வெல்வது கதாநாயகனா? வில்லனா?: கருணாநிதி

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாட்டில் பல நல்ல திட்டங்கள் நிறைவேறுகிற நேரத்தில் சில பேருக்கு (ராமதாஸ்?) ஓட்டை உடைசல்கள் மட்டும் தான் கண்ணுக்குத் தெரிகின்றன என முதல்வர் கருணாநிதி கூறினார்.

கருணாநிதியின் 85வது பிறந்த நாளையோட்டி தமிழ்நாடு தமிழ் பதிப்பாளர் சங்கத்தின் சார்பி்ல் 85 நூல்கள் வெளியீட்டு விழா நடந்தது.

இதில் பள்ளி கல்வி துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, தமிழ்நாடு தமிழ் பதிப்பாளர் சங்க தலைவர் காந்தி கண்ணதாசன், துணைத் தலைவர் 'அலையன்ஸ்' சீனிவாசன், எழுத்தாளர் ஜெயகாந்தன், கவிஞர் வாலி, தமிழ் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் அவ்வை நடராஜன், தமிழ்நாடு தமிழ் பதிப்பாளர் சங்க செயலாளர் கே.எஸ்.புகழேந்தி, அமைச்சர்கள் துரைமுருகன், பரிதி இளம்வழுதி, கனிமொழி எம்.பி, தமிழச்சி தங்கபாண்டியன், நல்லி குப்புசாமி செட்டியார் உள்பட பலர் கலந்து கொண்டனர்

அவதிப்படும் 'அலையன்ஸ்':

நிகழ்ச்சியில் முதல்வர் கருணாநிதி பேசுகையில்,

இங்கே 'அலையன்ஸ்' நிறுவன அதிபர் சீனிவாசன் பேசினார்.
அலையன்ஸ் (கூட்டணி) இப்போது அவதிப்படுகின்ற காலம், அதை ஒழுங்குபடுத்த வேண்டிய கடமை அலையன்சிலே அக்கறை உள்ளவர்களுக்கு இருக்க வேண்டிய ஒன்று. ஆனால் அலையன்ஸைப் பற்றி விவாதிக்கக் கூடிய இடம் இது அல்ல.

திமுக தேர்தல் அறிக்கையாக என்னென்ன வாக்குறுதிகளை வழங்கியதோ, அவைகளையெல்லாம் நிறைவேற்றி வருகிறது என்பதை நீங்கள் அறிவீர்கள். எத்தனையோ நல்ல காரியங்கள் இன்றைக்கு நாட்டில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.

செம்மொழி நமக்குக் கிடைத்திருக்கிறது. ஆனால் செம்மொழியாக ஆக்குகின்ற அந்தச் செயல் வடிவம் பெற முடியாமல், அதற்காக போரிட்டோம். அந்தப் போர் அறப்போராக, விவாதப் போராக, நமக்கும் டெல்லியிலே உள்ள அரசுக்கும் நடைபெற்று இறுதியாக வெற்றி பெற்றோம். வெற்றி பெற்ற பிறகு, சோனியா காந்தி எனக்கு, அவருடைய கைப்பட ஒரு கடிதம் எழுதினார்.

வேறு என்ன சொத்து வேண்டும்?:

தமிழை செம்மொழியாக ஆக்குகின்ற இந்த முயற்சியிலே வெற்றி பெற்றீர்கள் என்றால், அந்த முழு வெற்றியும் உனக்குத் தான் சொந்தம் என்று அம்மையார் எனக்குக் கைப்பட ஒரு கடிதம் எழுதினார். இதை விட ஒரு பெரும் பேறு நான் வைத்து விட்டுப் போகின்ற ஒரு சீதனம் என்னுடைய பேரப் பிள்ளைகளுக்கோ, என்னுடைய எதிர்காலச் சந்ததிக்கோ வேறு என்ன இருக்க முடியும் என்று கருதுகிறீர்கள்.

செம்மொழியாக ஆக்கியது மாத்திரமல்ல, அந்தச் செம்மொழிக்கான மையம் இதுவரையிலே மைசூரிலே இருந்தது. மைசூரிலே உள்ள செம்மொழி மையத்தை இங்கே தமிழ்நாட்டிற்கு மாற்றினால் தான், செம்மொழி இங்கே வந்ததாகப் பொருள் என்று அர்ஜூன் சிங்குக்கு கடிதம் எழுதினேன், தாக்கீது அனுப்பினேன்.

நீங்கள் நினைக்கும் கட்டிடம் அல்ல:

நேரிலே வந்து செம்மொழிக்கான மையம் தமிழகத்திலே சென்னையிலே அமையும் என்று சொன்னது மாத்திரமல்ல, அந்தக் குழுவிற்கு தலைவராகவும் நீ தான் இருக்க வேண்டுமென்று அதையும் அறிவித்து விட்டு, அதற்கான ஒரு கட்டிடத்தை உடனடியாகத் தயார் செய்யுங்கள் என்று சொல்லி, அந்தக் கட்டிடம் நம்முடைய காமராஜர் சாலையில், நீங்கள் நினைக்கின்ற அந்தக் கட்டிடம் அல்ல (விவேகானந்தர் இல்லம்), தமிழுக்காகப் பயன்படக் கூடிய கட்டிடம், பாலாறு விருந்தினர் மாளிகையிலே தயாராகி வெகு விரைவிலே அதன் திறப்பு விழா நடைபெறவிருக்கிறது.

