எம்.பிக்களை திரட்டுவதில் அரசு திணறல் - வலுவடையும் எதிர்க்கட்சிகள்!
டெல்லி: அரசுக்கு ஆதரவு தரும் எம்.பிக்களை திரட்டுவதில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு கடுமையாக திணறி வருகிறது. மாறாக, எதிர்க்கட்சிகள் தரப்பில் ஆதரவு கூடிக் கொண்டே போகிறது. இதனால் அரசு கவிழுமோ என்ற கவலையில் காங்கிரஸ் ஆழ்ந்துள்ளது.
இன்னும் 3 நாட்களில் லோக்சபாவில் நடக்கப் போகும் நம்பிக்கை வாக்கெடுப்பு, அரசுக்கு முடிவுரை எழுதுமா அல்லது அணு சக்தி ஒப்பந்தத்திற்கு முன்னுரை எழுதுமா என்ற எதிர்பார்ப்பில், டெல்லி அரசியல் வட்டாரத்தில் தினசரி ஒரு பரபரப்பு நிகழ்வு நடந்து கொண்டிருக்கிறது.
ஆதரவு எம்.பிக்களைத் திரட்டுவதில் காங்கிரஸ் தரப்பும், எதிர்க்கட்சிகள் தரப்பும் படு மும்முரமாக உள்ளன. ஆரம்பத்தில் காங்கிரஸ்தான் படு தீவிரமாக எம்.பிக்களை இழுத்துக் கொண்டிருந்தது. ஆனால் இப்போது எதிர்த் தரப்பினரும் படு வேகமாக ஆட்களை பிடித்துக் கொண்டிருக்கிறார்கள்.
சிறு கட்சிகளை குறி வைத்து ஆளுங் கூட்டணியும், எதிர்க்கட்சிகளும் இயங்குவதால் 2 எம்.பிக்கள் முதல் 5 எம்.பிக்கள் வரை வைத்திருக்கும் கட்சிகளுக்கு ஏக கிராக்கி ஏற்பட்டுள்ளது. இவர்களை போட்டி போட்டுக் கொண்டு இரு தரப்பினரும் இழுத்துக் கொண்டுள்ளனர்.
அதேசமயம், சமாஜ்வாடிக் கட்சி கலகலத்துக் கிடக்கிறது. 39 எம்.பிக்களைக் கொண்டுள்ள அக்கட்சிக்கு இப்போதைக்கு 16 பேர் மட்டுமே ஆதரவான நிலையில் உள்ளனர். இதனால் காங்கிரஸ் பெரும் கவலை அடைந்துள்ளது.
அதேபோல காங்கிரஸ் கட்சிக்குள்ளும் ஆங்காங்கே அதிருப்தி வெடிக்க ஆரம்பித்துள்ளது. கர்நாடகத்தில் ஜாலப்பாவும், அம்பரீஷும் மாற்றி ஓட்டுப் போட தயாராகி விட்டனர். இப்போது கர்னால் எம்.பி. அரவிந்த் சர்மாவும் காங்கிரஸுக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தியுள்ளார். மாயாவதியை குறி வைத்து காங்கிரஸ் இயங்குவது தவறு என அவர்குற்றம் சாட்டியுள்ளார்.
இவர்கள் தவிர ஹரியாணா காங். எம்.பி. குல்தீப் சிங் பிஷ்னாய், அஸ்ஸாம் காங். எம்.பி. குலாம் ஒஸ்மானி ஆகியோரும் அரசுக்கு எதிராக கருத்து தெரிவித்து வருகின்றனர். இதனால் காங்கிரஸ் வட்டாரம் கிலியடித்துக் காணப்படுகிறது.
இதுவரை சேர்த்து வைத்திருந்த எம்.பிக்கள் ஒரு பக்கம் கழன்று போய்க் கொண்டிருக்கையில், மறுபக்கம் கற்பனை செய்து கூட பார்க்க முடியாத அளவுக்கு கோரிக்கைகளுடன் பல கட்சிகள் அரசிடம் வருவதால் என்ன செய்வது என்று தெரியாமல் விழி பிதுங்கிக் காணப்படுகிறது காங்கிரஸ்.
ஆதரவு தருவதாக இதுவரை அஜீத் சிங்கோ, சிபு சோரனோ, தேவெ கெளடாவோ முறைப்படி வெளிப்படையாக அறிவிக்கவில்லை. பல்வேறு பேரங்களில் அவர்கள் ஈடுபட்டுள்ளனர். அவை நிறைவேறினால்தான் ஆதரவைத் தெரிவிப்பார்கள்.
கெளடாவிடம் 3 எம்.பிக்கள் உள்ளனர். இவர்கள், 3 பேரும் அரசுக்கு எதிராக வாக்களிப்பார்கள் என அக்கட்சியின் மூத்த தலைவரான வீரேந்திர குமார் கூறியுள்ளது குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு கெளடாவின் ஆசி இருப்பதாகவும் அவர் கூறியுள்ளதால் காங்கிரஸ் கடுப்படைந்துள்ளது.
அதேசமயம், எதிர்க்கட்சிகள் தரப்பில் எம்.பிக்களின் பலம் கூடிக் கொண்டு போகிறது. தற்போதைய நிலவரப்படி அரசுத் தரப்பை விட சற்று கூடுதலான எம்.பிக்களை எதிர்க்கட்சிகள் பெற்றுள்ளன என்பது காங்கிரஸ் வட்டாரத்திற்கு பெரும்கவலை தரும் அம்சமாகும்.
நேற்றைய நிலவரப்படி யாருக்கு, எத்தனை பேர் ஆதரவு என்ற விவரம்:
ஐக்கிய முற்போக்குக் கூட்டணி
காங். - 153
ஆர்.ஜே.டி. - 17
திமுக - 16
தேசியவாத காங்கிரஸ் - 11
பாமக - 6
ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா - 5
சமாஜ்வாடி - 26
பிறர் - 29
மொத்தம் - 263
எதிர்க்கட்சிகள்
பாஜக - 130
இடதுசாரிகள் - 53
பகுஜன் சமாஜ் - 17
சிவசேனா - 12
பிஜூ ஜனதாதளம் - 11
ஐக்கிய ஜனதாதளம் - 8
அகாலிதளம் - 8
அரசுக்கு ஆதரவு தெரிவிக்காத மற்றவர்கள் - 25
மொத்தம் 264
கெளடா உள்ளிட்ட இதுவரை முடிவெடுக்காமல் இருப்பவர்கள் - 16
இந்த 16 பேரின் கையில்தான் தற்போது மத்திய அரசு ஊசலாடிக் கொண்டிருக்கிறது.












Click it and Unblock the Notifications