முலாயம் தூண்டுதலால் சிபிஐ-யை ஏவுகிறது காங்.: மாயாவதி
டெல்லி: முலாயம் சிங் யாதவின் தூண்டுதல் காரணமாக என் மீது சிபிஐ விசாரணையை ஏவி என்னை அரசியலை விட்டே ஒழிக்கப் பார்க்கிறது காங்கிரஸ் என உ.பி. முதல்வரும், பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவருமான மாயாவதி குற்றம் சாட்டியுள்ளார்.
முலாயம் சிங்கின் மிகப் பெரிய எரிச்சல் மாயாவதிதான். உ.பியில் நிலவி வந்த முலாயம் சிங்கின் ஆதிக்கத்திற்கு மிகப் பெரிய அதிர்ச்சி வைத்தியம் அளித்து மூடு விழா நடத்தியவர் மாயாவதி.
இந்த நிலையில் அணு சக்தி ஒப்பந்த விவகாரத்தில் தடாலடியாக காங்கிரஸை நெருங்கிய முலாயம் சிங், அரசுக்கு ஆதரவு அளிப்பதாக அறிவித்தார். அவர்அப்படி அறிவித்த ஓரிருநாட்களிலேயே மாயாவதி மீதான வழக்கை மீண்டும் தூசு தட்டி எடுத்துள்ளது சிபிஐ. அவர் மீதான குற்றச்சாட்டுக்களுக்கு ஆதாரம் இருப்பதாக சிபிஐ தெரிவித்துள்ளது.
இதனால் மாயாவதிக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஆனால் முலாயம் சிங் யாதவின் தூண்டுதலால்தான் காங்கிரஸ் இந்த நடவடிக்ைகயை எடுத்திருப்பதாக மாயாவதி குற்றம் சாட்டியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், சொத்துக் குவிப்பு வழக்கில் என் பெயரைக் கெடுக்க நினைக்கிறது சமாஜ்வாடி கட்சி. இதனால் காங்கிரஸுக்கு நெருக்கடி கொடுத்து என் மீதான வழக்கை தூண்டி விட்டுள்ளது.
என்னை உ.பி. மற்றும் டெல்லி அரசியல் களத்திலிருந்தே ஒழித்துக் கட்ட சமாஜ்வாடி நினைக்கிறது. ஆனால் அது முடியாத காரியம்.
நம்பிக்கை வாக்கெடுப்பில் நிச்சயம் பகுஜன் சமாஜ் கட்சி அரசுக்கு எதிராகத்தான் வாக்களிக்கும். அதில் எந்த மாற்றமும் இல்ைல.
அமர்சிங்கின் உத்தரவுக்கேற்பதான் சிபிஐ இயக்குநர் செயல்படுகிறார். அவர் சொல்வதை சிபிஐ இயக்குநர் கேட்கிறார். எனக்கு எதிராக செயல்படுமாறு சிபிஐ இயக்குநர் உத்தரவிடப்பட்டுள்ளார். அவருடைய பதவி ஜூலை 31ம் தேதியுடன் முடிவடைகிறது. அதற்குப் பிறகு பெரிய பதவியாக தருகிறோம் என சிபிஐ இயக்குநருக்கு ஆசை காட்டியுள்ளனர்.
உச்சநீதிமன்றத்திற்கே தவறான தகவல்களைத் தருகிறது சிபிஐ. இந்த பொய் வழக்கிலிருந்து மீள முடியும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது.
அரசுக்கு பகுஜன்சமாஜ் கட்சி அளித்து வந்த ஆதரவை விலக்கிக் கொள்வதாக அறிவித்த உடனேயே, காங்கிரஸ் அரசுக்கு சமாஜ்வாடி கட்சி ஆதரவளிப்பதாக அறிவிக்கப்பட்ட உடனேயே என் மீதான வழக்கை சிபிஐ கையில் எடுத்துள்ளது பல சந்தேகங்களை எழுப்புகிறது. சிபிஐயின் நம்பகத்தன்மை மீதே சந்தேகம் எழுகிறது.
இந்த வழக்கின் மீதான விசாரணையை ஜூலை 28ம் தேதியன்றுதான் உச்சநீதிமன்றம் வைத்துள்ளது. ஆனால் அவசரம் அவசரமாக உச்சநீதிமன்றத்ைத சிபிஐ அணுகியதிலிருந்தே, காங்கிரஸும், சமாஜ்வாடியும் கூட்டாக சேர்ந்து கொண்டு எனக்கு எதிராக சிபிஐயை தூண்டி விட்டுள்ளது உறுதியாகிறது.
உச்சநீதிமன்றத்தை அணுகுவது தொடர்பாக ஒரு மூத்த சமாஜ்வாடி கட்சித் தலைவர் வீட்டுக்கு சிபிஐ இயக்குநரே சென்று ஆலோசித்ததாக எனக்கு ஒரு தகவல் உள்ளது.
உச்சநீதிமன்றத்தில் தாக்கல்செய்யப்பட்ட அபிடவிட்டின் நகல்கள் எனது வக்கீல்களுக்கு வழங்கப்படுவதற்கு முன்பாகவே மீடியாக்களுக்கு சிபிஐ வழங்கியுள்ளது என்று கூறினார் மாயாவதி.
காங்கிரஸ் மறுப்பு:
ஆனால் மாயாவதியின் புகார் ஆதராமற்றது என்று காங்கிரஸ் மறுத்துள்ளது. இதுகுறித்து காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் திக்விஜய் சிங் செய்தியாளர்களிடம் கூறுகையில், காங்கிரஸ் கூட்டணி அரசு மாயாவதி மீது வழக்கு தொடரவில்லை. 6 ஆண்டுகளுக்கு முன்பு தொடரப்பட்ட வழக்கு இது.
உச்சநீதிமன்றத்தின் கண்காணிப்பின் கீழ் இந்த வழக்கு விசாரிக்கப்பட்டு வருகிறது. சிபிஐ மூலம் காங்கிரஸ் நிர்ப்பந்தம் கொடுப்பதாக கூறுவது தவறானது. ஆதாரமற்றது. அது காங்கிரஸின் கலாச்சாரமும் அல்ல.
சிபிஐ ஒரு சுதந்திரமான அமைப்பு. அதன் செயல்பாடுகள் தெளிவானது என்றார் திக் விஜய் சிங்.
--












Click it and Unblock the Notifications