அமெரிக்காவிடம் மோசமாக வளைந்து போகிறார் பிரதமர்: ஜெ.

இது குறித்து ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கை:
பல சர்ச்சைகளுக்கு உள்ளாகி இருக்கும் இந்த ஒப்பந்தம், இவ்வளவு அவசரமாக நிறைவேற்றப்படுவது அவசியமில்லை என்று அதிமுக உறுதிபட நம்புகிறது. மன்மோகன் சிங், தனது ஆட்சிக் காலத்தில் இதை நிறைவேற்றாவிட்டால், வானம் இடிந்து யார் தலையிலும் விழப் போவதில்லை.
இந்த ஒப்பந்தம் குறித்த அனைத்து அம்சங்களும் நாட்டின் எல்லா நிலைகளிலும் விவாதிக்கப்பட வேண்டும். ஒப்பந்தத்தின் முன்வறைவு இந்திய அரசின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் ஆறு மாதங்களுக்கேனும் மக்கள் பார்வைக்கு வைக்கப்பட வேண்டும். எல்லாத் தரப்பினரின் கருத்துக்களையும் கேட்க வேண்டும்.
இந்த கருத்துக்களும் அனை வருடைய பார்வைக்கும் வைக்கப்பட வேண்டும். பலதரப்பட்ட அறிவியல் அறிஞர்களின் கருத்துக்கள், அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்கள் தெரிவிக்கும் கருத்துக்கள், சமூக ஆர்வளர்களின் எண்ணங்கள் எல்லாம் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் விவாதிக்கப்பட வேண்டும்.
ஏதேனும் மாற்றங்கள் செய்யப்பட வேண்டும் என்றால் அவை ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும். இவை அனைத்தும் பகிரங்கமாகவும், வெளிப்படையாகவும் நடைபெற வேண்டும். இந்த நடவடிக்கைகளின் விளைவாக பெரும்பான்மையான மக்களின் ஆதரவு இந்த ஒப்பந்தத்திற்கு கிடைத்தால், அதன் பிறகே ஒப்பந்தம் இறுதி செய்யப்பட வேண்டும்.
அப்போது தான் அது தேச நலன் கருதிய ஒப்பந்தமாக இருக்கும். அப்படி ஒரு ஒப்பந்தம் உருவாகின்ற போது அரசு அதை நடைமுறைப்படுத்தலாம். குறுகிய அரசியல் நோக்கங்களை மீறி, தேசநலன் கருதி செயல்படும் துணிவு அப்போது எல்லாத் தரப்பினருக்கும் ஏற்பட வேண்டும். அதே நேரத்தில் தேசத்தின் ஒரு மித்த கருத்து ஒப்பந்தத்திற்கு எதிராக இருந்தால், அதைத் தூக்கி குப்பைத் தொட்டியில் எறியவும் தயாராக இருக்க வேண்டும்.
எதற்காக தேர்ந்தெடுக்கப்பட்டதோ, அந்தப் பணியில் ஈடுபட இந்த மத்திய அரசை நான் மீண்டும் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். ஆட்சி நடத்துங்கள். நீங்கள் அதற்குத் தான் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறீர்கள். விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த கடுமையான நடவடிக்கைதேவை.
ஆனால் பொருளாதார மேதைகளாக தங்களை சித்தரித்துக் கொண்டு, நிதி அமைச்சகத்தில் அமர்ந்திருக்கும் பெருந்தலைகளோ என்ன நடக்கிறது என்பதைப் பற்றி ஏதும் அறியாதவர்களாக காலத்தைப் போக்கிக் கொண்டிருக்கின்றனர்.
பல்வேறு வங்கிகளின் சிறு கிளைகளை தன்னுடைய சொந்த தொகுதியான சிவகங்கையில் திறந்து வைப்பதே எல்லா பிரச்சனைக்கும் தீர்வு என்று நிதி அமைச்சர் நினைக்கிறார் போலும். தனது மயக்க நிலையை விட்டு வெளியே வந்து மக்கள் பிரச்சனைகளை தீர்க்க அவர் முயற்சிக்கட்டும். அணுசக்தி ஒப்பந்தம் சராசரி இந்தியனுக்கு உணவையோ, உடையையோ, உறைவிடத்தையோ நிச்சயமாகத் தரப்போவது இல்லை என்று அவர் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications