஊழியர்களின் உழைப்புக்கு கிடைத்த பரிசாகும் இது.
பயணிகளிடையே அதிக வரவேற்பு உள்ள முக்கிய ரயில்களில் 1200 கூடுதல் பெட்டிகளை இந்த ஆண்டில் இணைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படும்.
பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டபடி இரண்டாம் வகுப்பு பெட்டிகளில் குஷன் இருக்கைகள், பிளாட்பாரங்களை அகலப்படுத்துதல், ரயில்வே மேம்பால நடைபாதைகள் உள்ளிட்ட பயணிகளுக்கான வசதிகளை மேம்படுத்துதல் உள்ளிட்ட அனைத்து திட்டங்களையும் வெற்றிகரமாக செயல்படுத்த மண்டல மேலாளர்கள் தனிப்பட்ட ஆர்வத்துடன் செயல்படவேண்டியது அவசியம்.
இவ்வாறு லாலு கூறினார்.












Click it and Unblock the Notifications