உணவுக் கழகத்தின் அலட்சியம் - 10 லட்சம் டன் தானியம் நாசம்!
டெல்லி: நாட்டில் ஒரு கோடி பேர் உணவில்லாமல் பட்டினியில் செத்துக் கொண்டிருக்கும் நிலையில், போதிய பராமரிப்பின்றி, இந்திய உணவுக் கழகத்தின் கிட்டங்கிகளில் இருப்பு வைக்கப்பட்டுள்ள பல நூறு கோடி மதிப்புள்ள, 10 லட்சத்திற்கும் மேற்பட்ட டன் கொண்ட உணவுப் பொருட்கள் அழுகிப் போன அவலம் நடந்துள்ளது.
கடந்த பத்து ஆண்டுகளில் நடந்துள்ள கொடுமை இது. பட்டினிச் சாவுகளும், ஒரு வேளை உணவு கூட இல்லாமல் கோடிக்கும் மேற்பட்டோர் பரிதவித்துக் கொண்டிருக்கும் கோரம் ஒருபக்கம் இருக்கும் நிலையில், இந்திய உணவுக் கிட்டங்கிகளில் நடந்துள்ள இந்த அநியாயம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கிட்டங்கிகளில் வைக்கப்படும் உணவுப் பொருட்களை பாதுகாப்பதற்காக இந்திய உணவுக் கழகம் ஆண்டுதோறும் ரூ. 242 கோடியை செலவிடுகிறது. அப்படி இருந்தும் இப்படி ஒரு கொடுமை நடந்துள்ளது. இதில் வெட்க்கேடான விஷயம், இப்படி கெட்டுப் போன பொருட்களை அப்புறப்படுத்த ரூ. 2.59 கோடியை வீணடித்துள்ளதாம் இந்திய உணவுக் கழகம்.
இந்த தகவலை இந்திய உணவுக் கழகம் தானாக வெளியிடவில்லை. டெல்லியைச் சேர்ந்த ஒருவர், தகவல் அறியும் சட்டத்தின் மூலம் கேள்வி கேட்டதன் விளைவாக இந்த பகீர் தகவல் வெளிப்பட்டுள்ளது.
கடந்த பத்து ஆண்டுகளில் மட்டும் 10 லட்சம் டன்உணவுப் பொருட்களை அழுக விட்டுள்ளது இந்திய உணவுக் கழகம்.
இந்திய உணவுக் கழகம்தான் நாடு முழுவதும் அரிசி, கோதுமை உள்ளிட்ட உணவு தானியங்களை கொள்முதல் செய்து, நாடு முழுவதும் விற்பனை செய்யும் முக்கியப் பொறுப்பில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த 1997ம் ஆண்டு முதல்2007ம் ஆண்டு வரையிலான காலத்தில்,1.83 லட்சம் டன் கோதுமை, 3.95 லட்சம் டன் அரிசி, 22 ஆயிரம் டன் நெல், 110 டன் மைதா ஆகியவை சேதமடைந்துள்ளதாக இந்திய உணவுக் கழகம் தெரிவித்துள்ளது.
வடக்குப் பிராந்தியமான உ.பி, உத்தரகான்ட், ஹரியாணா, ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான், இமாச்சல பிரதேசம், டெல்லி ஆகிய மாநிலங்களில்தான் அதிக அளவிலான உணவு தானியங்கள் அழுகிப் போயுள்ளன. அதாவது 7 லட்சம் டன் அளவுக்கு கெட்டுப் போயுள்ளது.
இப்பிராந்தியத்தில் உணவுப் பொருட்களை பாதுகாப்பதற்காக ரூ. 87.15 கோடியை செலவிட்ட உணவுக் கழகம், சேதமடைந்தவற்றை அப்புறப்படுத்த ரூ. 60 லட்சம் பணத்தை செலவிட்டுள்ளது.
தென் பிராந்தியமான தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, கேரளாவில் சேத மதிப்பு 43, 069.023 டன்களாகும். பாதுகாப்புக்கு ரூ.25 கோடியை செலவிட்டுள்ளனர். சேதமடைந்ததை அப்புறப்படுத்த 34 ஆயிரத்து 867 ரூபாயை செலவிட்டுள்ளனர்.
கிழக்குப் பிராந்தியமான அஸ்ஸாம், நாகாலாந்து, மணிப்பூர், ஒரிசா, பீகார், ஜார்க்கண்ட், மேற்கு வங்கத்தில்,1.5 டன் உணவு தானியங்கள் சேதமடைந்துள்ளன. உணவுப் பொருள் பாதுகாப்புக்கு ரூ.122 கோடியை செலவிட்ட உணவுக் கழகம், சேதமடைந்ததை அப்புறப்படுத்த ரூ. 1.65 கோடியை கொட்டியுள்ளது.
உணவுப் பொருட்களை பாதுகாப்பதற்கு செலவிட்ட தொகையை விட சேதமடைந்த பொருட்களின் மதிப்பு மிக அதிகம். இது ஒரு தேசிய அவமானம் என்கிறார் தகவல் அறியும் சட்டத்தின் மூலம், இந்திய உணவுக் கழகத்தின் அலட்சியப் போக்கை தோலுரித்துக் காட்டிய தேவ் ஆஷிஷ் பட்டச்சார்யா.












Click it and Unblock the Notifications