கடன், கமிஷன்.. இன்னொரு ஆதி..போலீஸ் உடந்தை

சென்னை செங்குன்றத்தைச் சேர்ந்த பியூலா (35) அரசு நடுநிலைப்பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்து வருகிறார். இவர் தனக்கு சொந்தமான நிலத்தில் வீடு கட்டுவதற்காக பல இடங்களில் கடன் பெற அலைந்தார்.
ஒரு தனியார் வங்கியில் கடன் பெற முயற்சித்து கொண்டிருந்த போது புரோக்கர் ஒருவர் அடையாறில் உள்ள கன்ட்ரி வைடு என்டர்பிரைசஸ் என்ற நிறுவனத்தில் கடன் பெற்று தருவதாகக் கூறினார்.
இதையடுத்து அந்த நிறுவனத்தில் பியூலா கடன் கோரி விண்ணப்பித்தார். அதன் நிர்வாக இயக்குனர் விக்டர் ஜெயக்குமார் (31) என்பவரை சந்தித்தார்.
அவர் வங்கி கடன் பெற வேண்டுமானால் அங்குள்ள அதிகாரிகளுக்கு கமிஷன் கொடுக்க வேண்டும். சேவை கட்டணம் செலுத்த வேண்டும். விண்ணப்ப கட்டணம் எல்லாம் சேர்த்து ரூ. 1.44 லட்சம் கட்டினால் உங்களுக்கு ரூ. 10 லட்சம் கடன் வாங்கி தருகிறேன் என கூறி உள்ளார் விக்டர்.
இதையடுத்து பியூலாவும் பணத்தைக் கட்டினார். ஆனால், 6 மாதங்களை கடந்த பின்னரும் பியூலாவுக்கு கடன் கிடைக்கவில்லை. இதுபற்றி விக்டரிடம் கேட்டபோது விண்ணப்பத்தில் சரியான விவரங்கள் இல்லாததால் தாமதமாகிறது என கூறி இழுத்தடித்தார்.
பியூலா நெருக்கவே அவரை அடியாட்களை வைத்து மிரட்ட ஆரம்பித்தார். பணத்தை திருப்பி கேட்டால் காலி செய்து விடுவேன் எனக் கூறினார்.
இது குறித்து காவல் நிலையத்தில் பியூலா புகார் செய்ய சென்றபோது விக்டருக்கு ஆதரவாக சில போலீஸ்காரர்கள் பேசினர். அவர்கள் விக்டரிடம் லஞ்சம் வாங்கியதாகத் தெரிகிறது.
இதையடுத்து சென்னை போலீஸ் கமிஷனர் நாஞ்சில் குமரனிடம் பியூலா புகார் தந்தார். இந்தப் புகார் குறித்து விசாரிக்குமாறு அடையாறு துணை போலீஸ் கமிஷனர் ஸ்ரீதருக்கு கமிஷனர் உத்தரவிட்டார்.
இதையடுத்து உதவி போலீஸ் கமிஷனர் ஜாபர் சாலி தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தியதோடு, அடையாறு எல்.பி. சாலையில் உள்ள கன்ட்ரி வைட் என்டர்பிரைசஸ் நிறுவனத்திலும் சோதனை நடத்தினர்.
அங்கிருந்த விக்டர் ஜெயக்குமாரையும் கைது செய்தனர். 9ம் வகுப்பு மட்டுமே படித்த விக்டர் வங்கியில் கலெக்ஷன் ஏஜெண்டாக பணிபுரிந்துள்ளார். அப்போது வங்கி நடைமுறைகளை தெரிந்து கொண்டு இந்த நிறுவனத்தை தொடங்கி பிராடு வேலையில் ஈடுபட்டு வந்துள்ளார்.
ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களிடம் விக்டர் கோடிக்கணக்கில் மேல் சுருட்டியுள்ளதாகத் தெரிகிறது. கடன் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் கமிஷன் தொகையை பலரும் லட்சக்கணக்கில் கொடுத்துள்ளனர்.
பணத்தை திருப்பி கேட்பவர்களை மிரட்ட சினிமா ஸ்டண்ட் நடிகர்களை விக்டர் பயன்படுத்தி உள்ளார். அதையும் மீறி போலீசுக்கு போனால் சில போலீசாரை கையில் போட்டுக் கொண்டு பணம் கட்டியவர்களை மிரட்டியுள்ளார்.
இதற்கிடையே இன்று காலை கன்ட்ரி வைட் என்டர்பிரைசஸ் அலுவலகத்தில் மீண்டும் சோதனை நடத்தப்பட்டது. பல ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. கம்ப்யூட்டர்களும் பறிமுதல் செய்யப்பட்டு நிறுவனத்திற்கு போலீசார் சீல் வைத்தனர்.
இந்த மோசடிக்கு அடையாறு போலீசார் சிலரும் உடந்தையாக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications