அணு ஒப்பந்தம்: தமிழகத்தில் பிரசாரம் செய்ய சோனியா முடிவு!

காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர்கள் கூட்டமும், தொடர்ந்து காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர்கள் கூட்டமும் சோனியா காந்தி இல்லத்தில் நடந்தது. இக்கூட்டத்திற்குப் பின்னர் செய்தித் தொடர்பாளர்கள் குழுத் தலைவர் வீரப்ப மொய்லி செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், அணு சக்தி ஒப்பந்தம் நாட்டு நலனுக்கு உகந்தது. இது இந்தியாவுக்கு அவசியம் தேவை என்ற கருத்தை நாட்டு மக்களிடம் நேரடியாக சென்று விளக்குமாறு காங்கிரஸாருக்கு சோனியா காந்தி அறிவுறுத்தியுள்ளார்.
இதுதவிர ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் சாதனைகளையும் விளக்குமாறு அவர் உத்தரவிட்டுள்ளார்.
நம்பிக்கை வாக்கெடுப்பில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு வெற்றி பெறுவது உறுதி. அரசுக்கு 280 உறுப்பினர்களின் ஆதரவு உள்ளது என்றார் மொய்லி.
11 செய்தித் தொடர்பாளர்கள் நியமனம்:
மக்களிடம் அணு சக்தி ஒப்பந்தம் குறித்து விளக்கும் வகையில் 11 செய்தித் தொடர்பாளர்களை காங்கிரஸ் மேலிடம் தேர்வு செய்துள்ளது.
இந்த 11 பேரும் அணு சக்தி ஒப்பந்தம், ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் சாதனைகள் குறித்து மீடியாக்கள் மூலம் மக்களிடம் செய்திகளை கொண்டு சேர்க்கும் பணியை மேற்கொள்வார்கள்.
தமிழகத்தில் சோனியா நேரடி பிரசாரம்:
இதற்கிடையே, தமிழகத்தில் மாதம் ஒரு முறை நேரடிப்பிரசாரத்தில் ஈடுபட சோனியா காந்தி திட்டமிட்டுள்ளார். லோக்சபா தேர்தலுக்கு முன்பாக குறைந்தது 10 முறையாவது தமிழகம் வர அவர் திட்டமிட்டுள்ளதாக காங்கிரஸ் தரப்பில் கூறப்படுகிறது.
அணு சக்தி ஒப்பந்தம் குறித்தும், ஐக்கிய முற்போக்குக்கூட்டணி அரசின் சாதனைகள் குறித்தும் இந்தப் பிரசாரத்தின்போது சோனியா காந்தி எடுத்துரைக்கவுள்ளார்.












Click it and Unblock the Notifications