மைசூரிலே உள்ள அந்த மையத்திலே பணியாற்றிக் கொண்டிருப்பவர்கள் எல்லாம் செந்தமிழ் மொழியை வளர்க்க இங்கே வந்து தங்களுடைய பணியைத் தொடங்கி விட்டார்கள். விரைவிலே அதனுடைய தொடக்க விழாவும் நடைபெற விருக்கிறது.

ஓட்டை, உடைசல்கள்:

இவையனைத்தும் நிறைவேறுகிற நேரத்தில் சில பேருக்கு (ராமதாஸ்?) ஓட்டை உடைசல்கள் கண்ணுக்குத் தெரியலாம். ஓட்டை உடைசலே இல்லை, நாங்கள் ஒழுங்காக இந்தக் கட்டிடத்தை அமைத்திருக்கிறோம் என்று மார்தட்டிக் கொள்ளக் கூடிய அளவிற்கு நாங்கள் யாரும் அவ்வளவு அறிவற்றவர்கள் அல்ல.

எங்களுக்கும் தெரியும், எங்கெங்கே பிழை ஏற்படுகிறது, எங்கெங்கே குற்றம் ஏற்படுகிறது என்பதெல்லாம் மிக நன்றாகத் தெரியும்.

வால் இன்னும் நுழையல, சார்:

பள்ளிக் கூடத்திலே சிறு வயதிலே படித்திருக்கிறோம். ஆசிரியர் பாடம் சொல்லிக் கொடுக்கிறார். பிள்ளைகள் எல்லாம் ஆசிரியரை உற்றுக் கவனித்து, சொல்லிக் கொடுப்பதை காதிலே கேட்டு கருத்திலே பதிய வைத்துக் கொள்கிறார்கள். ஒரு பையன் மாத்திரம் வேறு எங்கேயோ பராக்கு பார்த்துக் கொண்டிருக்கிறான். அவனை ஆசிரியர் கூப்பிட்டு, என்னப்பா நான் சொன்னதெல்லாம் நுழைந்ததா என்று கேட்கிறார்.

எல்லாம் நுழைந்தது சார், இன்னும் வால் மாத்திரம் நுழையவில்லை என்கிறான். என்னவென்று பார்த்தால், அங்கே உள்ள ஒரு சிறிய பொந்தில் ஒரு எலி நுழைந்து கொண்டிருக்கின்றது. அதிலே முழு உருவமும் நுழைந்து விட்டது, வால் மட்டும் நுழையவில்லை. அவன் அதையே பார்த்துக் கொண்டிருக்கிறான்.

பையன் இப்படி இருக்கிறானே:

தமிழ்நாட்டில் சில பேர் வால் நுழைந்து விட்டதா என்பதைப் பார்த்து, அதைக் குற்றமாக இன்றைக்குச் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். நமக்கு வால் நுழைந்ததா, கால் நுழைந்ததா என்பது இல்லை, பையன் இப்படி இருக்கிறானே என்ற கவலை தான் நமக்கு.

அந்தப் பையனையும் திருத்த வேண்டுமென்று தான் நாம் பாடுபடுகிறோம். உங்களுக்கு ஞாபகம் இருக்கும். தேர்தல் நேரத்தில், தேர்தல் அறிக்கை வெளியிட்ட போது, அதைப்பற்றி வடக்கே இருந்த தலைவர்கள் என்ன சொன்னார்கள்?

கதாநாயகன் யார்.. வில்லன் யார்:

இந்தத் தேர்தலிலே கதாநாயகனே, திமுக தேர்தல் அறிக்கை தான் என்று நம்முடைய இன்றைய நிதியமைச்சர் சிதம்பரம் சொன்னார். அந்தக் கதாநாயகன் வெற்றி பெறுகிறான், வெற்றி மேல் வெற்றி குவிக்கிறான்.

ஆனால் வில்லன், கதாநாயகன் ஜெயிக்கவில்லை, நாங்கள் தான் ஜெயிப்போம் என்று சொல்லிக் கொண்டிருக்கிறான்.

படக் காட்சியோ, நாடகக் காட்சியோ, இறுதி முடிவு வில்லனுக்கு வெற்றியா? கதாநாயகனுக்கு வெற்றியா? என்பதை நான் அல்ல, என்னைப் போல கதை எழுதத் தெரிந்த ஜெயகாந்தன் போன்றவர்கள் அறிவார்கள்.

வாலி போன்றவர்கள் அறிவார்கள். நம்முடைய அவ்வை போன்றவர்கள் அறிவார்கள், ஏன் படங்களைப் பார்த்துப் பார்த்து ரசித்து, பாராட்டி, விமர்சிக்கின்ற உங்களைப் போன்றவர்கள் எல்லாம் அறிவீர்கள் என்றார் கருணாநிதி.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+