டீச்சர்கள் கோஷ்டி சண்டை - பள்ளிக்கூடம் மூடப்பட்டது
வேலூர்: வேலூர் மாவட்டம் சேர்க்காடு என்ற ஊரில் பள்ளித் தலைமை ஆசிரியைக்கும், மற்ற இரு ஆசிரியைகளுக்கும் இடையே மோதல் வெடித்ததால் ஆத்திரமடைந்த ஊர் மக்கள் பள்ளிக்கூடத்தை பூட்டினர்.
சேர்க்காட்டில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி உள்ளது. இங்கு தலைமை ஆசிரியையாக இருப்பவர் சுலோச்சனா. இவர் தவிர இப்பள்ளியில் ஆண்டாள் மற்றும் டீக்காம்பாள் என இரு இரண்டு ஆசிரியைகளும் உள்ளனர்.
இந்த இரு ஆசிரியைகளும் தனி அணியாக தலைமை ஆசிரியைக்கு எதிராக செயல்பட்டு வருகின்றனராம். இவர்களுக்கும், தலைமை ஆசிரியைக்கும் இடையே அடிக்கடி சண்டை நடக்குமாம்.
இந்த நிலையில் நேற்று காலை மீண்டும் மோதல் வெடித்தது. இரு ஆசிரியைகளும் வரிந்து கட்டிக்கொண்டு தலைமை ஆசிரியையுடன் சண்டை போட்டுள்ளனர். இந்த சண்டையால் வகுப்புகள் பாதிக்கப்பட்டு, மாணவர்கள் கூடி நின்று வேடிக்கை பார்த்துள்ளனர்.
தகவல் அறிந்ததும் பொதுமக்கள் விரைந்து வந்தனர். ஆசிரியைகளின் மோதலால் தங்களது பிள்ளைகளின் படிப்பு பாழாவதை உணர்ந்து கோபம் கொண்ட அவர்கள் 3 ஆசிரியைகளையும் வெளியேற்றிவிட்டு பள்ளியைப் பூட்டினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
பின்னர் பஞ்சாயத்துத் தலைவி யுவராணி விரைந்து வந்து அனைவருடனும் பேச்சுவார்த்தை நடத்தினார். பின்னர் சமரசம் ஏற்பட்டது. இனிமேல் சண்டை போட மாட்டோம் என ஆசிரியைகள் உறுதி அளித்தனர். அதைத் தொடர்ந்து பள்ளிக்கூடம் மீண்டும் திறக்கப்பட்டது.


Click it and Unblock the Notifications
