பாஜக வலையில் காங். எம்பிக்கள் அம்பரீஷ்-ஜாலப்பா..மேலும் பலர் சிக்கலாம்!

முதலில் காங்கிரசுக்கு எளிதான வெற்றி கிடைக்கும் என கருதப்பட்ட நம்பிக்கை வாக்கெடுப்பு மிகவும் கடுமையான போட்டியாக மாறியுள்ளது.
பல சிறிய கட்சிகள் தங்களை ஆதரிக்கும் என மிதப்பில் இருந்த காங்கிரசுக்கு அதிர்ச்சி தரும் விதமாக ஒவ்வொரு கட்சியாக கை நழுவ ஆரம்பித்துள்ளன. இந் நிலையில், இதுவரை ஆட்சியை கவிழ்ப்பதில் அவ்வளவாக தீவிரம் காட்டாத பாஜக, இப்போது இதில் மிக சீரியசாகவே இறங்கியுள்ளது.
காங்கிரசைச் சேர்ந்த அதிருப்தி எம்பிக்களை வளைக்கும் வேலைகளை அந்தக் கட்சி ஆரம்பித்துவிட்டது. குறிப்பாக கர்நாடகத்தைச் சேர்ந்த காங்கிரஸ் எம்பிக்களுக்கு பாஜக குறி வைத்துள்ளது. இதனால் காங்கிரஸ் கேம்பில் பீதி பரவியுள்ளது.
கர்நாடகத்தில் பாஜக ஆட்சிக்கு வந்தது முதல் பல காங்கிரஸ், மதசார்பற்ற ஜனதா தள எம்எல்ஏக்களும் போட்டி போட்டுக் கொண்டு அந்தக் கட்சியில் சேர ஆரம்பித்துள்ளனர். வருபவர்களுக்கு எல்லாம் அமைச்சர் பதவி தந்து அழகு பார்த்து வருகிறது பாஜக.
இதையடுத்து எம்எல்ஏக்கள் தவிர பல மூத்த காங்கிரஸ்-மதசார்பற்ற ஜனதா தளத் தலைவர்களும், இதில் சில எம்பிக்களும் அடக்கம், பாஜகவுக்கு தாவ தருணம் பார்த்துக் கொண்டுள்ளனர்.
கர்நாடகத்தி்ல் இப்போதுள்ள நிலவரப்படி வரும் மக்களவைத் தேர்தலில் பாஜகவே வெல்லும் என இவர்கள் கருத ஆரம்பித்துள்ளதால், அந்தக் கட்சிக்குத் தாவ இவர்கள் முனைப்பு காட்டி வருகின்றனர்.
இதை அப்படியே தனக்கு சாதகமாக பயன்படுத்து நம்பிக்கை வாக்கெடு்ப்பில் காங்கிரஸை தோற்கடிக்கச் செய்ய கர்நாடக பாஜக தலைவர்கள் முயன்று வருகின்றனர். கர்நாடகத்துக்கான கட்சியின் பொறுப்பாளர் அருண் ஜேட்லியும் இந்த வேலைகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார்.
இந்த முயற்சிகளின் பலனாக அம்பரீசும் ஜாலப்பாவும் பாஜக தரப்புக்கு தாவலாம் எனத் தெரிகிறது. ஜாலப்பாவின் மகனுக்கு வரும் லோக்சபா தேர்தலில் சீட் தருவதாக பாஜக உறுதியளித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
அடுத்த தேர்தலில் பாஜக சார்பில் லோக்சபா தேர்தலில் போட்டியிட சீட் தரப்படும், மத்திய அமைச்சரவையில் இடம், லோக்சபா தேர்தலில் தோற்றால் ராஜ்யசபா எம்பி பதவி-அமைச்சர் பதவி என மேலும் பல காங்கிரஸ் எம்பிக்களிடமும் பாஜக பேரம் பேசி வருகிறது.
இதனால் மேலும் சில காங்கிரஸ் எம்பிக்களும் பாஜகவுக்கு ஆதரவாகத் தாவலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதைத் தடுக்க காங்கிரசும் தீவிரமான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது.
அதே போல அஸ்ஸாமில் காங்கிரஸ் முதல்வர் தருண் கோகோய் மீது கடுப்பில் உள்ள எம்பியான குலாம் ஓஸ்மானியும் காங்கிரசுக்கு எதிராக வாக்களிக்க முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது.
ஏற்கனவே ஹரியாணா முன்னாள் முதல்வர் பஜன் லாலின் மகனான குல்தீ்ப் பிஷ்னோய் அரசுக்கு எதிராக வாக்களிக்கப் போவதாக அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
22ம் தேதி நாடாளுமன்றத்தில் பிரதமர் மன்மோகன் சிங் நம்பிக்கை வாக்கெடுப்பு கோரும் நிலையில் அதிவேக மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன. இந்த 6 நாட்களில் மேலும் பல அரசியல் மாற்றங்கள் நிகழலாம்.












Click it and Unblock the Notifications