இனியும் கடிதம் வேஸ்ட்!- கருணாநிதிக்கு ராமதாஸ்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்துவது தொடர்பாக இனியும் மத்திய அரசுக்கு கடிதம் எழுதிக் கொண்டிருக்காமல், நேரடியாக டெல்லிக்கு சென்று நிரந்தர தீர்வு காண வேண்டும் என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

புதன்கிழமை (2ம் தேதி) ஆயிரத்திற்கும் மேற்பட்ட தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் துப்பாக்கி முனையில் சிறை பிடித்துத் தலைமன்னாருக்கு கடத்தி சென்று, விடிய விடிய அடித்து உதைத்து பின்னர் திருப்பி அனுப்பியிருக்கிறார்கள். இலங்கை கடற்படையினரின் இந்த அட்டூழியத்தினால், தமிழக மீனவர்களில் பலர் படுகாயம் அடைந்துள்ளனர். மீனவர்களின் படகுகளுக்கு பேரழிவு ஏற்பட்டிருக்கிறது.

தொடர்ந்து நடைபெற்று கொண்டிருக்கும் இந்த கொடுமைகளுக்கு தீர்வு என்ன? தமிழக மீனவர்கள் தாக்கப்படும் நிகழ்வுகள் நடைபெறும்போதெல்லாம், முதல்வர் கருணாநிதியோ, தலைமைச் செயலாளரோ மத்திய அரசுக்கு கடிதம் எழுதி நமது மீனவர்களின் உயிருக்கும், உடமைகளுக்கும் பாதுகாப்பு அளிக்கவும், கச்சத்தீவை சுற்றி மீன்பிடிப்பதற்கு உள்ள மரபுவழி உரிமையை நிலைநிறுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துவது பல ஆண்டு காலமாக ஒரு சம்பிரதாய நிகழ்வாக நடந்து வந்திருக்கிறது.

இப்போதும் முதல்வர் கருணாநிதி 2006ம் ஆண்டு செப்டம்பர் மாதத்திலும், பிறகு இந்தாண்டு ஜூன் மாதத்திலும் 2 முறை இது தொடர்பாக பிரதமருக்கு கடிதம் எழுதியிருக்கிறார்.

2006ம் ஆண்டு ஆகஸ்டு மாதத்தில் மாநிலத் தலைமைச் செயலாளரும், இந்திய வெளியுறவுத் துறைச் செயலாளருக்கு கடிதம் எழுதி, இந்த சிக்கல் குறித்து இலங்கை அரசுடன் பேச்சு நடத்தும்படி வலியுறுத்தியிருக்கிறார்.

ஆனாலும், நிலைமையில் எந்த மாற்றமும் இல்லை என்பதை கடந்த ஒரு வார காலத்தில் நடைபெற்ற தாக்குதல் சம்பவங்களும், நேற்று நடைபெற்றுள்ள ஆள்கடத்தல் சம்பவங்களும் எடுத்துக் காட்டுகின்றன.

ஒரு நாட்டின் குடிமக்களை ஆயிரக்கணக்கில் இன்னொரு நாட்டின் ஆயுதப் படையினர் துப்பாக்கி முனையில் கடத்திச் சென்று, சித்திரவதை செய்வது என்பது உலகில் வேறு எங்கும் நடக்காத கொடுமையாகும்.

இலங்கை கடற்படையினரின் தொடர் அட்டூழியங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்து, நமது மீனவர்களின் உயிருக்கும், உடமைக்கும் நிலையான பாதுகாப்புத் தேடித்தர வேண்டிய காலகட்டம் வந்துவிட்டது.

1974ம் ஆண்டும், பின்னர் 1976ம் ஆண்டும் கச்சத்தீவு தொடர்பாகவும், கடல் எல்லைத் தொடர்பாகவும் இலங்கையுடன் ஏற்படுத்திக் கொண்டுள்ள உடன்பாடுகள் மறு ஆய்வு செய்யப்பட வேண்டும்.

அந்த உடன்பாடுகளை ரத்து செய்து கச்சத்தீவை மீண்டும் நம்வசம் எடுத்துக்கொள்ள வேண்டும் என்று தமிழகத்தின் சார்பில் தமிழக அரசு, மத்திய அரசிடம் வலியுறுத்த வேண்டும்.

வழக்கம்போல இந்த முறையும் மத்திய அரசுக்கு கடிதம் எழுதி கொண்டிருக்காமல், முதல்வர் கருணாநிதி நேரடியாக டெல்லிக்கு செல்ல வேண்டும்.

பிரதமர், வெளியுறவுத் துறை அமைச்சர் மற்றும் ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் தலைவர் சோனியாகாந்தி ஆகியோரை சந்தித்து நம் மீனவர்களின் உயிருக்கும், உடமைகளுக்கும் தொடர்ந்து ஏற்பட்டு வரும் அச்சுறுத்தல் மற்றும் ஆபத்து பற்றி எடுத்துக்கூறி நிலையான பாதுகாப்பை தேடி தரும் திட்டங்கள் குறித்து விவாதிக்க வேண்டும்.

இனி ஒரு இந்திய மீனவருக்கு ஆபத்து ஏற்பட்டால், கடும் விளைவுகளை சந்திக்க வேண்டியதிருக்கும் என்று இலங்கை அரசை இந்தியா கடுமையாக எச்சரிக்கை செய்ய வேண்டும் என வலியுறுத்த வேண்டும்.

அத்தகைய எச்சரிக்கை விடுத்ததற்கு பின்னர்தான் சென்னைக்கு திரும்புவேன் என்று மத்திய தலைவர்களிடம் முதல்வர் கருணாநிதி எடுத்துக் கூற வேண்டும். தேவைப்பட்டால், அனைத்து கட்சி தலைவர்களையும் முதல்வர் கருணாநிதி இதில் துணைக்கு அழைத்து செல்வதில் தவறில்லை என்று கூறியுள்ளார் ராமதாஸ்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+