ஐஏஇஏ-விடம் வழங்கப்பட்ட வரைவு ஒப்பந்தம் திடீர் வெளியீடு!

இந்த வரைவு ஒப்பந்தம் மிகவும் ரகசியமானது, இதை வெளிப்படுத்த முடியாது என்றும் மத்திய வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி கூறியிருந்தார். இதையே இடதுசாரிகளுக்கு அளித்த பதிலிலும் அவர் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் மத்திய வெளியுறவு அமைச்சக இணையதளத்தில் இன்று அந்த ஒப்பந்தம் வெளியாகியுள்ளது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த ஒப்பந்தத்தில் உள்ள முக்கிய அம்சங்கள்..
- இந்தியாவின் சிவில் அணு மின் நிலையங்கள் ஐஏஇஏ பாதுகாப்பு அம்சங்களின் கீழ் கொண்டு வரப்படும். (இதன்மூலம் இந்த அணு உலைகளை ஐஏஇஏ கண்காணிக்க முடியும்)
- இந்திய அணு உலைகளுக்கான எரிபொருள் விநியோகத்தில் பாதிப்பு ஏற்பட்டால் சமாளிக்க, எரிபொருள் சேமிப்புத் திட்டம் (strategic reserve or nuclear fuel bank)
- எரிபொருள் விநியோகத்தில் பாதிப்பு ஏற்பட்டால் அதற்கான திருத்த நடவடிக்கைகளை இந்தியா மேற்கொள்ளும்.
இந்தியா அணு குண்டு சோதனை நடத்த அனுமதி?:
(இந்த இடத்தில் தான் ஒரு விஷயம் புதைந்திருக்கிறது என்கிறார் அமெரிக்காவின் Arms Control Association அமைப்பைச் சேர்ந்த டேரில் கிம்பால். இந்தியாவுக்கு எப்போது எரிபொருள் வினியோகத்தில் பாதிப்பு வரும் என கேள்வி எழுப்பும் அவர், இந்தியா அணு குண்டு சோதனை நடத்தினால் தான் அந்த பாதிப்பு வரும் என்கிறார். திருத்த நடவடிக்கைகளை இந்தியா மேற்கொள்ளலாம் எனக் கூறப்பட்டுள்ளதைப் பார்த்தால் இந்தியா அணு ஆயுத சோதனை நடத்தலாம்.. தேவைப்பட்டால் ஒப்பந்தத்தில் இருந்து வெளியறலாம் எனறு தான் இதற்கு அர்த்தம் என்கிறார்).
- இந்தியா அதிகபட்சமாக 1 கிலோ புளுட்டோனியம் (அணு ஆயுதம் தயாரிக்க உதவும்) வரை வைத்துக் கொள்ள ஐஏஇஏ விலக்கு அளிக்கிறது.
-மேலும் ஐஏஇஏவின் கண்காணிப்பில் இருந்து இந்தியாவுக்கு 20 சதவீதத்துக்கு அதிகமாக சுத்திகரிக்கப்பட்ட யுரேனியம், 20 சதவீதத்துக்கு குறைவாக சுத்திகரிக்கப்பட்ட யுரேனியம், 10 மெட்ரிக் டன் இயற்கை யுரேனியம், 0.5 சதவீதத்துக்கும் குறைவாக சுத்திகரிக்கப்பட்ட 20 மெட்ரிக் டன் யுரேனியம், 20 மெட்ரிக் டன் தோரியம் ஆகியவற்றை வைத்துக் கொள்ளவும் விலக்கு அளிக்கப்படுகிறது. ஆனால், இவற்றை சுத்திகரித்தால் 1 கிலோவுக்கு அதிகமான எரிபொருள் (அணு குண்டுகளில் பயன்படும்) உற்பத்தியாகக் கூடாது.
(இதன்மூலம் இந்தியா அதிகபட்சம் 1 கிலோ அளவிலான ஆயுத ரக எரிபொருளை மட்டுமே வைத்திருக்கலாம் என விதி வகுக்கப்பட்டுள்ளது. அணு ஆயுதங்களி்ல் பயன்படுவது சில கிராம் எரிபொருள் தான் என்பது குறிப்பிடத்தக்கது)
-ஐஏஇஏ கண்காணிப்பில் உள்ள அணு உலைகளில் உருவாக்கப்படும் எரிபொருளைக் கொண்டு இந்தியா அணு ஆயுதம் ஏதும் தயாரிக்கக் கூடாது.
- இந்தியாவை கண்காணிக்க ஐஏஇஏவுக்கு கூடுதலாக 1.2 மில்லியன் ஈரோ செலவாகும். (இந்த செலவை இந்தியா ஏற்க வேண்டி வரலாம் எனத் தெரிகிறது)
-அதே நேரத்தில் இந்தியாவின் எந்தெந்த அணு உலைகள் ஐஏஇஏவின் கண்காணிப்பின் கீழ் வரும் எவை வராது என்ற விவரம் வெளியிடப்படவில்லை. இதன்மூலம் இந்தியாவிடம் உள்ளதில் எவை அணு ஆயுதம் தயாரிப்பதற்கான ராணுவ அணு உலைகள், எவை மின் உற்பத்திக்கான சிவிலியன் அணு உலைகள் என்ற ரகசியம் காக்கப்பட்டுள்ளது.
இவை தான் வெளியுறவுத்துறை அமைச்சக இணையதளத்தில் இடம் பெற்றுள்ள ஒப்பந்தம் குறித்த முக்கிய தகவல்கள். முதலில் நாடாளுமன்றத்தில் நம்பிக்கைத் தீர்மானத்தைக் கொண்டு வந்துவிட்டுத் தான் இந்த ஒப்பந்த விவரங்களை வெளியில் சொல்வோம் என வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி கூறியிருந்த நிலையில், திடீரென இந்த விவரங்களை இந்தியா வெளியிட்டுவிட்டது குறிப்பிடத்தக்கது.
இந்த வரைவு ஒப்பந்தத்தில் உள்ள தகவல்கள் மேலோட்டமானவைகளாகவே தெரிகின்றன. ஆனால் இதை விட சிக்கலான, பரம ரகசியமான பல அம்சங்கள் இந்த வரைவு ஒப்பந்தத்தில் புதைந்திருக்கலாம்.
இந்த வரைவு ஒப்பந்தம் ஐஏஇஏவில் உள்ள போர்ட் மெம்பர்கள் தவிர, நியூக்ளியார் சப்ளை குரூப்பில் (NSG) உள்ள 45 நாடுகளுக்கும் சுற்றுக்கு விடப்பட்டுள்ளது.
அணு ஆயுத பரவல் தடை சட்டத்தில் கையெழுத்திட்ட நாடுகளுக்குத் தான் அணு உலைகளுக்கான எரிபொருளை என்எஸ்ஜி நாடுகள் சப்ளை செய்யலாம். ஆனால், இதில் இந்த சட்டத்தில் இந்தியா கையெழுத்திடவில்லை. இருந்தாலும் இந்தியாவுக்கு எரிபொருள் வழங்க வகை செய்கிறது இந்த வரைவு ஒப்பந்தம். இதற்கு என்எஸ்ஜியில் உள்ள 45 நாடுகளும் சம்மதம் தெரிவித்தாக வேண்டும்.
இதன் பின்னரே இந்தியா-ஐஏஇஏ இடையே இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகும்.
இந்த கையெழுத்துக்குப் பின்னரே இந்தியாவும் அமெரிக்காவும் அணு ஒப்பந்தத்தில் கையெழுத்திட முடியும்.
இதற்கிடையே இந்தியாவுக்காக என்எஸ்ஜியில் உள்ள நாடுகளின் ஆதரவைப் பெறுவதற்காக அமெரிக்காவே நேரடியாக களமிறங்கியுள்ளது. இந்தியாவுக்கான அமெரிக்கத் தூதர் டேவிட் முல்போர்ட் இந்த வேலைகளை செய்து வருகிறார்.
இந்தியாவில் உள்ள என்எஸ்ஜி நாடுகளின் தூதர்களை சந்தித்து வரும் அவர் இந்த ஒப்பந்தத்துக்கு அவர்களது நாடுகளி்ன் அனுமதியை உடனே பெற்றுத் தருமாறு கோரி வருகிறார்.
மேலும் அமெரிக்க வெளியுறவுத்துறையும் இந்த நாடுகளின் தலைவர்களிடம் பேசி வருகிறது. இதன் மூலம் தனது பதவிக் காலத்திலேயே இந்த ஒப்பந்தத்தை அமலுக்குக் கொண்டு வந்துவிடும் வகையில் வேகம் காட்டி வருகிறார் அமெரிக்க அதிபர் புஷ்.
வரைவு ஒப்பந்தத்தின் முழு விவரம்












Click it and Unblock the Notifications