முலாயம்-காங் கூட்டு-சமாளிக்க மாயாவதிக்கு பாஜக வலை

Subscribe to Oneindia Tamil

Naidu and Advani
டெல்லி: விரைவில் மத்திய அரசு கவிழும் என்று பாஜக கருதுகிறது. இதையடுத்து தேர்தலுக்கு தயாராக ஆரம்பித்துள்ளது. குறிப்பாக மாயாவதியுடன் கைகோர்க்கும் வேலைகளை ஆரம்பித்துவிட்டது.

இடதுசாரிகளின் கடும் எதிர்ப்பையும் மீறி அமெரிக்காவுடன் அணு சக்தி ஒப்பந்ததித்தில் கையெழுத்திட மத்திய அரசு முடிவு செய்துவிட்டதையடுத்து விரைவிலேயே ஆட்சி கவிழும் என பாஜக கருதுகிறது.

இதையடுத்து பாஜக தேர்தலுக்கு தயாராக ஆரம்பித்துவிட்டது. கட்சியின் முக்கியத் தலைவர்களுடன் நேற்று முதல் கட்சித் தலைவர் அத்வானி ஆலோசனைகளைத் தொடங்கிவிட்டார். கூட்டணிகள் குறித்து முடிவெடுப்பது, முக்கியமான முன் நிறுத்த வேண்டிய பிரச்சனைகள் ஆகியவை குறித்த ஆலோசனைகளில் பாஜக ஈடுபட ஆரம்பித்துள்ளது.

குறிப்பாக உத்தரப் பிரதேசம், தமிழகம் ஆகியவை தான் பாஜகவுக்கு பெரும் கவலை தரும் மாநிலங்களாக மாறிப் போயுள்ளன. உத்தரப் பிரதேசத்தில் முலாயம் சிங்- காங்கிரஸ் கூட்டணி அமையும்பட்சத்தில் அங்கு பாஜகவுக்கு பெரும் தோல்வி நிச்சயம்.

கடந்த தேர்தலில் பாஜக 3வது இடத்தையும் காங்கிரஸ் 4வது இடத்தையும் பிடித்தன.

ஏற்கனவே பகுஜன் சமாஜ் கட்சியின் சவாலை சந்திக்க முடியாமல் திணறி வரும் பாஜக, முலாயம்-காங்கிரஸ் கூட்டணியை சந்திக்க வேண்டுமானால் மாயாவதியுடன் கைகோர்த்தே ஆக வேண்டும்.

ஆனால், அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலிலதாவைப் போலவே கூட்டணிக் கட்சிகளை 'மதிப்பதில்' பேர் போனவர் மாயவதி. மொத்தமே 5 சீட் தருகிறேன் என்று கூட சொன்னாலும் சொல்வார். ஆனாலும் எப்படியாவது மாயாவதியுடன் கூட்டணி அமைப்பதற்கான வேலைகளை பாஜக ஆரம்பித்துவிட்டது. இந்த வேலை பாஜக தலைவர் முக்தார் அப்பாஸ் நக்வியிடம் தரப்பட்டுள்ளது.

பாஜகவில் மாயாவதி மதிக்கும் ஒரு சில தலைவர்களில் நக்வியும் ஒருவர்.

அதே போல பாஜகவுக்கு மிரட்டலைத் தரும் இன்னொரு முக்கிய மாநிலம் தமிழ்நாடு. இங்கு கடந்த தேர்தலில் 40க்கு 40ம் காங்கிரஸ்-திமுக வசம் போனதால் தான் பாஜகவால் மத்தியில் ஆட்சி அமைக்க முடியாமல் போனது.

கடந்த முறை அதிமுகவுடன் கூட்டணி அமைக்க ஜெயலலிதாவிடம் பல அவமானங்களை சந்தித்தது பாஜக. ஆனாலும் வேறு வழியில்லை. இதனால் இந்த முறையும் அதிமுகவுடன் கூட்டணிக்கு பாஜக தயார் தான்.

இந்தக் கூட்டணி அமைய ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணியம் சுவாமி, ஒரு வார இதழின் ஆசிரியர், இன்னொரு முக்கிய பத்திரிக்கையின் ஆலோசகர் ஆகியோர் தீவிரம் காட்டி வருகின்றனர்.

ஆனால் ஜெயலலிதாவிடம் இருந்து இதுவரை பாஜகவுக்கு சரியான சிக்னல் கிடைக்கவில்லை. இதனால் மிரண்டு போயுள்ள அந்தக் கட்சி திமுக, தேமுதிக, பாமக என யாருடனும் கூட்டணிக்குத் தயார் என்று கூற ஆரம்பித்துள்ளது. காங்கிரஸ்-இடதுசாரிகள் தவிர யாருடனும் கைகோர்க்கத் தயார் என பாஜக துணைத் தலைவர் வெங்கையா நாயுடு இரு தினங்களுக்கு முன் சென்னையில் அறிவித்தார்.

இது அதிமுகவை நெருக்கி அதிக சீட் பெறவும், அதிமுகவை விரைவில் முடிவெடுக்க வைக்கவும் பாஜக பயன்படுத்தும் அஸ்திரம் எனக் கருதப்படுகிறது.

இந் நிலையில் வெங்கையா நாயுடு டெல்லியில் நிருபர்களிடம் கூறுகையில்,

ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு திசை தெரியாமல் தள்ளாடிக் கொண்டிருக்கிறது. அணு சக்தி ஒப்பந்தம், விலை வாசி உயர்வு உள்பட பல்வேறு பிரச்சனைகளில் அரசுக்கு சரியான வழிகாட்ட ஆள் இல்லை.

இதனால் மத்திய அரசு மீது மக்கள் நம்பிக்கை இழந்து விட்டார்கள். நாடாளுமன்றத்துக்கு முன் கூட்டியே தேர்தல் நடத்த வேண்டும் என்பதே நாட்டின் ஒட்டு மொத்த விருப்பம்.

பாஜகவும் முன்கூட்டி தேர்தல் நடத்த வேண்டும் என்று விரும்புகிறது. தேர்தலை சந்திக்க பாஜக தயாராகி விட்டது என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+