ஓடி ஒளிய மாட்டேன், கைது செய்யட்டும்-குரு
சென்னை: என்னை கைது செய்ய முயற்சி நடப்பதாக கூறப்படுகிறது. இதற்காக நான் எங்கும் ஓடி ஒளிய மாட்டேன். என்னை கைது செய்யட்டும், காத்திருக்கிறேன் என வன்னியர் சங்கத் தலைவரும், பாமக முக்கிய பிரமுகருமான குரு கூறியுள்ளார்.
அவர் கூறுகையில்,
நான் வன்னியர் சங்கத் தலைவராக இருந்து மக்கள் முன்னேற்றத்துக்காக பாடுபடுகிறேன். இளைஞர்களை ஒன்றிணைக்கிறேன். அது மற்றவர்களுக்கு உறுத்தலாக இருக்கிறது.
கடந்த செப்டம்பர் மாதம் வன்னியர் சங்க மாநாடு நடத்தினோம். அந்த மாநாட்டுக்கு இடம் தர மறுத்தனர். அதற்கு முன்பே சட்டமன்ற தேர்தலில் என்னை தோற்கடித்தார்கள்.
கடந்த உள்ளாட்சி தேர்தலில் திமுகவினர் கூட்டணி தர்மத்தை மீறினர். எங்கள் இடங்களில் திமுக வேட்பாளர்களை நிறுத்தி ஜெயிக்க வைத்தனர்.
அதன்பிறகு அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் எங்கள் தொண்டர்கள் மீது பொய் வழக்குப் போட்டனர். போலீசிடம் கேட்டேன், மேலிட உத்தரவு என்றார்கள்.
ஜனவரி 6ம் தேதி மாவட்டப் பொதுக் குழுவில் ஆவேசத்தோடு பேசினேன். பொய் வழக்கு போடுகிறீர்கள், பெரம்பலூர் கலெக்டர் கலெக்டராகவே செயல்படவில்லை. மத்திய மந்திரி ராசாவுக்கு எடுபிடியாக செயல்படுகிறார் என்று கோபத்தில் பேசினேன்.
இதற்காக என்மீது வழக்கு போட்டனர். என் கொடும்பாவியை எரித்தார்கள்.
நான் ஒரு பெண்ணை கடத்தியதாக வழக்கு போட்டனர். பிறகு உண்மை தெரிந்து என்னை விடுவித்தார்கள். டாக்டர் ராமதாஸ் என்னிடம் கலைஞரை சந்தித்து உங்கள் நியாயங்களை சொல்லுங்கள். சுமூகமாக பிரச்சினைகளை தீர்த்து கொள்ள வேண்டும் என்றார். நானும் கலைஞரை சந்திக்க தயாரானேன்.
ஆனால் அந்த சி.டியை காரணம் காட்டி சந்திப்பை போலீசார் தடுத்தனர். இத்தனை மாதங்கள் கழித்து பொதுக்குழு பேச்சை இப்போது பெரிதாக்கி விட்டனர்.
என்னை கைது செய்ய முயற்சி நடப்பதாக கூறப்படுகிறது. இதற்காக நான் எங்கும் ஓடி ஒளிய மாட்டேன். என்னை கைது செய்யட்டும், காத்திருக்கிறேன்.
சிறைகளை கண்டு அஞ்சுபவர்கள் நாங்கள் அல்ல. எங்கள் வாழ்க்கையே போராட்டமாகி விட்ட பிறகு சிறையாவது வழக்காவது எதையும் சந்திக்க தயாராக இருக்கிறேன் என்று கூறியுள்ளார் குரு.
20ம் தேதி பாமக பொதுக் குழு கூடுகிறது:
இந் நிலையில் திமுக கூட்டணியிலிருந்து நீக்கப்பட்டது குறித்து விவாதிக்க வரும் 20ம் தேதி பாமக பொதுக் குழு அவசரமாகக் கூடுகிறது.
இது குறித்து பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி வெளியிட்டுள்ள அறிக்கையில், பாட்டாளி மக்கள் கட்சியின் அவசர தலைமை பொதுக்குழு கூட்டம் வரும 20ம் தேதி காலை 9 மணிக்கு சென்னை தேனாம் பேட்டை காமராஜர் அரங்கில் நடைபெறும்.
இதில் மத்திய அமைச்சர்கள் அன்புமணி, வேலு, பா.ம.க. நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், தமிழ்நாடு, புதுச்சேரி மாநிலங்களின் பொதுக் குழு உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொள்வர் என்று கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications