தமிழ் மக்களை காக்க ஒன்றுபட வேண்டும்: தா.பாண்டியன்
டெல்லி: தமிழக மீனவர்களை தொடர்ந்து இலங்கை கொன்று குவிப்பதைத் தடுத்து, தமிழ் மக்களின் உயிர்களைக் காக்க தமிழக அரசியல் கட்சிகள் ஒன்றுபட்டு, ஒரே குரலில் போராட வேண்டும். இலங்கையின் அட்டூழியத்தை தடுத்தாக வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலச் செயலாளர் தா.பாண்டியன் கோரிக்கை விடுத்துள்ளார்.
நாகை மாவட்ட மீனவர்கள் இருவர் இன்று இலங்கை கடற்படையால் கொன்று குவிக்கப்பட்ட சம்பவத்திற்கு தா.பாண்டியன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து டெல்லியில் அவர் கூறுகையில், இது ஏதோ 2 மீனவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர், ஒருவர் படுகாயம் என்ற செய்தி அளவில் எடுத்துக் கொள்ளப்பட வேண்டிய சம்பவம் அல்ல. பல வருடங்களாகவே தமிழக மீனவர்களை, தமிழர்களை கொன்று குவிப்பதை கடைப்பிடித்து வருகிறது இலங்கை.
இந்த தொடர் அட்டூழியங்களுக்கு இந்திய அரசு கடுமையான எச்சரிக்கை விட வேண்டும், தடுத்து நிறுத்த வேண்டும் என நாம் வலியுறுத்தி வருகிறோம். ஆனால் இதுவரை இந்திய அரசு எச்சரிக்ைக விடுத்ததாகவே தெரியவில்லை.
மாறாக, இலங்கை அரசு அகங்காரத்தோடும், ஆணவத்தோடும், தனது ராணுவ வெறியைக் காட்டி வருகிறது. தமிழக மீனவர்களை ஒரேயடியாக கொன்று குவித்து விடலாம் என கருதுகிறது.
இன்றைய சம்பவத்தைப் பார்த்த பிறகும், மத்திய அரசு நடவடிக்ைக எடுக்காமல் மெளனமாக இருப்பது வருத்தம் தருகிறது.
தமிழகத்தைச் சேர்ந்த அனைத்துக் கட்சிகளும் ஒருமித்த குரலில், தங்களது எதிர்ப்பைக் காட்டி இலங்கை அரசின் வெறித்தனத்தைத் தடுத்தாக வேண்டும். இலங்கையை கட்டுப்படுத்தியாக வேண்டும். தமிழ் மக்களின் உயிரைக் காக்க வேண்டும் என்றார் தா.பாண்டியன்.












Click it and Unblock the Notifications