தொட்டதெல்லாம் தோல்வி கேள்விப்பட்டு இருக்கீங்களா! விஜய்க்கு கோர்ட்டில் சரிவு மேல் சரிவு! என்னங்க ஆச்சு
சென்னை: முதல்வர் விஜய் தலைமையிலான அரசுக்கு, நீதிமன்ற வழக்குகளில் அடுத்தடுத்து பெரும் பின்னடைவுகள் ஏற்பட்டு வருவது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
எதிர்க்கட்சிகள் மற்றும் சமூக ஊடக விமர்சகர்கள் மீது காவல்துறை மூலம் எடுக்கப்படும் சட்டப்பூர்வ நடவடிக்கைகள் பலவும், நீதிமன்றங்களின் கதவுகளைத் தட்டும்போது அரசுக்கு சாதகமாக அமையாமல் சரிவைச் சந்தித்து வருகின்றன.
அரசு தொடுக்கும் முக்கிய வழக்குகளில் நீதிமன்றங்கள் அடுத்தடுத்து காவலில் வைக்க அனுமதி மறுப்பதும் முக்கிய எதிர்க்கட்சித் தலைவர்களுக்குச் சாதகமாக உத்தரவுகளைப் பிறப்பிப்பதும் விஜய் அரசின் சட்டத்துறை மற்றும் உளவுத்துறை மீதான விவாதங்களை அதிகரித்துள்ளது.

ஜென் இசட் வழக்கில் தோல்வி
அண்மையில் சமூக ஊடகங்களில் தமிழக அரசு மற்றும் முதல்வரின் குடும்பத்தினரை விமர்சித்து வீடியோ வெளியிட்டதாக திமுக ஜென் இசட் பிரிவைச் சேர்ந்த நிர்வாகிகள் மீது காவல்துறை கடுமையான பிரிவுகளின் கீழ் வழக்குகளைப் பதிவு செய்தது.
சரண் ஜெயராமன்: திமுகவின் ஜென் இசட் பிரிவைச் சேர்ந்த முக்கிய நிர்வாகியான சரண் ஜெயராமனைப் பிடிக்க காவல்துறை தீவிர முனைப்பு காட்டியது. ஆனால், இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், காவல்துறை தரப்பில் வைக்கப்பட்ட சிறைக்காவல் கோரிக்கையை நிராகரித்து அதிரடி உத்தரவிட்டது.
அன்பானந்தம்: இதேபோன்று சமூக வலைதளப் பதிவு விவகாரத்தில் கைது செய்ய முயன்ற ஜென் இசட் ஒருங்கிணைப்பாளர் அன்பானந்தம் விவகாரத்திலும் அரசுக்குத் தோல்வியே மிஞ்சியது. ஆரம்பத்தில் சென்னை உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமீன் மனு மீது விசாரணை நடந்த நிலையில், பின்னர் நீதிமன்றத்தில் காவல்துறை அவரை சிறையிலடைக்க கோரியபோது, அந்த கோரிக்கையும் நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டு அவர் விடுவிக்கப்பட்டார்.
பரளி தங்கம் மற்றும் அனிதா ராதாகிருஷ்ணன் வழக்குகள்
அரசியல் களத்தைத் தாண்டி சமூக ரீதியாகவும் அரசு எடுத்த சில நடவடிக்கைகள் நீதிமன்றங்களில் எடுபடவில்லை. கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி சமூக ஆர்வலரான பரளி தங்கம் என்பவருக்கு எதிராக காவல்துறை எடுத்த கைது நடவடிக்கையில், நீதிமன்றம் அவரது சிறைக்காவல் கோரிக்கையை நிராகரித்தது.
அதேபோல், முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனுக்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்கிலும் நீதிமன்றம் சிறைக்காவல் அனுமதியை வழங்க மறுத்து, அரசுக்கு மீண்டும் ஒரு சட்ட ரீதியான முட்டுக்கட்டையைப் போட்டது.
முன்னாள் அமைச்சர்களின் சட்டப் போராட்டம்
விஜய் அரசுக்கு மிகப்பெரிய சட்டப் பின்னடைவாகப் பார்க்கப்படுவது முன்னாள் அமைச்சர்களுக்கு எதிரான வழக்குகளில் நீதிமன்றங்கள் வழங்கிய உத்தரவுகள்தான்.
செந்தில் பாலாஜி: கடந்த ஆட்சியில் முக்கிய அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜிக்கு எதிராக அரசு தீவிர சட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டது. முக்கியமாக எம்எல்ஏ இளையராஜாவிற்கு பணம் கொடுத்து குதிரை பேரம் செய்ய முயன்றதாக போடப்பட்ட வழக்கில் அவரை கைது செய்ய விஜய் தீவிரம் காட்டினார். ஆனால், நீதிமன்றம் அவருக்கு முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது, விஜய் அரசின் கைது திட்டங்களுக்குப் பலத்த அடியாக அமைந்தது.
எ.வ.வேலு: முன்னாள் அமைச்சர் எ.வ.வேலுவுக்கு எதிராகப் பிறப்பிக்கப்பட்ட லுக் அவுட் நோட்டீஸ் விவகாரத்தில் அரசுக்கு உச்சகட்ட அவமானம் மிஞ்சியது. இந்த லுக் அவுட் நோட்டீஸிற்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்தது. இதனை எதிர்த்து விஜய் அரசு உடனடியாக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. ஆனால், அங்கும் அரசுக்கு ஏமாற்றமே மிஞ்சியது; உச்சநீதிமன்றமும் உயர்நீதிமன்றத்தின் தடையை நீக்க மறுத்து, அரசின் அப்பீல் மனுவை நிராகரித்துத் தடை உத்தரவை நீட்டித்தது.
சட்ட நிபுணர்களின் பார்வை
அரசு பொறுப்பேற்ற சில மாதங்களிலேயே வழக்குகளில் தோல்வியைச் சந்தித்து வருவது, காவல்துறை அவசரக்கோலத்தில் வழக்குகளைப் பதிவு செய்கிறதா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது. விமர்சனங்களை எதிர்கொள்ள முடியாமல் கைது என்ற ஆயுதத்தை அரசு தவறாகப் பயன்படுத்துவதாலேயே நீதிமன்றங்கள் கடுமையான நிலைப்பாட்டை எடுக்கின்றன என எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன.












Click it and Unblock the Notifications