கஜானாவில் ஒரு ரூபாய் கூட இல்லை.. காலியான CMDA! சென்னைக்கு பெரிய ஷாக்.. வரலாற்றில் முதல் முறை
சென்னை: வரலாற்றில் முதல் முறையாக சிஎம்டிஏ எனும் சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் கடும் நிதி நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது. முந்தைய திமுக ஆட்சியில் மேற்கொள்ளப்பட்ட பணிகளால் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு தற்போது சிஎம்டிஏ பெரும் நிதி நெருக்கடியை சந்தித்து வரும் நிலையில் ஊழியர்களுக்கான ஊதியம் மற்றும் நிலுவை தொகைகளை கூட செலுத்த பணம் இன்றி தவித்து வருகிறது. இதனால் மாநில அரசிடம் ரூ.200 கோடி வரை நிதி உதவி கோரி உள்ளது. திடீரென சிஎம்டிஏ நிதி நெருக்கடியில் சிக்க என்ன காரணம்? என்பது தொடர்பான அதிர்ச்சி காரணம் வெளியாகி உள்ளது.
சென்னை மற்றும் அதனையொட்டி புறநகர் பகுதிகளுக்கான நகர திட்டமிடல் மற்றும் மேம்பாட்டு பணிகளை மேற்கொள்ள சிஎம்டிஏ எனும் சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் உருவாக்கப்பட்டது. இந்த குழுமம் தான் சென்னை பெருநகரப பகுதியின் திட்ட அனுமதி மற்றும் நிறைவு சான்றிதழ்களை வழங்கி வருகிறது.

இந்நிலையில் தான் தற்போது சிஎம்டிஏ கடும் நிதி நெருக்கடியில் சிக்கி தவித்து வருகிறது. அதாவது சிஎம்டிஏ சமீபத்தில் தனது சொந்த நிதியை பயன்படுத்தி பல்வேறு உள்கட்டமைப்பு திட்டங்களை நிறைவேற்றி உள்ளதாக கூறப்படுகிறது.
குறிப்பிட்டு கூற வேண்டும் என்றால் நூலகங்கள், 'முதல்வரின் படைப்பகங்கள்' (Mudhalvarin Padaipagams), பேருந்து நிலையங்கள் மற்றும் பிற உள்கட்டமைப்பு திட்டங்கள் என சமீபத்திய ஆண்டுகளில் கட்டுமான பணிகளுக்காக மட்டும் சிஎம்டிஏ சுமார் ரூ. 3,000 கோடி வரை செலவிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி இன்னும் முதல்வரின் படிப்பகங்கள், திருமண மண்டபலங்கள், பேட்மிண்டன் கோர்ட், நீச்சல் குளம் உள்ளிட்ட திட்டங்கள் நிறைவு செய்யப்பட்டுள்ளது. இவை விரைவில் சிஎம்டிஏ சார்பில் சென்னை மாநகராட்சி, விளையாட்டு மேம்பாட்டு ஆணையங்களிடம் ஒப்படைக்கப்பட உள்ளது. இப்படி சிஎம்டிஏ தனக்கு சம்பந்தம் இல்லாத திட்டங்களில் நிதியை செலவிட்டாதால் தான் பொருளாதார நெருக்கடியில் சிக்கி உள்ளது.
அதுமட்டுமின்றி நிதி நெருக்கடி காரணமாக தற்போது சிஎம்டிஏ அறிவிக்கப்பட்ட பல்வேறு திட்டங்களை கைவிடும் முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. எந்தெந்த திட்டங்களை கைவிடுவது என்பது தொடர்பாக தீவிரமாக அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். தற்போது ரூ.3,500 கோடி வரை நிதிச்சுமை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதில் ரூ.1,500 கோடி வரை நெகட்டிவ் பேலன்ஸாக உள்ளது. இதுவரை சிஎம்டிஏ மாநில அரசிடம் நிதி உதவி கோராமல் தனது தேவையை தானே பூர்த்தி செய்து வந்தது. ஆனால் தற்போது முதல் முறையாக மாநில அரசிடம் நிதி உதவி கோரி உள்ளது.
இதுபற்றி சிஎம்டிஏவின் மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில்,''இந்த சிஎம்டிஏவின் ஒரே முக்கிய வருவாய் என்பது திட்ட அனுமதி கட்டணமாகும். இந்த கட்டணமும் மிகக்குறைவாக தான் இருக்கும். இதனால் சிஎம்டிஏ ஊழியர்களின் ஊதிய செலவுகளுக்கே அது போதுமானதாக இருக்கும். ஆனால் சிஎம்டிஏ-வின் சொந்த நிதியை கொண்டு பல கட்டுமான பணிகள் மேற்கொள்ளப்பட்டன. நிதி நிலைமையை முழுமையாக கருத்தில் கொள்ளாமலேயே அந்த திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன.
தற்போது சிஎம்டிஏவில் நிதி நிலைமை மோசமாகி உள்ளது. தனது அடிப்படை பணிகளுக்கு அப்பாற்பட்டு பல கட்டுமான பணிகளை மேற்கொண்டதே இந்த நிலைமைக்கு காரணம். இதனால் நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இந்த நிதி நெருக்கடியில் இருந்து மீள மாநில அரசிடம் உதவி மற்றும் மானியங்கள் கோரப்பட்டுள்ளது '' என்று கூறினார்.


Click it and Unblock the Notifications
