2 பிரச்சனைகள்: பிரதமருக்கு கருணாநிதி-வைகோ கடிதம்
சென்னை: என்எல்சி தொழிலாளர்கள் பிரச்சனை தொடர்பாக முதல்வர் கருணாநிதியும், தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் கடத்திச் சென்றது தொடர்பாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோவும் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு கடிதம் எழுதியுள்ளனர்.
முதல்வர் கருணாநிதி அனுப்பியுள்ள கடிதத்தில்,
என்.எல்.சி. நிறுவனத்தில் பணியாற்றும் 12,000 ஒப்பந்தத் தொழிலாளர்கள் கடந்த 15 நாட்களாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனால் தினமும் 750 மெகாவாட் வரை மின்சார உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இது தமிழ்நாட்டில் பாதிப்பை ஏற்படுத்தி மோசமான நிலைக்கு செல்லும் நிலை உருவாகியிருக்கிறது.
தொழிலாளர்களின் போராட்டம் மற்ற பகுதிகளுக்கும் பரவும் நிலை உள்ளது. எனவே நீங்கள் உடனடியாக இதில் தலையிட்டு சுமூகமான தீர்வு காண வேண்டும் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.
மீனவர்கள்- வைகோ கடிதம்:
இதற்கிடையே பிரதமருக்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அனுப்பியுள்ள கடிதத்தில்,
தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை மேற்கொள்ளும் தொடர் தாக்குதலையும், அராஜகத்தையும் மிகுந்த கவலையோடும், வேதனையோடும் மீண்டும் தங்கள் மேலான கவனத்துக்கு கொண்டு வர விரும்புகிறேன்.
ராமேஸ்வரத்துக்கு அருகில் உள்ள பாம்பன் பகுதிக்கு 07.06.2008 அன்று நான் சென்றபோது அங்கு வாழும் நாட்டுப் படகு மீனவர்களின் பல்வேறு சங்கங்களும், அவர்தம் குடும்பத்தாரும் இந்திய எல்லைக்குட்பட்ட கடற்பகுதியில் அவர்கள் மீன் பிடிக்கச் செல்லும்போது இலங்கை கடற்படையினரால் அவர்களுக்கு ஏற்படும் துன்பங்களையும் துயரங்களையும் கண்ணீர் மல்க விளக்கினர்.
நான்கு நாட்டுப் படகுகளில் மீன் பிடிக்கச் சென்ற 23 மீனவர்கள் 26.5.2008 அன்று இலங்கை கடற்படையினரால் அழைத்து செல்லப்பட்டனர் என்றும், இப்போது அவர்களைப் பற்றிய விவரங்கள் எதுவும் தெரியவில்லை என்றும் தெரிவித்தனர்.
இலங்கை கடற்படையினரால் 09.05.2008 அன்று அழைத்துச் செல்லப்பட்டு, விடுவிக்கப்பட்ட மீனவர்கள் தங்கள் படகுகளை இழந்ததோடு மட்டுமின்றி கைகள் கட்டப்பட்டு மனிதாபிமானமற்ற முறையில் சித்ரவதை செய்யப்பட்டுள்ளார்கள். அவர்களுக்கு உணவோ, உடலை மூட துணியோ கூட வழங்கப்படவில்லை.
அதே போல 26.05.2008 அன்று 23 மீனவர்கள் சுமார் ரூ. 6 லட்சம் முதல் ரூ.10 லட்சம் ரூபாய் மதிப்புள்ள மீன்பிடி வலைகள், இயந்திரங்கள் மற்றும் உதிரிபாகங்களோடு அழைத்துச் செல்லப்பட்டு இலங்கை கடற்படையினரால் அதிக சித்ரவதைக்கு ஆளாக்கப்பட்டு உள்ளார்களோ என்ற அச்சம் இங்குள்ள மீனவர்களிடையே நிலவுகிறது.
இலங்கை கடற்படையினரிடம் சிக்கியுள்ள மீனவர்களை அவர்களது படகுகளுடன் பாதுகாப்பாக விடுவிக்கவும் துரித நடவடிக்கை மேற்கொள்ளுமாறு வேண்டுகிறேன்.
கொழுந்து விட்டெரியும் இந்த பிரச்சனையைக் கண்டு கொள்ளாமல் தூங்கிக் கொண்டு இருக்கும் அரசு இனிமேலாவது விழித்துக் கொண்டு உடனடி நடவடிக்கை எடுத்து, அமைதியை விரும்பும் அறவழியில் செயல்படும் மீனவ சமுதாய மக்கள் அவர்களுடைய மீன்பிடித் தொழிலை அமைதியாகத் தொடர அவர்கள் மனதில் நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டுகிறேன்.
இவ்வாறு கூறியுள்ளார் வைகோ.












Click it and Unblock the Notifications