வரதட்சிணைக்காக பெண்கள் தற்கொலைக்கு தூண்டப்படுவது சமூகத்தின் அவமானம்! டெல்லி நீதிபதி வேதனை
டெல்லி: வரதட்சிணைக்காக பெண்கள் கொடுமைப்படுத்தப்பட்டு கொல்லப்படுவதும், தற்கொலைக்கு தூண்டப்படுவதும் நம் ஒட்டுமொத்த சமூகத்தின் அவமானம் என டெல்லி உயர்நீதிமன்றம் வேதனை தெரிவித்துள்ளது.
டெல்லியைச் சேர்ந்த திருமணமான 2 ஆண்டுகளிலேயே சோனியா என்ற இளம்பெண் 2001 ஆம் ஆண்டு வரதட்சிணை கொடுமையால் வீட்டில் தீக்குளித்து உயிரிழந்தார்.

சோனியாவிடம் கணவர் வீட்டால் பைக், கேஸ் அடுப்பு, ரூ25 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை வரதட்சிணையாக கேட்டு அவரை கொடுமைப்படுத்தியதாக பெண் வீட்டார் போலீஸில் புகார் அளித்தனர். இந்த வழக்கில் கணவர் ஜெய்தேவ், அவரது தந்தை மற்றும் சகோதரருக்கு டெல்லி நீதிமன்றம் தலா 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.
இந்த தீர்ப்பை எதிர்த்து டெல்லி உயர்நீதிமன்றத்தில் 2004ஆம் ஆண்டு கணவர் வீட்டார் மேல்முறையீடு செய்தனர். 25 ஆண்டு கால வழக்கில் தனி நீதிபதி விமல் குமார் அளித்த தீர்ப்பில் கூறியிருப்பதாவது: திருமணம் என்பது இரு தனிநபர்கள் , இரு குடும்பங்களின் இணைப்பாக இருந்தால் போதும்.
வரதட்சிணை கொடுமையால் மணப்பெண் கொல்லப்படுவதும், தற்கொலைக்கு தூண்டப்படுவதும் அருவருக்கத்தக்கது. மற்ற சமூகங்களில் இல்லாத இந்த கொடுமை நம் சமூகத்தில் பரவலாக உள்ளது. இது ஒட்டுமொத்த சமூகத்தின் அவமானம்.
ஒரு பெண் பல்வேறு ஆசைகள், கனவுகள், எதிர்பார்ப்புகள், மகிழ்ச்சி ஆகியவற்றுடன் திருமண வாழ்க்கையில் அடியெடுத்து வைத்து தனது சொந்த பந்தங்களை விட்டுவிட்டு புகுந்த வீட்டிற்குள் நுழைகிறார். ஆனால் அவர் துன்புறுத்தப்படும் போதும் பெற்றோரிடமிருந்து வரதட்சிணையை வாங்கி வரும்படி வற்புறுத்தப்படும் போதும் அவரது கனவுகள் சிதைந்து போகின்றன. பிறந்த வீட்டை விட்டுத் தன்னை நம்பி வரும் மனைவியை அக்கறையுடன் கவனித்துக் கொள்வது ஒவ்வொரு கணவரின் கடமையாகும் என்றார் நீதிபதி.
மேலும் இந்த வழக்கை பொருத்தமட்டில் போதிய ஆதாரங்கள் இல்லாததால் ஜெய்தேவின் தந்தை, சகோதரரை விடுவிக்க வேண்டும். ஜெய்தேவ் மீதான வரதட்சிணை குற்றச்சாட்டை மார்றி, மனைவியை தற்கொலைக்கு தூண்டியது, கொடுமைப்படுத்தியதற்காக அவரை குற்றவாளி என அறிவிப்பதாக நீதிபதி தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு தேசிய மகளிர் ஆணையத்திற்கு வந்த மொத்த புகார்களில் குடும்ப வன்முறை மற்றும் வரதட்சிணைத் துன்புறுத்தல் தொடர்பான புகார்கள் தொடர்ந்து அதிகரித்துள்ளன. கடந்த 2024 ஆம் ஆண்டு பதிவான வரதட்சிணை கொடுமை வழக்குகள் 1,20,277 ஆகும். வரதட்சிணை கேட்டது, குறித்த வழக்குகள் 12,343 ஆகும்.


Click it and Unblock the Notifications
