நாளை நம்பிக்கை தீர்மானம் தாக்கல் - தப்புவாரா மன்மோகன் சிங்?

அணு சக்தி ஒப்பந்தம் தொடர்பான விவகாரத்தில், அரசுக்கு அளித்து வந்த ஆதரவை இடதுசாரி கட்சிகள் வாபஸ் பெற்றதைத் தொடர்ந்து மன்மோகன் சிங் அரசு பெரும்பான்மை பலத்தை இழந்தது. இதையடுத்து குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீலை சந்தித்த பிரதமர், லோக்சபாவில் நம்பிக்கை வாக்கு கோர முடிவு செய்திருப்பதாக தெரிவித்தார்.
இதையடுத்து 21ம் தேதி நாடாளுமன்ற லோக்சபா சிறப்புக் கூட்டம் கூட்டப்படும், 22ம் தேதி நம்பிக்கை தீர்மானம் மீது வாக்கெடுப்பு நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
அதன்படி நாளை நம்பிக்கை கோரும் தீர்மானத்தை பிரதமர் மன்மோகன் சிங் லோக்சபாவில் தாக்கல் செய்து பேசுகிறார். இந்த அவை அமைச்சரவை மீது நம்பிக்கை வைத்துள்ளது என்ற ஒரு வரி தீர்மானத்தை பிரதமர் தாக்கல் செய்கிறார்.
அப்போது அணு சக்தி ஒப்பந்தம் மட்டுமல்லாமல் தனது அரசின் சாதனைகளையும் பிரதமர் விளக்குவார் என்று தெரிகிறது. பின்னர் இதன் மீது விவாதம் நடைபெறும்.
இதன் முடிவில் 22ம் தேதி வாக்கெடுப்பு நடைபெறும். அன்றைய தினம் மாலையில் வாக்கெடுப்பு நடைபெறவுள்ளது.
மன்மோகன் சிங்தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு பதவிக்கு வந்த நான்கரை ஆண்டு காலத்தில் கொண்டு வரப்படும் முதல் நம்பிக்கை கோரும் தீர்மானம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
நம்பிக்கை தீர்மானம் மீதான வாக்கெடுப்பு தூர்தர்ஷன் தொலைக்காட்சியில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நம்பிக்ைக வாக்கெடுப்பில் வெற்றி பெறுவதற்காக ஆளுங்கூட்டணியும், தோற்கடிக்க வேண்டும் என்பதற்காக இடதுசாரிகள் தலைமையிலான கூட்டணியும், தேசிய ஜனநாயக கூட்டணியும் கடுமையாக முயன்று வருகின்றன.
இரு தரப்பிலும் எம்.பிக்களை இழுக்கும் பணி படு வேகமாக நடந்து வந்தது. ஆனால் கடைசி நாட்களில் ஆளுங்கூட்டணிக்கு பாதகமாக அம்சங்கள் அரங்கேறியுள்ளன.
தேவெ கெளடா, அஜீத் சிங், டி.ஆர்.எஸ். உள்ளிட்ட முக்கிய கட்சிகள் சில காங்கிரஸை கைவிட்டு விட்டு விட்டன. இன்னும் 10 எம்.பிக்களின் ஆதரவு தேவைப்படும் நிலையில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி உள்ளது.
எனவே சுயேச்சைகள் மற்றும் இன்னும் முடிவெடுக்காமல் இருக்கும் ஓரிரு கட்சிகளின் தயவை நம்பும் நிலையில் காங்கிரஸ் கூட்டணி அரசு உள்ளது. கடைசி நேரத்தில் அவர்களை இழுத்து விடலாம் என்ற நம்பிக்கையில் காங்கிரஸ் உள்ளது.
மறுபக்கம், இடதுசாரிகள், மூன்றாவது அணி, பகுஜன் சமாஜ், மதச்சார்பற்ற ஜனதாதளம், ராஷ்டிரிய லோக்தளம், தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி ஆகியவை இணைந்த எதிர்த் தரப்பு அணி புத்துணர்ச்சியுடன், அரசை வீழ்த்தியே தீருவோம் என்ற உற்சாகத்தில் காணப்படுகிறது. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக்கூட்டணியும், அரசு வீழ்வது உறுதி என்ற நம்பிக்கையுடன் உள்ளது.
இத்தனை இடர்களைத் தாண்டி மன்மோகன் சிங் அரசு நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெறுமா அல்லது கவிழுமா என்பது மில்லியன்டாலர் கேள்வியாக உருவெடுத்துள்ளது.












Click it and Unblock the Notifications